அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்

புண்ணிய பூமியாகிய யாழ்ப்பணத்தின் வடபாகத்தில் அமைந்து சிறக்கின்ற அளவெட்டிக் கிராமத்தின் தென்பால், வயற்கரை ஓரத்தில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கின்றாள் முத்துமாரியம்மை.

இவ்வாலயம் 250 வருடங்களுக்கு மேலும் பழமையானது. பல சுவையான வரலாறுகளை கொண்டது. நோய்நீக்கி பேய்நீக்கி அன்பர்களுக்கு இஸ்ட சித்திகளை கொடுக்கும் தாயாய் இருக்கின்றாள் முத்துமாரியம்மை.

இக்கோயிலின் ஆரம்பகால வரலாறு பற்றி ஒரு சுவாயன கர்ணபரம்பரைக் கதை இருக்கின்றது.

மாசியப்பிட்டி சண்டிலிப்பாயினை சேர்ந்த அங்கணக்கடவை என்கின்ற மேட்டு நிலத்திலே இருந்த ஆலமரத்தின் நிழலில் இளைப்பாறவென ஒரு பெண்கள் கூட்டம் வந்தது. அங்கிருந்த விவசாயிகளிடத்தே தாகம் தீர்க்க நீர் கேட்டனர். 3 இளநீர்களை மட்டுமே விவசாயிகளால் கொண்டு வந்து கொடுக்க முடிந்தது. வந்தவர்களோ நான்கு பேர். இன்னுமோர் இளநீர் இல்லையென விவசாயிகளும் கவலை கொண்டனர்.

தொலைவிலே இருந்த மாட்டுக்கூட்டத்தே பால் வாங்கி அருந்துவேனெக் கூறி நால்வரில் வயது முதிர்ந்த அம்மையார் கூறி வெளிவயலை வந்தடைந்தார். அங்கிருந்த வேப்பமர நிழலிலே அமர்ந்து மாட்டுக்காரனிடம் சிறிது பால் கேட்டார். வரட்சியால் ஈன்ற கன்றிற்கே பால் கொடுக்க வழியின்றி இருக்கும் பசுக்களிடம் எவ்வாறு பால்கிடைக்கும் என கவலையோடு சொன்னான் மாட்டுக்காரன். நலிந்திருந்த பசுவொன்றை அன்போடு பார்த்தாள் கிழவி. பசுவும் பால்ததும்பும் முலைக்காம்பும், கொழுத்த மேனியும் பெற்றது. கிழவி வயிறார பாலினை குடித்தாள். மாட்டுக்காரன் வந்த கிழவி சாதாரண கிழவி அல்ல அறிந்தான் வணங்கி ஆனந்தித்தான். கிழவி முத்துமாரியாய் காட்சி தந்தாள்.

தன் சகோதரிகள் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி என்பார்கள் அங்கணக்கடைவையில் தங்கிவிட்டார்கள் எனச் சொல்லி (அங்கணக்கடவையில் இன்னமும் மீனாட்சி, நாகேஸ்வரி, கண்ணகி ஆகிய மூவருக்கும் மூலஸ்தானம் கொண்ட ஆலயம் உண்டு) தன்னை வெளிவயலிலேயே வைத்து ஆதரிக்குமாறு சொல்லி மறைந்தாள்.

அம்மன் அமர்ந்த வேம்பின் கீழேயே முத்துமாரி அம்மனை பூசித்து வந்தான் அவ்விடையன். காலகதியில் அவ்விடம் சிறு கோயிலாகி பின்னர் கல்லாற் கட்டிய பெருங்கோயிலாகியது. காஞ்சிபுரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட அம்மன் சிலை இவ்வாலயத்திலே பிரதிஸ்டை செய்யப்பட்டிருக்கின்றது. நீண்ட காலமாக பலியிடுதல் இவ்வாலயத்திலே இருந்து வந்தது. 1967இல் பலியிடும் முறைமை நிறுத்தப்பட்டு நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெறத் தொடங்கின.

31.08.1984இல் ஆலயம் புதிதாய்க் கட்டப்பட்டு கும்பாபிடேகமும் நடைபெற்றது. பிள்ளையார், முருகன், வைரவர் ஆகியோருக்கும் பரிவாரக் கோயில்கள் அமைக்கப்பட்டன. 04.05.2001 இலும் கும்பாபிடேகம் நடைபெற்றது.

நாமும் அன்னையை வணங்கி வழிபடுவோம்.

ஆலய புகைப்படங்கள்