வல்லிபுரம் ஆழ்வார் சுவாமி கோவில்

பாடல் பெற்ற தலங்களும் புராதன ஆலயங்களும் நிறையக் காணப்படுவதே ஈழத்தின் தனிச்சிறப்பாகும். இவற்றுள்ளே மூர்த்தி தலம் தீர்த்தம் மூன்றும் ஒருங்கே அமையப்பெற்ற சிறந்த தலங்களில் ஒன்று பருத்தித்துறை வல்லிபுரம் ஆழ்வார் ஆலயம். இது யாழ்ப்பாணத்தின் வடகீழ் கரையிலே வல்லிபுரம் என்னும் ஊரில் அமைந்திருக்கின்றது.

மூர்த்தியருளும் முறைசேர் தலநலமும்
தீர்ததத் திருநிறைவும் சேருமருட் – கீர்த்திமிகு
நல்லவோர் ஆலயத்தை நாடி நான் போற்றுதற்
கல்லேனின்றோனேனறி

என்று கருடாழ்வார் தூது தலமகிமையைப் பாடுகின்றது.

ஈழத்திருக்கும் வைணவ ஆலயங்களெல்லாம் சைவமுறைப்படி திருநீறு சந்தனம் வழங்க வல்லிபுரம் ஆழ்வார் திருத்தலத்தில் மட்டும் இன்னமும் சிறப்பாய் வைணவ பாரம்பரியமாய் நாமம் வழங்கும் வழக்கம் உண்டு.

இருப்பினும் யாழ்ப்பாணத்தில் சைவம் வைணவம் என்ற பாகுபாடு எங்கும் இல்லை. வல்லிபுரமாழ்வாரை பாடும்போது அச்சுவேலி குமாரசுவாமிக்குருக்கள் சிவவிஷ்ணு என்றே குறிப்பிடுவார். பொதுவில் திருமால் ஆலயங்களில் மூலமூர்த்தி நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ, கிடந்த கோலத்திலோ காணப்படும். ஆனால் வல்லிபுரத்திலோ சுதர்சனமே மூலமுர்த்தியாயுள்ளது.

இத்தலத்தை பற்றிய வரலாற்றை தட்சிண கைலாச புராணம், தட்சிண கைலாச மான்மியம் என்பவற்றிலும் காணலாம். சிங்கள மொழியில் 14ம் நூற்றாண்டில் எழுந்த தூது இலக்கியங்களிலும் (சந்தேச காவியங்கள்) இத்தலமகிமை பேசப்படுகின்றது. குறிப்பாக கோகிலவு சந்தேசம் பொன்னாலையில் இருக்கின்ற வரதராஜப்பெருமாளையும், வல்லிபுரம் ஆழ்வாரைப்பற்றியும் பாடியுள்ளது.

நாமும் வல்லிபுரம் ஆழ்வாரை வணங்கி உய்வோமாக.

ஆலய புகைப்படங்கள்