Menu

பன்னாலை திருசீச்சரம் பாலசுப்பிரமணியர் ஆலயம்

ன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய முதற் பூசகர் என்று கருதப்படும் ஸ்ரீபிள்ளையார்பட்டரின் மூத்த புதல்வர் சிவஸ்ரீ முத்துசாமிக்குருக்களாலே இந்த ஆலயம் தாபிக்கப்பட்டது. 1916இல் ஆரம்பிக்கப்பட்ட திருப்பணி வேலைகள் 1918இல் இந்தியாவிலிருந்து கொண்டுவந்த விக்கிரகங்களை பிரதிட்டை செய்து நிறைவுசெய்யப்பட்டு கும்பாபிடேகம் நடாத்தப்பெற்றது. கொழும்பு நாச்சியப்பச்செட்டியார் இவ்வாலயம் கட்டுவதற்கு பெரும் பொருளுதவி செய்தவர்களில் ஒருவராவார். தெல்லிப்பழை தென்மேற்கில் பன்னாலைக்கிராமத்தின் மேற்கில் திருவாலங்காடு என்னுங் குறிச்சியில் நான்னாச்சியோலை என்னும் நிலத்தில் இவ்வாலயம் அமைந்திருக்கின்றது.

இந்த ஆலயத்தின் அமைப்பு முறை புதுமையானது. மற்றைய ஆலயங்களின் அமைப்பு முறையிலிருந்து பலவழிகளில் வேறுபாடுகளை அவதானிக்க முடிகின்றது. கர்ப்பக்கிருகம், அர்த்தமண்டபம் இரண்டும் வைரக்கற்களால் கட்டப்பட்டது. அந்த மண்டபங்களின் அமைவிடம் நிலமட்டத்திலிருந்து சுமார் இரண்டு மீற்றர் உயரத்தில் ஆரம்பமாகின்றது. அந்த உயரத்தில் இருமண்டபங்களையும் சுற்றிவரக்கூடிய வீதியொன்றுமுண்டு. அந்த வீதியில் இரு மண்டபச் சுவர்களுடன் பலிபீடங்கள் ஒவ்வோர் சுவர் அந்தத்திலும் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பானது. கர்ப்பக்கிரக முன்சுவர் ஒரு முழு வெள்ளை வைரக்கல்லாலானது. வாயிலும் அதே கல்லில் கொத்து வேலைசெய்து தோண்டி உண்டாக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபத்தையும் மகாமண்டபத்தையும் சிறியதொரு வாயிலமைப்பு தொடர்புபடுத்துகின்றது. மகாமண்டபம் முழுமையாகப் படிபோன்று நீளப்பக்கம் நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. வெள்ளை வைரக்கல் படிஅமைப்புக்கு பயன்பட்டுள்ளது. மகாமண்டபத்தின் வடமேற்கில் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட அற்புத சிவலிங்கப்பெருமானை தரிசிக்க முடியும். சிவலிங்க மூர்த்தியின் பின்னே சுவர்ப்படியில் ஐம்பொன் மூர்த்திகளை கண்டு வழிபட முடிகின்றது. தென்மேற்கில் விநாயக்பெருமானைக்கண் டின்புற முடியும். மண்டபத்தின் நடுவே ஐம்பத்திரண்டு சுடர்களையுடைய திருவாசியுடன் ஆனந்த நடராசர் தெற்கு நோக்கி நடமிட பக்கலில் சிவகாமி அம்மையார் பார்த்து நிற்கின்றார். இந்த அமைப்பிற்கு கிழக்கே பிரதான வாயிலுக்கண்மையாகக் கொடிக்கம்பமும் பலிபீடமும், மயூரமும் (நந்தியிடத்து) அமைந்துள்ளன. கொடிமரத்தின் முன்னே மூலாதார கணபதி வீற்றிருக்கின்றார். கொடித்தம்பத்தின் வடக்குப்புறம் நவக்கிரக பிரதிட்டை நடைபெற்றுள்ளது. சிவலிங்கப்பெருமானுக்கு வடக்குப்புறம் திருமஞ்சனக்கிணறுண்டு. பிரதான வாயிலின் தென்புறத்தே கண்டாமணி உண்டு. தென்கிழக்கில் குருமார் தங்கும் அறை, மடைப்பள்ளி வாகனசாலை என்பன அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்கில் சந்தானகோபாலரும் வைரவரும் அமைந்து அருள்பாலிக்கின்றனர். உள்வீதியை கருங்கல்லால் அமைத்து சுற்றிலும் மதில் அமைக்கப்பட்டுள்ளது.

சிவஸ்ரீ முத்துசாமிக்குருக்கள் இந்தியா சென்றிருந்தபோது திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில் தேவர்களாலே பூசிக்கப்பட்டதொரு சிவாலயம் கவனிப்பாரற்று சிதிலமடைந்து கிடந்தது. அந்த ஆலயத்தை தரிசித்த குருக்கள் அங்கிருந்த சிவலிங்கப்பெருமானால் கவரப்பட்டார்கள். அவ்விடத்திய சிலரது உதவியுடன் சிவலிங்க மூர்த்தியையும், விநாயகர் விக்கிரகமொன்றையுங் கொண்டு வந்து 1924 இரத்தாட்சி வருடம் சித்திரை மாதம் 30ம் நாள் புதன்கிழமை ஸ்ரீபாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பிரதிட்டை செய்தார்கள். கொடித்தம்பப் பிரதிட்டையும் அன்றைய தினமே நடைபெற்றிருக்கின்றது.

இவ்வாலயத்தே இருக்கும் மூலமூர்த்தி பாலசுப்பிரமணியர் கருங்கல் விக்கிரகத்தாலானவர். இரு திருக்கரங்களையுடையவர். நிற்கும் நிலை. அதேகல்லில் வடிக்கப்பட்ட மஞ்ஞையின் தோற்றத்தையும் காண முடிகின்றது. இருவாலைக்குயத்தியர் இருபுறமுங் காட்சி தருகின்றனர். சிவலிங்கப் பெருமானார் நிலத்திலிருந்து சுமார் ஒரு மீற்றர் வரை உயரமானவர். சிவலிங்க மூர்த்திக்குத் தென்புறமாகப் பெரிய அளவிலான விநாயகப்பெருமான் வீற்றிருப்பதைப் பார்க்க முடிகின்றது. முருகன், வள்ளி தெய்வயானை எழுந்தருளிகள், சிவகாமி அம்பாள் சமேத ஆனந்த நடராசர் ஐம்பொன் மூர்த்திகள். நவக்கிரகம், சந்தானகோபாலர், வைரவர் கருங்கல் சிலாவிக்கிரகம்.

1918 இல் முதலாவது கும்பாபிடேகமும், பின் 1959.3.25 விளம்பி வருடம் பங்குனி மாதம் 12ம் நாள் புதன்கிழமை அத்த நட்சத்திரத்தில் இரண்டாவது கும்பாபிடேகமும் நடைபெற்றன. பின்னர் பல புனருத்தாரணப்பணிகளின் பின் 2001.05.04 விசுவருடம் சித்திரை மாதம் 21ம் நாள் வெள்ளிக்கிழமை உத்தர நட்சத்திரத்தில் பூஜாகீன அந்ரீதப் பிரதிஷ்ட மகா கும்பாபிடேகம் நடைபெற்றது.

இவ்வாலய நித்திய பூசைகள் காலை, நண்பகல், மாலை என மூன்று காலமும் தினமும் நடைபெறுகின்றது. முதலில் விநாயகருக்கும், பின்னர் சிவலிங்க மூர்த்திக்கும், தொடர்ந்து மூலமூர்த்தியாய பாலசுப்பிரமணியருக்கும் பூசை நடைபெறும். வருடாந்த மகோற்சவம் கந்தசட்டிக் காலத்தில் ஷஷ்டித்திதியில் தேரும், ஸப்தமித் திதியில் தீர்த்தமும் வரக்கூடிய வகையில் பத்துத்தினங்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெறும். வருடப்பிறப்பு, சித்திரைப்பூரணை, நவராத்திரி, புரட்டாதிச்சனி, கந்தசஷ்டி, ஐப்பசி வெள்ளி, திருக்கார்த்திகை, திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம், வைகுண்ட ஏகாதசி, மாசிமகம் என்னுந் தினங்களில் அபிடேக ஆராதனையுடன் கூடிய விசேட வழிபாடு நடைபெறும். மாசி மகோதயத்தில் சுவாமி கீரிமலைக்கு எழுந்தருளி தீர்த்தமாடி அருள்பாலிக்கும் முறைமையும் இருந்து வந்துள்ளது.

இவ்வாலயத்தின் மீது சில பக்தி இலக்கியங்களுள. நல்லப்பு அவர்களாலே திருசீச்சரம் ஶ்ரீ பாலசுப்பிரமணியர் திருவூஞ்சல் பாடப்பட்டது. சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் இயற்றிய திருவூஞ்சற்பா இவ்வாலயத்தே இருந்த போதும், அது இப்போது முழுமையாய் கிடைத்தில.

ஆலய புகைப்படங்கள்