Menu

வண்ணை வைத்தீஸ்வரன் கோயில்

ழநாட்டின்கண் எழுந்த பிற்காலச் சிவாலயங்களில் மிகச் சிறப்புப்பெற்றது வண்ணார்பண்ணையிலே அமைந்திருக்கின்ற தையல்நாயகி உடனுறையும் வைத்தீஸ்வர சுவாமி கோயிலாகும். இதனைச் செட்டியார் சிவன் கோயிலெனவும் பட்டணத்துச் சிவன் கோயில் எனவும் அழைப்போருண்டு.

வைத்திலிங்கச் செட்டியாரினாலே 1787இல் ஆரம்பிக்கப்பட்ட இக்கோயிற் தாபிதம் 1790 இல் நிறைவடைந்து அவ்வாண்டு சித்திரை மாதத்தில் குடமுழுக்குச் செய்யப்பட்டது. வைத்தியலிங்கச் செட்டியாரின் குருவாகிய கூழங்கைத் தம்பிரான் விருப்பப்படி தென்னிந்தியாவில் புள்ளிருக்குவேளூரில் இருக்கும் கோயிலினைப்போல் இக்கோயில் ஆகம முறைப்படி அமைந்து சிறந்திருக்கின்றது. வைத்தீசுவரப் பெருமானுக்கு கிழக்கு நோக்கிய கருவறையும் தையல்நாயகி அம்பாளுக்கு தெற்கு நோக்கிய கருவறையும் அழகிய விமானங்களுடன் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

கருவறையின் புறச்சுவர்களிலேயுள்ள கோட்ட மாடங்களில் தெற்கில் தென்முகக்கடவுளும், மேற்கில் இலிங்கோற்பவரும் வடக்கில் நான்முகக் கடவுளும் எழுந்தருளியுள்ளனர். கிழக்கு நோக்கி சந்நிதியோடு அமைந்த இவ்வாலயம் மூன்று பிரகாரங்களை கொண்டுள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் வசந்த மண்டபம் மற்றும் சித்தாமிர்த புட்கரணி எனும் தீர்த்தமும் அமைந்துள்ளன. கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் பதினாறுகால் மண்டபம் ஒன்றுள்ளது. பூங்காவனத்திருவிழாவிலன்று பார்வதியம்மையார் பரமசிவனை நோக்கி தவமியற்ற இம்மண்டபத்தே எழுந்தருள்வார்கள்.

இவ்வாலயத்தே பங்குனித்திங்களில் ஆரம்பித்து நடக்கும் சிவன் திருவிழாவும் ஆடி மாதம் பூர நட்சத்திலே நடைபெறும் அம்மன் திருவிழாவும் சிறப்பானவை. அம்மனுக்கு மூன்று தேரும் சிவனுக்கு ஐந்து தேரும் கொண்ட தேர்த்திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுபவை.

இரண்டாம் பிரகாரத்தில் இருக்கின்ற வசந்த மண்டபத்திலேதான் ஆறுமுக நாவலரவர்கள் தனது முதற் பிரசங்கத்தை செய்து பெருமையுற்றார். அதனால் இக்கோயிலின் கீர்த்தியும் பெருகிற்று. வித்துவசிரோமணி ந. ச. பொன்னம்பலப்பிள்ளை அவர்களும் தம் கந்தபுராண, கம்பராமாயண, பெரியபுராண விரிவுரைகளையும் நடாத்திப் புகழ்பெற்றது இம்மண்டபத்தேதான்.

வைத்தியலிங்கச் செட்டியாரின் பரம்பரையினரே இக்கோயிலை காலத்துக்கு காலம் திருத்தியும் பெருக்கியும் குடமுழுக்குச் செய்தும் சிறப்பாக இன்றளவும் பராமரித்து வருகின்றார்கள்.

வண்ணை வைத்தீஸ்வரப் பெருமான் மீது பல பக்தி இலக்கியங்கள் எழுந்திருக்கின்றன. கூழங்கைத் தம்பிரான் பாடிய தனிக் கவியொன்றுண்டு. அராலி வண்ணப்புரத்திலே சிவாலயம் எழுப்பிய விசுவநாத சாஸ்திரியார் அவர்கள் வண்ணைக்குறவஞ்சி பாடியிருக்கின்றார்கள். யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையார் தையல் நாயகி கலிவெண்பாவும், திருவூஞ்சலும் முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சலும் பதிப்பித்திருக்கின்றார்கள். வண்ணை வைத்தியலிங்கம்பிள்ளை அவர்கள் ஒருதுறைக்கோவையொன்று செய்திருக்கின்றார்கள். சுன்னாகம் மாணிக்கத்தியாகராச பண்டிதர் சிலேடை வெண்பா செய்திருக்கின்றார்கள். வேலணை பேரம்பலப்புலவருஞ் சிலேடை வெண்பா செய்திருக்கின்றார்கள். ஸ்ரீதாசபிரமம் என்பார் தோத்திரக் கீர்த்தனைகளும், வாலாம்பிகை ஊஞ்சலும், முத்துக்குமாரசுவாமி ஊஞ்சலும் பத்திரகாளி ஊஞ்சலும் பாடியிருக்கின்றார். புலவர் பார்வதிநாதசிவம் அவர்கள் தையல்நாயகி திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கின்றார்கள். கலாபூஷணம் வை.க. சிற்றம்பலம் அவர்கள் தோத்திரப் பாடல்கள் சொல்லியிருக்கின்றார்கள். உரையாசிரியர் ம.க.வேற்பிள்ளைப் புலவரவர்கள் தான் பாடிய ஈழமண்டலச் சதகத்தில் வண்ணை வைத்தீஸ்வரப்பெருமானின் பெருமைகளை இரு பாடல்களில் சொல்லியிருக்கின்றார்.

நதியரவு மதியிதழி புரிசடை யவிழ்ந்துநட நண்ணுமா காச லிங்கம்
    நால்வருக் குக்கலா னிழலினல் லுபதேசம் நவிலுற்ற மவுன லிங்கம்
நிதிபதித னன்புடைத் தோழனா யீசான நிலைநின்ற வேட லிங்கம்
    நிவாதமுறையிருவர்க் கழற்கம்ப வடிவாகி நின்றெழுஞ் சோதி லிங்கம்
துதிதுதிக் கையானை யன்பொடுஞ் போற்றிடுஞ் சுயம்பான வப்பு லிங்கம்
    துய்யவுணர் வோரிதய கமலா லயத்திலெழு சுடர்போற் கொழுந்து லிங்கம்
மதிதவழு மதிலோடு கோபுரந் திகழ்வுறும் வண்ணையெல் லையி னிறுத்தும்
    மாதங்க புரிதையல் பாகமிசை மீதமரும் வைத்தீச மா லிங்கமே.

என்று நாமும் தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரப் பெருமானை வேண்டி உய்வுறுவோம்.

ஆலய புகைப்படங்கள்