Menu

இணுவைச் சிவகாமி அம்மன் ஆலயம்

திருக்கோயில் எங்கணும் நிறைந்துள்ள யாழப்பாணக் குடாநாட்டின் இணுவையம் பதியில் அமர்ந்திருந்து அருள்பாலித்து வருபவர் இணுவைச் சிவகாமி அம்மன். யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று.

யாழ்ப்பாணத்து அரசர்கள் தம் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு ஆட்சித் தலைவரை நியமித்தனர். இணுவையூருக்கு, திருக்கோவலூர் பேராயிரவன் தலைவன் ஆயினான். இவன் சிதம்பரத்திலிருந்து சிவகாமியம்மை திருவுருவத்தை வரவழைத்துத் தான் வாழ்ந்த இடத்தில் இச்சிவகாமியம்மை ஆலயத்தை அமைத்தான் எனவும் அவ்விடம் அதனால் சிதம்பர வளவு என அழைக்கப்பட்டதெனவும் செவிவழிச் செய்திகள் சொல்கின்றன.

பேராயிரவன் பின் இப்பகுதிக்கு ஆட்சித்தலைவனாயிருந்த காலிங்கராயன் நாள்தோறும் சிவகமியம்மையை வழிபட்டே ஆட்சிக் கடைமைகளை மேற்கொண்டான் எனவும், அவன் மகன் கைலாயநாதன் உலாவின்போது தன்முன்பாய் சிவகாமியம்மை திருவுருவை தேரில் பவனிவரச் செய்தான் எனவும் பஞ்சவன்னத் தூது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏராளமான திருக்கோயில்களை இடித்தளித்த போர்த்துக்கேயர் கொடுங்கோலாட்சி யாழப்பாணத்தில் இடம்பெற்றபோது இணுவைச் சிவகாமியம்மன் ஆலயமும் அவர்களினால் இடித்தளிக்கப்பட்டது. ஒல்லாந்தர் ஆட்சியில் இக்கோவிலில் வழிபாடு மீளவும் தொடங்கியது. அக்காலத்தே தொம்பு எழுதும் பணியில் இருந்த இணுவைச் சின்னத்தம்பிப் புலவர் சிவகாமி அம்மையை நாளும் வழிபாடு செய்தவர். புலவரை ஒல்லாந்த ஆட்சியாளர் தவறான குற்றச்சாட்டொன்றினாலே சிறையிலிட்டபோது அவர் சிவகாமி அம்மை அருளாலே சிறைமீண்டதால் இத்தலத்தின் பெருமை எங்கும் பரவலாயிற்று. சின்னத்தம்பிப் புலவர் இணுவை சிவகாமி அம்மை மீது சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை தமிழ் என்பனவற்றையும் பாடியுள்ளார். தான் அம்மையின் அருளினாலே சிறை மீண்டதை புலவர் சிறை நீக்கு பதிகமாக பாடியுள்ளார்.

இக்கோயிலின் அருகே சிறந்த நாடக அரங்கு ஒன்றும் ஒல்லாந்தர் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தே அமைந்திருந்தது. இதனால் இத்தலம் சமயத்தை மட்டுமன்றி தமிழையும் வளர்த்தலில் முன்னின்றது. இத்திருத்தலம் சிறந்த தெய்வச் சூழலில் அமைந்துள்ளது. இணுவிற்பதியின் பண்டைய ஆட்சியாளர்கள் தம் வீரத்திற்காக வழிபட்ட வைரவர் – பத்திரகாளி கோயில் இவ்வாலயத்தின் மேற்கு வீதியில் அமைந்துள்ளது. இத்திருத்தலத்திற்கு கிழக்கில் சோழர் காலத்தைய அருள்மிகு காரைக்காற் சிவன்கோயில் அமைந்துள்ளது. மேற்கில் பெருஞ்சித்தராய் விளங்கிய பெரிய சந்நியாசியாரின் அடக்கத் திருத்தலம் உள்ளது. வடமேற்கில் இப்பகுதியை ஆண்ட பண்டைய ஆட்சியாளர் ஒருவருக்கு அமைந்த இளந்தாரி கோயிலும் உள்ளது.

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இவ்வாலயப் புனரமைப்பு பெருமளவில் நடைபெற்றது. கோயிற் கட்டடங்கள் பலவும் திருத்தி அமைக்கப்பட்டன. திருத்தொண்டகள் செய்வதில் ஊரவர்கள் பலரும் ஈடுபட்டனர். உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும் வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைக்கப்பட்டன.

நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. ஆண்டுத்திருவிழா, ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை என்பன மிகச்சிறப்பாய் ஆலயத்தே கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆண்டுத்திருவிழா பங்குனி மாதத்தில் பன்னிரு நாள் நடைபெற்று வருகின்றது. உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் நடைபெறும். மகேசுவர பூசையும் நடைபெறும். பகல் சங்காபிடேகத்தோடு நடைபெறும் ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழாவும் மிகச்சிறப்பானது.

நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் நடைபெறும் மகிடாசுர சங்கார விழாவும், பத்தாம்நாள் மானம்பூ விழாவும் இத்திருத்தலத்திற்கு சிறப்புத் தருவன. புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.

இணுவைச் சிவகாமி அம்மன் மீது புலவர் க.சிற்றம்பலம் அவர்கள் இடர்களையும் பதிகமும் திருவருக்க மாலையும் இரட்டை மணிமாலையும் பாடியிருக்கின்றார். செ.சிவசுப்பிரமணியம் என்பாரும் ஒரு இரட்டை மணிமாலை பாடியிருக்கின்றார்கள்.

சங்கந் தழைக்க அருள்செய்யுந் தலைவீ எனைப்போ லித்தலத்திற்
பங்கப் படுமா னிடர்க்கருள்செய் பரையே யுன்னை நிதம்பாடிப்
பொங்கிச் சிந்தை மிகக்கலங்கிக் கவலும் அடியா ரிடர்நீங்கச்
சிங்க மிசையே வருமிணுவைச் சிவகாம வல்லியுனக் கடைக்கலமே. 1

என்று பண்டைய யாழ்ப்பாணத்து அரசர்களும் ஆட்சியாளர்களும், இணைவைச் சின்னத்தம்பிப் புலவரும் மற்றும் இணுவைப் பதியோரும் காலந்தோறும் வழிபட்டு பேறடைந்த இணுவைச் சிவகாமி அம்மையை நாமும் வழிபட்டு பேறடைவோம்.

  1. சிவகாமியம்மை துதி – இணுவைச் சின்னத்தம்பிப் புலவர்.

ஆலய புகைப்படங்கள்