Menu

இடைக்காடு ஸ்ரீ பெரியதம்பிரான் கோயில்

அச்சுவேலியைச் சேர்ந்த இடைக்காடு என்னும் கிராமத்தில் காக்கைவளவு என்னும் இடத்தில் கோயில் கொண்டு இருக்கிறார், எங்கள் பெரியதம்பிரான். வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த கிராமம்தான் இடைக்காடு. அன்பும் பண்பும் மிக்க அடியார்கள் இருக்கும் இந்த இடத்தில் கோயில் கொண்ட எம் பெரியதம்பிரான் என்பவர், அந்தப் பரம் பொருளாகிய சிவபெருமான்தான். இக் கோயிலின் மேற்க்குப் பக்கத்திலும், கிழக்குப் பக்கத்திலும் சிறிது தூரத்தில் ஒவ்
வோர் பெரியதம்பிரான் கோயில் உண்டு. எங்கள் பெரியதம்பிரான் நடுநாயகமாக விளங்குகிறார்.

நாயன்மார் பாடிய தென் இந்திய வரலாற்றுக் கோயில்கள் போல் எங்கள் கோயில்கள் வரலாறு படைக்கவில்லை. எனினும் எங்கள் கோயில்கள் குல தெய்வங்கள் என்ற வகையில் மிகச் சிறப்புப்பெறுகின்றன. இக்கோயில் எவ்வளவு ஆண்டுகளுக்கு முற்பட்டதென்பது சரியாகக் கணக்கிட முடியவில்லை. இருந்தாலும் பழைமை வாய்ந்த கோயில்தான் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. முதியோர் கதைகளில் இருந்து சில முக்கியமான விடயங்களை நாங்கள் அறிந்து கொண்டோம். இந்த இடத்தில் பல வருடங்களுக்கு முன் மிக அகலமான சுண்ணாம்புச் சுவர்களைக் கொண்ட பழைய கோயில் இருந்தது என்றும், அப்பொழுது பிராமணர் பூசை செய்தார்கள் என்றும் புராணப் படிப்புகளும் விசேட பூசைகளும் நடைபெற்றன என்றும் பேசிக்கொண்டார்கள். பல ஆண்டுகளுக்குப்பின் அக்கட்டடம் விழுந்து விட்டது. அது 1945ம் ஆண்டு. அப்பொழுது அடியார்கள் ஒன்று சேர்ந்து சீமெந்தால் ஒரு கோயில் கட்டினார்கள். அக்கோயிலுக்கு 2
மண்டபமும் ஒரு வெளிக்கொட்டகையும் உண்டு. மடைப்பள்ளியும் அமைக்கப்பட்டது. இது 1946ம் ஆண்டு நடைபெற்றது. அந்த ஆண்டு வைகாசி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

அக்கும்பாபபிஷேக தினம் இப்பொழுதும் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னே மூலஸ்தானத்தில் ஒரு பொழிந்த கல்தான் சுவாமியின் வழிபாடாக இருந்தது. பின் சூலம் வைக்கப்பட்டது. 1980ம் ஆண்டு சந்திரசேகர், சிவகாமி அம்மை என்ற ஜம்பொன் எழுந்தருளி விக்கிரகள்களை வைக்கப்பட்டது. பின் சிவனின் பரிவாரங்கள் என்ற வகையில் பிள்ளையார், கண்ணன், பலவேல்கள், நாகதம்பிரான், வைரவர், என்ற விக்கிரகங்கள் வழிபாட்டில் இருந்தன. 1977ம் ஆண்டு உயர்ந்த கட்டம் அமைத்து பெரிய அசையா மணி ஏற்றப்பட்டது. ஊரில் உள்ள சில அடியார்கள் 1977ம் ஆண்டு வரையும் பூசகர்களாக இருந்து பூசை செய்தார்கள். 1979ம் ஆண்டு தொடக்கம் கோயிலில் விசேட நிகழ்வுகள் நடைபெற்றன. ஓவ்வொரு வைகாசி மாதமும் வரும் கும்பாபிஷேக தினத்தில் சங்காபிஷேகமும்இ அன்னதானமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரவில் பல கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தவத்திரு அருட்கவி சீ.வினாசித்தம்பிப் புலவரின் கதாப்பிரசங்கம், வில்லுப்பாட்டு, மேளக்கச்சேரி, வேலானந்தத்தின் நாட்டிய நாடகம் எனப்பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பகலில் அபிஷேகத்தையும் அன்னதானத்தையும் மிகச் சிறப்பாக கொண்டாடிய அடியார்கள் ஆனந்த
மேலீட்டால் இரவில் கலை நிகழ்ச்சிகளை நடாத்தி பலரையும் பரவசப்படுத்தினார்கள். அன்று சுவாமி மணவாளக்கோலத்துடன் வெளியில் காட்சி தருவார். திருஅருட்கவி சீ.வினாசித்தம்பிப்புலவர் அவர்களின் பக்திப் பரவசமான கதாப்பிரசங்கங்கள் சுமார் 10 வருடங்கள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றன. அத்துடன் 1979ம் ஆண்டு தொடக்கம் தினசரி காலை மாலை பூசைகள் நடைபெற்றன. ஓவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும் இரவு பொங்கல் நடைபெறும். அத்துடன் பஜனையும் நடைபெறும்.

கோயிலின் கிணறு வெட்டிய கிணறு அல்ல. தோண்டப்பட்ட கிணறு. மேற்பக்கம் தாமரை மொட்டுப் போன்ற தோற்றம்.
கிணற்றின் அடிப்பக்கமும் அதே தாமரை மொட்டுப் போன்ற தோற்றம் தான் கிணற்றின் அடியில் நடுப்பக்கமாக ஒரு அடி விட்டமான அழகான வட்டக் கிடங்கு ஆழமானது, வற்றாது. இது இடியேறு விழுந்த கிடங்காய் இருக்கலாம் என்று முதியோர் கூறுகின்றனர். முன்னோர் மண் போட்டு தூர்த்து இருக்கிறார்கள். மேற்படி விடயங்களும் கோயிலின் சிறப்பு அம்சங்களே.

2001ம் ஆண்டில் நாட்டில் ஓரளவு அமைதி நிலை ஏற்பட்டது. கோயில் பரிபாலன சபையாரும் அடியார்களும் சேர்ந்து எம்பெருமானுக்கு சிறப்பு அம்சமுள்ள கோயில் கட்டத் தீர்மானித்தனர். ஆகவே 2001ம் ஆண்டு வைகாசி மாதம் கும்பாபிஷேக தினத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. 7 மாதத்தில் கோயில் கட்டி முடிக்கப்பட்டது. 4 மண்டபங்களைக் கொண்ட இக்கோயிலைக் கட்டுவதற்க்கு பரிபாலன சபையார் கூடிய முயற்சி எடுத்து ஊரவர்களிடமிருந்தும் வெளிநாட்டு நண்பர்களிடமிருந்தும் நன் கொடைகளைப் பெற்று சிற்ப சாஸ்திர முறைப்படி இந்த அழகான கோயிலை கட்டி முடித்தார்கள். 1945ம் ஆண்டிலும் அதன் பிற்காலத்திலும் சில அடியார்கள் கோயிலுக்கு நன்கொடையாக பக்கங்களில் காணிகளை வழங்கினார்கள். அதனால் கோயில் உள்ள காணி 10 பரப்பாக ஆகியது. ஒரு சிறு கிராமத்தில் இப்படி ஒரு 10 பரப்பில் கோயில் அமைய நேர்ந்ததும் பிரானின் அருட்செயலே. அத்துடன் அயலில் உள்ள அன்பர் ஒருவர் கோயிலுக்கு வாகனங்கள் போகக்கூடிய பாதையை ஆக்கி உதவி செய்தார். வருடா வருடம் கும்பாபிஷேக மணவாளக்கோலத்தினமான வைகாசி மாதத்தில் தென்மேற்க்கில் வேப்பமரத்துடன் நிற்க்கும் கொன்றைமரம் பூத்துக்குலுங்கி இருப்பது கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும் கிழக்கில் உள்ள பிரமாண்டமான வில்வமரமும் பக்கத்தில் உள்ள பாரிய அரசமரமும் தெய்வாம்சத்தை எடுத்துக் காட்டுகின்றன.

எங்கள் வாழ்க்கையில் பெரிய தம்பிரான் அருள் நிறையக் கிடைத்தது. தவத்திரு. அருட்கவி வினாசித்தம்பிப்புலவர் இங்கு பல அரிய கதாப்பிரசங்கங்கள் செய்ததோடு கோயிற் பேரில் பல அருட்பாக்களும் பாடி இருக்கிறார். அப்பெரியாரின் ஆசியும் எங்களுக்கு நிறைய உண்டு. இவ்வளவு புதுமையும் பெருமையும் உள்ள எம் பெரியதம்பிரானுக்கு 17.05.2002
வெள்ளிக்கிழமை ஆகம விதிப்படி மகா கும்பாபிஷேகமும் அதைத் தொடர்ந்து 12 நாட்களுக்கு மண்டலாபிஷேகமும் சங்காபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றன.

தீராத வினைகள் தீர்க்கும் எங்கள் பெரியதம்பிரான் மாறாதவினைகள் மாற்றும் எங்கள் பெரியதம்பிரான் புதுமையுள்ள எங்கள் பெரியதம்பிரான் பெருமையுள்ள எங்கள் பெரியதம்பிரான் என்று தினமும் சொல்லி வணங்கி பேரின்பம் அடைவோமாக.

[box type=info]கும்பாபிஷேகமலர்: 17.05.2002[/box]

ஆலய புகைப்படங்கள்