Menu

கோண்டாவில் வல்லீபுரநாதர் ஆலயம்

ந்து மதத்தின் பெரும் பிரிவுகளில் ஒன்றான வைணவ வழிபாட்டுக்கென யாழ்ப்பாணக்குடாநாடெங்கும் விஷ்ணு ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றில் யாழ்ப்பாணத்து கோண்டாவில் கிழக்கில் அமைந்திருக்கும் வல்லீபுரநாதர் ஆலயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

புகழ்பெற்ற இவ்வாலயத்தில் ஶ்ரீவல்லீபுரநாதர் ஶ்ரீதேவி பூதேவி சமேதரராக நின்ற கோலத்தில் வரதராஜமூர்த்தமாக நின்று அருள்பாலிக்கின்றார். ஏறத்தாள முந்நூறு ஆண்டுகளின் முன்னர் ஒரு மடாலயமாக இவ்வாலயம் உருவாக்கப்பட்டதாக கூறுவர். நீண்ட காலமாக சிறிது சிறிதாக வளர்ச்சியடைந்த இவ்வாலயத்தின் முதலாவது கும்பாபிடேகம் 1981ம் ஆண்டு தை மாத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் இவ்வாலயம் அமைந்த பிரதேசத்தை சேர்ந்த காணியையும் அதனைச்சுழவுள்ள காணிகளையும் அதன் உரிமையாளர்கள் இவ்வாலயத்திற்கே அன்பளித்தனர். இதைத்தொடர்ந்து ஊர் மக்கள் ஆலயத்தை கற்கோயிலாக உருவாக்கி இரண்டாவது புனருத்தாரண மகா கும்பாபிடேகத்தை 1995ம் ஆண்டு தை மாதத்தில் நடாத்தினர். இத்திவ்விய பதியின் மூன்றாவது கும்பாபிடேகம் 2007ம் வருடம் தை மாதம் இடம்பெற்றது.

ஆலய பரிவார மூர்த்திகள்

தும்பிக்கையாழ்வார்
பிரணவ சொரூபியான விநாயகப்பெருமான் தும்பிக்கையாழ்வார் என்ற நாமத்தோடு ஆலயத்தின் ஸ்நபன மண்டபத்தின் வலப்புறமாக சிறுகோவிலில் அமைந்துள்ளார்.

அநந்த சயனமூர்த்தி
ஆலய மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய கோவிலாக திருமூடி மேற்குப் புறமாகவும், திருப்பாதங்கள் கிழக்கு நோக்கியும் தெற்கு நோக்கிய சயனகோலத்தில் திருதொப்பூழ் கொடியில் செந்தாமரையில் வேதநாயகன் வீற்றிருக்க, பூதேவி திருமூடி பக்கமாகவும், ஸ்ரீதேவியான மகாலட்சுமி திருப்பாதங்களை வருடிய வண்ணமாக அடியவர்களுக்கு அருளமுதை வழங்குகின்ற வள்ளலாக அறிதுயில் கொள்ளும் காட்சியாக விக்கிரகம் அமைந்துள்ளது.

கெருட மண்டபம்
ஸ்ரீமத் நாராயணப்பெருமானின் ஊர்தியாக சொல்லப்படுபவர் கெருடாழ்வார். கெருடப்பறவையாக இருந்தாலும், இறைவன் மீது பக்தியில் ஆழ்ந்து சேவை வழங்குவதால் கெருடாழ்வார் என போற்றப்படுகின்றார். இக்கருடாழ்வாரின் சிறு ஆலயம் பலிபீடத்திற்கு முன் கருப்பக்கிரகத்தை நோக்கிய வண்ணமாக மூலமூர்த்தியை வழிபாடு செய்யும் தோற்றமாக காணப்படுகின்றார்.

பன்னிரு ஆழ்வார் திருமண்டபம்
ஆலயத்தின் உட்பிரகாரத்தை வலம்வரும்போது தென்மேற்கு பகுதியில் பன்னிரு ஆழ்வார்களுமாய பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், மதுரகவியாழ்வார் என்போர் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றனர்.

தசாவதார மூர்த்திகள் சபாமண்டபம்
மச்சம், கூர்மம், வராஹம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், இராமன், பலராமன், கண்ணன் கல்கி ஆகிய அவதாரங்களை பிரதிபலிக்கும் வகையில் விக்கிரகங்கள் அமையப்பெற்று சபாமண்டபத்தில் காட்சி தருகின்றன.

மகா இலட்சுமி ஆலயம்
ஆலய உட்பிரகாரத்தை வலம்வரும்போது தென்மேற்கு மூலையில் மகா இலட்சுமி அருட்பிரகாரத்துடன் பக்தர்களுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை வழங்குகின்ற வகையில் அஷ்ட இலட்சுமிகளின் உருவ அமைவுகள் தோற்றப்பொலிவோடு காட்சி தருவதாக அமைந்துள்ளன.

சந்தான கோபாலர் ஆலயம்
சந்தான விருத்தியை கொடுக்கும் ஒரு காருண்ய மூர்த்தியாக சந்தான கோபாலர் நாகத்தில் சிறு குழந்தையாக இங்கே காட்சி தருகின்றார்.

வேணுகோபாலர் ஆலயம்
கிருஷ்ணா அவாதாரம் எடுத்து ஜீவராசிகளுக்கெலாம் அருள்செய்த வேணுகோபாலன் பீதாம்பரம் உடுத்து புல்லாங்குழலோடு இங்கு காட்சி தருகின்றான்.

இராமர் ஆலயம்
தசாவதாரங்களிலே சிறப்பானதாய் கருதப்படம் இராமாவதார மூர்த்தியாகிய இராமர் சீதா இலட்சுமணன் சகிதமாக ஆஞ்னேய சேவையோடு இங்கிருந்து அருள்பாலிக்கின்றார்கள்.

ஆண்டாள் கோவில்
ஆலயத்தின் உட்பிரகாரத்தில் வடமேற்கு மூலையில் பூதேவியின் மூர்த்தமெனச்சொல்லப்படும் சூடிக்கொடுத்த நாச்சியாரான ஆண்டாள் அமர்ந்திருந்து அருள்பாலிக்கின்றார்.

இவற்றைவிடவும் இராமானுஜர் ஆலயம், நவக்கிரகமண்டபம், ஆஞ்னேயர் ஆலயம் என்பனவும் அமைந்துள்ளன.

மகோற்சவங்கள்.

இவ்வாலயத்தின் கண்ணே நித்திய நைமித்தயபூசைகளோடு திருப்பாவை நோன்புவிழா, மாகா இலட்சுமி உற்சவம், சந்தான கோபாலர் உற்சவம், வேணுகோபாலர் உற்சவம், தசாவதார உற்சவம், இராமானுஜர் உற்சவம், சீதாராம உற்சவம், அனந்தசயன உற்சவம் மற்றும் ஆழ்வார்களுக்குரிய பூசைகளும் தவறாது ஆண்டுதோறும் நடைபெற்று வருகின்றன.

மூலவரான வல்லீபுரநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராய் வரதராஜ மூர்த்தமாய்நின்று மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ஆலய புகைப்படங்கள்