Menu

வண்ணார்பண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்

யாழ்ப்பாணத்து வண்ணார்பண்ணையின் வடக்கில் காங்கேசன்துறை வீதியோடு இராமநாதன் வீதி இணையுமிடத்தில் நாச்சிமார் கோவில் என அழைக்கப்படுகின்ற வண்ணை ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 1870 ஆம் ஆண்டு விஸ்வகுல மேஸ்திரியாகிய கந்தர் என்பவரால் கட்டப்பட்டதாக 1898 இல் யாழப்பாண அரச அதிபரினால் வெளியிடப்பட்ட ஆலயங்கள் பற்றிய ஒரு குறிப்பேடு தெரிவிக்கின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இக்கோயில் நாச்சிமார் கோவில் என்று அழைக்கப்பட்டது. நாச்சிமார் கோயில் கி.பி 1870 ஆம் ஆண்டிலே கல்லால் கட்டப்பட்டதென்றும், அங்கு ஆண்டுதோறும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றன என்றும், இக்கோயில் விஸ்வப்பிரம்ம குலத்தவர்கள் வசம் காணப்பட்டதென்றும் பதிவேட்டுக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு இக்கோயில் அமைந்துள்ள இடம் குளங்கரை மருதடி எனவும் உறுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லால் கட்டப்பட்டகோவில் பின்னர் படிப்படியாக வளர்ச்சிபெற்று மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் புதிதாக அமைக்கப்பட்டபோது, மூலஸ்தானத்தில் காமாட்சி விக்கிரகம் தாபிக்கப்பட்டது. இதன் பின்னர் 1887ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. ஆலயம் விருத்தியடைய இதனைச்சரிவர நிர்வகிக்கும்பொருட்டு கி.பி 1893ம் ஆண்டில் ஆலய பரிபாலத்திற்கென அமைக்கப்பட்ட ஐவரைக்கொண்ட பஞ்சாயத்தும், பதிநான்கு பேரைக்கொண்ட நிர்வாக சபையும் நிறுவப்பட்டது. இவர்கள் நிர்வாகத்தில் இக்கோயில் வளர்ச்சி கண்டதோடு, நாச்சிமார் கோயில் அருளும், புகழும்கொண்ட கோயிலாக விளங்கியது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நமச்சிவாயம் செல்லப்பா என்பவர் இந்தியாவிற்கு தலயாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது சுவாமிமலையிலுள்ள சிற்பாச்சார்யாரைக்கொண்டு விக்கிரகங்கள் பலவற்றை செய்வித்தார். பூமாதேவி சமேத மகாவிஷ்ணு, இலக்குமி, வள்ளிநாயகி தெய்வயானை சமேத சுப்பிரமணியப்பெருமான், வைரவர், நவக்கிரகங்கள், சண்டேசுவரி ஆகிய விக்கிரகங்களை அவர் யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வந்தார். இவ்விக்கிரகங்கள் நாச்சிமார் கோயிலில் பிரதிட்டை செய்யப்பட்டன. இவ் வேளையில் சுற்றுப்பிரகார மண்டபமும் அமைக்கப்பட்டு, 1926ம் ஆண்டு மகாகும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து கொடித்தம்பமும் அமைக்கப்பட்டு, கொடியேற்றம் முதல் தீர்த்தம் வரை பத்துத் திருவிழாக்கள் நடைபெற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. ஆதியிலே காணப்பட்ட பதிவேட்டுக்குறிப்பின்படி, இக்கோயிலிலே ஒன்பது நாட்களே திருவிழா நடைபெற்றுள்ளது. பத்தாம் நாள் பங்குனி உத்தரத்தன்று மணிவிழாவும், பதினோராம் நாள் ஊஞ்சல் திருவிழாவும் நடைபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது, அத்தோடு 1870ம் ஆண்டளவில் கற்கோயிலாக மாற்றம் பெற்ற பின்னர் இங்கு ஆண்டுதோறும் அலங்கார உற்சவங்கள் நடைபெற்றனவென்றும் குறிப்புகளிலே கூறப்பட்டுள்ளன. ஆலய வளர்ச்சியின் காரணமாக ஆலயப்பணிகள் பலவாக காணப்பட்டன இவற்றை நிர்வகிக்க 1933ம் ஆண்டளவில் புதியதொரு நிர்வாக சபை நிறுவப்பட்டது.

பல புனருத்தாரணப் பணிகளின் பின்னர் 1965ம் ஆண்டிலே மீண்டும் கும்பாபிடேகம் நடைபெற்றது. அத்தோடு பத்து நாட்களாக நடைபெற்று வந்த வருடாந்த மகோற்சவமும் பதினைந்து நாட்களாக மாற்றம் பெற்றது. மாரியம்மன் ஊர்வலத்தோடு ஆரம்பமாகும் திருவிழாவில் அதற்கடுத்தநாள் குளிர்த்தி, பிள்ளையார்பூசை, கிராமசாந்தி, கொடியேற்றம் என்பன இடம்பெறும். தேர், தீர்த்தம், பூங்காவனம், சண்டேசுவரிபூசை, வைரவர் மடை ஆகியவற்றோடு மகோற்சவம் நிறைவுபெறும்.

1968ம் ஆண்டு காமாட்சி அம்பாளுக்கு சிறுமஞ்சமும், 1971ம் ஆண்டு சிற்பத்தேரும் உருவாக்கப்பட்டன. 1976ம் ஆண்டிலே சைவாகம விதிப்படி கோயிலிற்கு இராசகோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியது. இவ்விராசகோபுரம் 51.5 அடி உயரமாயும் 17.5 அடி விட்டமும் உடையதாய் ஐந்து வாசல்களோடும் ஐந்து கலசங்களோடும் காணப்படுகின்றது. கோபுரத்திலே கோயிலோடு தொடர்புடைய ஐதீகங்கள் சிற்பங்களாய் நிறைந்திருக்கின்றன. 1985ம் ஆண்டிலே கோபுரத்தின் இருபுறமும் மணிக்கோபுரங்களும் அமைக்கப்பெற்றன. நாச்சிமார் கோவிலின் அமைப்பு சங்கீர்ணாலயம் என்ற வகையைச் சார்ந்தது. இது தேவிக்கும், இறைவனுக்கும், பரிவாரதேவர்களுக்கும் உரிய அமைப்பு வடிவத்தை கொண்டதாகும். மிகச்சிறப்பான சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட விமானமும் கருவறை மேலே நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றது.

2006ம் ஆண்டு பெருமளவிலான புனருத்தாரண வேலைகள் செய்யப்பட்டு மீண்டும் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. ஆதிகாலத்தில் மரத்தடியில் ஆரம்பித்த தேவதை வழிபாடு, தற்காலத்தில் பெருவளர்ச்சியடைந்து, நாளடைவில் ஆகம வழிபாட்டைக்கொண்ட கோயிலாக மாற்றமடைந்து உள்ளது. யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை காமாட்சி அம்மன் ஆலயம் என்று வழங்கப்பட்ட பொழுதிலும், நாச்சிமார் கோயில் என்ற பெயரே புகழ்பெற்ற பெயராகி, யாழ்ப்பாணத்திலுள்ள அம்பிகை ஆலயங்களில் அருளும், பெருமையும் மிக்க ஆலயங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

இவ்வாலயத்தின் மீது வண்ணைநகர் சி.ந.சதாசிவபண்டிதர் அவர்கள் அந்தாதியொன்றும் ஊஞ்சற்பாடல்களும் செய்திருக்கின்றார்கள்.

சீராருஞ் செல்வி திகழ்வண்ணைக் காமாட்சி
காராரும் பூஞ்சோலைக் கற்பகமே – நேராருங்
காமாட்சி யீஸ்வரியே காஞ்சிபுர மெய்ப்பொருளே
காமாட்சி தந்தருள்வாய் காண்.

காண்டற் கரியவண்ணைக் காமாட்சி யீஸ்வரியே
வேண்டி யுனைப்பணிய விண்ணவர்க – ளீண்டியிங்ஙன்
வந்துநிதம் போவரெனின் மாநிலத்தோர் செய்கையினை
யெந்தவிதஞ் சொல்வே னிணைத்து.

என்று நாமும் காமாட்சி அம்மையை பணிந்தேத்தி உய்வோமாக.

ஆலய புகைப்படங்கள்