Menu

பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம்

ழமெங்கணும் நிறைந்திருக்கும் கற்பக விநாயகர் ஆலயங்களிலே முக்கயமான ஒரு இடத்தினை பெறுவது பழம்பெருமை வாய்ந்த வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயம் விளங்குகின்றது.

அமைவிடம்

தெல்லிப்பழைச்சந்தியிலிருந்து மேற்கு நோக்கி அம்பனைச் சந்தியைக் கடந்து பிரதான வீதிவழி நானூறு மீற்றர் வரை செல்ல வர்த்தலப்பதி விநாயகராலயத்தை கண்டானந்தமடைய முடியும். பன்னாலை கிராமசேவையாளர் பிரிவில் மருதநிலப்பாங்கரில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் பழம்பெருமை வாய்ந்தது.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கியவாறமைந்திருக்கும் இந்த ஆலயம் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், நிருத்த மண்டபம், தம்பமண்டபம், வசந்தமண்டபம் என்னும் மண்டபங்களை உடையது. மகாமண்டபத்தில் வடக்குப்புறத்தில் எழுந்தருளிக்கான அமைப்புண்டு. தம்ப மண்டபத்தில் மூஷிகம், பலிபீடம், கொடிக்கம்பம் என்பன அமைந்துள்ளன. கொடிக்கம்பத்தின் முன்னே மூலாதார கணபதியை தரிசிக்க முடியும். வெள்ளிக் கவசத்தை உடைய கொடிக்கம்பத்தின் வடக்கில் நவக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. 21 அடி உயரமான மணிக்கோபுரம் இராஜகோபுரத்தின் வடக்கிலுள்ளது. மணிக்கோபுரத்தின் கீழ்ப்பகுதியில் நாகதம்பிரானும், அதற்கு வடக்கே சந்தான கோபாலரும், தெற்கே வைரவரும் எழுந்தருளியிருக்கின்றார்கள். உள்வீதியின் தென்கிழக்கில் மடைப்பள்ளி கழஞ்சிய அறை என்பனவும், வடகிழக்கில் வசந்தமண்டபம், யாகசாலை என்பனவும் அமைந்துள்ளன. திருமஞ்சனக்கிணறு கர்ப்பக்கிரகத்திற்கு வடகிழக்கில் அர்த்த மண்டபத்துக்கு அண்மையாயுள்ளது. உள்வீதிக்கும் வெளிவீதிக்கும் இடையே சுற்றுமதில் உண்டு. இரண்டாவது வீதியின் தென்கிழக்கில் உள்ள தலவிருட்சமான வன்னிமரத்தடியில் 1977இல் சிறியதொரு கோயிலமைப்போடு வைரவர் சூலம் ஒன்று தாபிக்கப்பட்டுள்ளது.

கும்பாபிடேகம்

1872இல் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்பன கட்டப்பட்ட நிலையில் முதலாவது கும்பாபிடேகம் நடைபெற்றுள்ளது. இரண்டாவது கும்பாபிடேகம் 1912இல் தம்பமண்டபம், இராஜகோபுர திருப்பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து நடைபெற்றது. 1956இல் மூன்றாவது தடைவையும், 1977 இல் நான்காவது தடவையும் கும்பாபிடேகம் நடைபெற்றது. 2004 இல் ஆலயம் முழுமையாக புனருத்தாரனம் செய்யப்பட்டு தூபியின் பின்பக்கத்தில் கஜலட்சுமி கோயிலும், வடமேற்கே முருகன் ஆலயமும் அமைக்கப்பெற்று 5ஆவது தடைவையாக கும்பாபிடேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

திருவிழாக்கள்

18 அடி உயரமான கொடிக்கம்பம் 1914 இலே அமைக்கப்பெற்றது. ஆவணி அமாவாசை தினத்தைத் தீர்த்தோற்சவமாக கொண்டு 12 தினங்கள் மகோற்சவம் நடைபெறும். பதினோராம் நாள் தேர்த்திருவிழா நடைபெறும். ஆவணி விநாயகர் சதுர்த்தி, ஐப்பசிச் சுக்கிர வாரங்கள், மார்கழித்திருவாதிரை, தைப்பூசம் ஆயவேளைகளிலும் சுவாமி வீதியுலா வருவதுண்டு. வருடப்பிறப்பு, ஆவணி ஞாயிறு, புரட்டாதிச்சனி, நவராத்திரி, விநாயக சஷ்டி, பெருங்கதை, திருவெம்பாவை, சிவராத்திரி எனுங் காலங்களிலும் விசேட வழிபாடுண்டு. மகோற்சவ தீர்த்தத்தினத்தன்று நண்பகல் அன்னதானம் நடைபெறும் முறைமையுமுண்டு. இதனைக்கவனிக்கவென்று இங்கு ஒரு அன்னதான சபையுமியங்குகின்றது.

மூர்த்திகள்

மூலமூர்த்தியாய விநாயகரின் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போன்ற கருங்கல் விக்கிரகம் 18 தேவாங்குல உயரமுடையது. பரிவார மூர்த்திகளாய வைரவர், நாகதம்பிரான், சந்தான கோபாலர், நவக்கிரகம் என்போருக்கு தனித்தனி தூபிகளோடு கூடிய அமைப்புகள் உண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட விக்கிரகங்கள் இங்கு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளன. பெரியதுஞ் சிறியதுமான இரண்டு எழுந்தருளிகள், பஞ்சமுக விநாயகர் என்போர் ஐம்பொன்னாலானவர்கள்.

பக்தி இலக்கியம்

வரத்தலம் கற்பக விநாயகர் திருவூஞ்சற் பாடல்களை ஆலய ஆதீன முதல்வராய வித்துவான் பிரம்மஸ்ரீ சபாபதிஐயர் சிவானந்தையர் வேண்டுகொட்படி அளவெட்டி வேலுப்பிள்ளை கனகசபை;புலவர் பாடியுள்ளார். இத்திருவூஞ்சல் காப்புச்செய்யுளுடன் பதினொரு செய்யுள்களுடன் விளங்குகின்றது. இதைவிடவும், அருட்கவி சீ. விநாசித்தம்பிப் புலவர் பாடிய 11 பாடல்களை உடைய வரத்தலம் ஸ்ரீகற்பகவிநாயகர் திருப்பதிகம், 37 பாடல்களையுடை வரத்தலம் ஸ்ரீகற்பகவிநாயகர் பரத்துவமாலை, செல்லையா கதிரேசர்பிள்ளை இயற்றிய இரட்டைமணிமாலை என்பன இவ்வாலயத்தோடு தொடர்புடைய பக்தி இலக்கியங்களாகும்.

ஆலய புகைப்படங்கள்