Menu

வேலணை பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணத்துக்கு அணித்தாயுள்ள வேலணையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார் பெரியபுலம் மகா கணபதிப்பிள்ளையார். போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்படாது முடியொடு நித்திய நைமித்திய பூசைகள் நடைபெற்று வந்தமையால் முடிப்பிள்ளையார் கோயில் எனவும் பெயர் பெற்றது இத்தலம்.

ஏறத்தாள மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலான வரலாற்றை இவ்வாலயம் கொண்டுள்ள தென்பதற்கு சாசனங்கள் மூலமான சான்றுகளும் கர்ணபரம்பரைக் கதைகளும் இருக்கின்றன. இவ்வாலயம் யாரால் அமைக்கப்பெற்றதென்பதற்கு பல கதைகள் இருக்கின்றன. வேலணை மேற்கைச் சார்ந்த சுப்பிரமணியம் என்பாரும் சந்திரசேகரக் குருக்கள் என்பாரும் முல்லைத்தீவு சென்று வரும் வழியில் விநாயகர் விக்கிரகம் ஒன்றை கண்டெடுத்து அதை கொண்டு வந்து சுப்பிரமணியருக்கு சொந்தமான காணியில் சிறு குடிலமைத்து வழிபடத்தொடங்கியதாய் கூறுவோருமுளர். இதைவிடவும் சோழ நாட்டிலிருந்து 17ம் நூற்றாண்டில் வேலணையில் குடியேறிய பூண்டி மாமுதலியார் என்பவரின் மூத்த மகளான பெரிய நீலயினார் என்பார் இவ்வாலயத்தை அமைத்தாரென்று கூறுவாருமுளர். சுப்பிரமணியர் கொண்டுவந்த விக்கிரகத்தையே நீலயினார் பிரதிட்டை செய்தாரென்று கூறுவாருமுளர்.

சுப்பிரமணியருடைய மருகர் சுதையாலே இக்கோவிலைக் கட்டி முதற் பூசகராகவும் இருந்து வந்தார். 1840ம் வருடம் இவ்வாயத்தில் முதலாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இக்கோவில் தொடர்ந்து ஆரம்ப கர்த்தாக்களினாலும் பொதுமக்களினாலும் பராமரிக்கப்பட்டு வந்தது என்பதனை 1880ம் வருடம் முடிக்கப்பட்ட ஆலய சாசனம் கூறிநிற்கும். 1880ம் வருடம் கோயிலிற்கான பரிபாலனசபை அமைக்கப்பெற்றது. சின்னக்குட்டியர், சண்முகம், கணபதிப்பிள்ளை என்போர் அக்குழுவிலிருந்தனர் என 1902ம் வருடம் எழுதப்பட்ட சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1902ம் வருட கூட்டத்தில் க. அம்பலவாணர், செ. கனகசபாபதிப்பிள்ளை, வை. செல்லப்பா, சீ. கதிரவேலு, நா. முருகர் ஆகியோர் ஆலய பரிபாலன சபைக்கு தெரிவுசெய்யப்பட்டனர். இப்பரிபாலன சபை சுதையால் ஆலயத்திற்கு மடப்பள்ளி, யாகசாலை, வசந்தமண்டபம், சுற்றுமதில் என்பனவற்றை கட்டுவித்து அலுயத்தை விரிவு படுத்தினார்கள்.

20ம் நூற்றாண்டில் கோயிலை கல்லால் கட்டும் எண்ணம் வலுப்பட்டு 1920ம் வருடத்தில் கை. நமசிவாயக் குருக்கள் தலைமையில் கருங்கற் திருப்பணி ஆரம்பமாகி நீண்டகாலம் நடைபெற்றது. இத்திருப்பணிகள் நீண்ட காலம் நடைபெற்று 1948ம் வருடம் கும்பாபிடேகம் நடைபெற்றது.

கை. நமசிவாயக் குருக்களவர்கள் 1922ம் வருடம் கருங்கற் திருப்பணி தொடர்பாய் விடுத்த பத்திரத்தை கீழே காணுங்கள்.

1950ம் வருடம் கோயிலிற்குரிய தேரொன்றும் அமைக்கப்பபெற்றது. 1960 களின் பின்னர் திருப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு ஆலயம் மேலும் விரிவு படுத்தப்பட்டு 1969ம் வருடம் மீண்டும் கும்பாபிடேகம் நடைபெற்றது.

தொடர்ந்து வந்த பரிபாலன சபையார் ஆலயத் திருப்பணிகளை தொடர்ந்தும் இடையறாது மேற்கொண்டு இராஜ கோபுர வேலைகளையும் ஆரம்பித்து மேலும் வெள்ளைக்கற்களாலமைந்த இரு மணிக்கூண்டுக் கோபுரங்கள், கருங்கல்லால் எழுந்தருளி விநாயகருக்கு கோயில், சுற்றுப்பிரகார கோயில்கள் என அமைக்கப்பெற்று ஆலயம் பெரும்பொலிவு பெற்று வந்தது.

1991ம் வருட இடப்பெயர்வின் போதும் ஆலய நித்திய பூசைகளை ஆற்றிவந்த சோமாஸ்கந்த சர்மா அவர்கள் ஆலயத்திலேயே தங்கி ஆலயத்தை பராமரித்தும் முடிந்தளவில் நித்திய பூசைகளை நடாத்தியும் வந்தார்கள். 1998ம் வருடம் மீளவும் வேலணைக்கு மக்கள் மீளத்திரும்பிய பின்னர் ஆலய திருப்பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டு பஞ்சதள இராஜ கோபுரமும் கட்டி முடிக்கப்பெற்றது. மேலும் பல திருப்பணிகளின் பின்னர் 2019ம் வருடம் கும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றது.

மூந்நூறு வருடங்களுக்கு மேலாக வேலணை மேற்கு பெரியபுலம்பதியில் வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்துவரும் மகா கணபதிப்பிள்ளையார் மீது குமுழமுனை க. சரவணமுத்துப் புலவர், சரவணையூர் ஆ. தில்லைநாதப் புலவர், ஆவரங்கால் பண்டிதர் ச. சுப்பிரமணியம் ஆகியோர் திருப் பதிகங்கள் பாடியிருக்கின்றார்கள். வேலணை மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலை தாபகர் உபாத்தியாயர் வி. கந்தப்பிள்ளை அவர்கள் திருவூஞ்சல் செய்திருக்கின்றார்கள். பிரபந்தங்கள் பாடுவது அருகிவரும் இக்காலத்தில் பண்டிதை திருமதி வைகுந்தம் கணேசபிள்ளை அவர்கள் மகா கணபதிப்பிள்ளையார் மீது பிள்ளைத்தமிழ் ஒன்று பாடி 2010ம் வருடம் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.

திருமருவு நவரத்ன மணிவிலகி வில்லிடுஞ்
    செம்பொன் மாமுடி மோலியுஞ்
செழுமணிக் குழையுமொளிர் பருமணிச் சுட்டியணி
    சிந்துரத் திலக நுதலும்
உருமருவு மொருகோடு மிருசெவியு முக்கண்ணு
    முபவீத மணிமார் புநீ
டுதரபந் தனமுமரை ஞணுமொண் செம்பட்
    டுடுத்த திருவரையு மழகார்
மருமருவு கமலமலர் பொருவுமிரு பதமுமென்
    மனதிலெந் நாளு மறவா
வரமுமிரு வினைவசப் பட்டுற் பவித்தினும்
    வருந்துதற் கேது வாய
கருமருவி டாதுமருள் வேலணையின் மேற்றிசைக்
    காமருவு பெரிய புலம்வாழ்
கரதரட விகடமத கரிமுகவ சிவமகா
    கணபதிப் பிள்ளை யாரே.

என்று நாமும் முடிப்பிள்ளையாரை எற்றிப்பாடி தொழுவோம்.

ஆலய புகைப்படங்கள்