Menu

அராலி வண்ணப்புரம் ஸ்ரீ விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர் திருக்கோயில்

யாழ்ப்பாணத்தின் அராலிக் கிராமத்திலே வண்ணப்புரம் எனுமிடத்தில் கோயில் கொண்டு அமைந்திருக்கிறார் விசாலாக்ஷி அம்பாள் சமேத விஸ்வநாதேஸ்வரர். இவ்வாலயத்தினை வண்ணப்புரம் சிவன் கோயில், வண்ணாம்புலம் சிவன் கோயில், விஸ்வநாதசுவாமி கோயில், கொட்டைக்காடு சிவன் கோயில் எனவும் பல பெயர்களிட்டு வழங்குவர். அராலி மற்றும் சூழவுள்ள கிராம மக்கள் வழிபட சிறந்ததொரு சிவாலயமாய் இது விளங்குகின்றது.

விநாயகப்பெருமான், விஸ்வநாதேஸ்வரர், விசாலாக்ஷி அம்பாள், சகாசிவேஸ்வரர், கஜாவல்லி மகாவல்லி சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர், தட்சணாமூர்த்தி, சந்தான கோபாலர் நவக்கிரக மூர்த்தங்கள், நந்திபலிபீடம், வைரவர், சண்டேசுரர் முதலிய மூர்த்தங்கள் பல்லாண்டுகளுக்கு முன்னே இவ்வாலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு நித்திய நைமித்திய கருமங்கள் யாவும் காலத்துக்கு காலம் ஆகம முறைப்படி தவறாது நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயம் இற்றைக்குப் பல ஆண்டுகட்கு முன் அராலி மேற்கிலிருந்து காலஞ்சென்ற சந்திரசேகரஐயர் இராமலிங்கஐயர் என்பவர் அவ்வூர் பரமர் விநாயகரிடத்தில் 1713ம் ஆண்டு ஐப்பசி மாதம் 8ம் திகதி அறுதி வாங்கிய ஓலை உறுதிப்படி அராலி தெற்கும் மேற்கும் இறையிலிருக்கும் வண்ணாம்புலம் என்னும் காணியிலும், குறித்த இராமலிங்க ஐயரின் சகோதரர்களாலும், அப்பரம்பரையினாலும் வாங்கி விடப்பட்ட காணியிலும், சிதம்பர உடையார் என்பவராலும் சந்ததியினராலும் வாங்கி விடப்பட்ட காணியிலும் குறித்த இராமலிங்க ஐயரின் பேரனாகிய நா. விசுவநாதரசாஸ்திரியார் அவர்களால் 1796ம் ஆண்டு சித்திரை மாதம் 5ம் திகதி சங்குஸ்தாபனம் (அத்திபாரம்) செய்யப்பெற்று ஊர்ப் பொதுத் தருமமாகக் கோவில் கட்டுவித்துக் காசியிலிருந்து சிவலிங்கம் கொண்டுவந்து 1843ம் ஆண்டு ஆனி மாதம் 24ம் திகதி பிரதிஷ்டை செய்யப்பெற்று விசுவநாதசுவாமி கோயில் என்னும் பெயருடன் அக்காலத்தில் வழங்கி வந்தமை அறியக்கூடியதாக இருந்தது.

இதன் பின்னர் பிள்ளையார் கோயில் கட்டப்பட்டு 1856-04-05ல் விநாயகப் பெருமான் மூர்த்தம் செல்லையாக் குருக்களினால் பிரதிட்டை செய்யப்பட்டது. இதற்கு ஐந்தாஞ் சமய குரவர் என்று கற்றோரும் ஏற்றும் நாவலர் பெருமானும் அழைக்கப்பட்டமை இக்கோவிலிற்கு பெருஞ்சிறப்பைத் தருவதாம். நாவலர் பெருமான் மூன்று விருத்தப்பாக்களை இவ்வேளை பாடி மாலையாய்ச் சூட்டியமை பெருஞ்சிறப்புத் தருவதாம். இதன்பின்னர் பஞ்சலிங்கக் கோயில் கட்டப்பட்டு பிரதிட்டை செய்யப்பட்டது. இதற்கு பஞ்சலிங்க வளவு எனும் வளவும் தரும சாதனம் செய்யப்பட்டது.

இதன் பின் சுப்பிரமணியர் கோயிலும் சனீஸ்வரன் கோயிலும், சண்டேசுவரர் கோயிலும், வயிரவர் கோயிலும் சந்தான கோபாலர் கோயிலும் கட்டப்பெற்று 1960-02-01 இல் கும்பாபிடேகம் பெருஞ்சிறப்பாய் நடைபெற்றது.

இதன் பின் தெட்சணா மூர்த்தி கோயிலும் அமைக்கப் பெற்று 1970-02-11 இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன் பின் நவக்கிரக கோயிலும் அமைக்கப்பெற்று 1974-01-21 இல் கும்பாபிடேகம் நடைபெற்றது. 1978ம் வருடம் கோயிலிற்கு ஒரு மணிக்கோபுரமும் அமைக்கப்பெற்றது.

இதன்பின்னர் நடராஜர் கோயில் அமைக்கப்பெற்று 1990-02-07ல் கும்பாபிடேகம் நடைபெற்றது. பின்னர் இவ்வாலயத்தே 2008 ஆம் ஆண்டு அன்னதான மடமும், 2015 ஆம் ஆண்டில் புதிய சித்திரத் தேருடன் விசாலமான தேர்முட்டியும் அமைக்கப்பெற்றிருக்கின்றன்.

வண்ணார்பண்ணைச் சிவன் கோயில் போலவே மிகச்சிறப்புப் பெற்ற இவ்வாலயத்தின் மீது பல பக்தி இலக்கியங்கள் எழுந்துள்ளன. நாவலர் பெருமான் விநாயகர் மீதும் விசாலாட்சி அம்பாள் மீதும், விஸ்வநாதசுவாமி மீதும் மூன்று விருத்தப்பாக்கள் சொல்லியிருக்கின்றார்கள். வண்ணைக்குறவஞ்சியும் நகுலமலைக் குறவஞ்சியும் பாடிய கோயிற் தாபகர் விசுவநாத சாஸ்திரியார் அவர்கள் வண்ணப்புரத்து அந்தாதியும் ஊஞ்சலும் பாடியிருக்கின்றார்கள். வட்டுக்கோட்டை நா. சிவசுப்பிரமணியக் குருக்கள் ஊஞ்சல் பாடியிருக்கின்றார்கள். நீர்வேலி சங்கர பண்டிதர் அவர்கள் சந்திரசேகர சுவாமிக்கும் கௌரியம்மைக்கும் தோத்திரங்கள் பாடியருக்கின்றார்கள். அவர் மகன் சிவப்பிரகாச பண்டிதர் அவர்கள் மாணிக்கவாசகர் மீது தோத்திரம் சொல்லியிருக்கின்றார்கள். மழவராயபுரம் சுப்பிரமணிய ஐயர் அவர்கள் சுப்பிரமணிய சுவாமி மீதும் நடேசர் மீதும் சிவகாமியம்மை மீதும் வயிரவசுவாமி மீதும் சண்டேசுவரர் மீதும் தோத்திரங்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உலகெலா மாகிவே றாயுடனு மாய்நின்ற உண்மையறி வின்ப வடிவே
    ஓங்குமீ சானாதி சத்திபஞ் சகமேமெய் யுருவெனக் கொண்ட முதலே
அலகிலா முற்றறிவு முதலறு குணங்களா றங்கமென வுடைய பரனே
    அவனிமுதன் மூர்த்தமெட் டுடையனாய்ச் சர்வாதி யட்டநா மங்கொள் சிவனே
இலகுசீ ரைந்தொழி லுஞற்றியு முஞற்றிலா தினிதுதிகழ் கின்ற பதியே
    எண்ணத் தெவிட்டாத தெள்ளமுத மேயடிய ரிடர்போக்கு சேம நிதியே
விலகலா துன்னைவழி பாடுசெயு மண்டர்க்கு வேண்டுவ கொடுத்த ருள்வாய்
    விண்டல மளாவிவளர் தண்டலை யராலிநகர் விசுவநா தக்கட வுளே 1

என்று நாமும் விஸ்வநாதப் பெருமானை ஏற்றிப் பாடி பேறடைவோமாக.

  1. ஆறுமுக நாவலரவர்கள் விஸ்வநாதசுவாமி மீது சொன்ன விருத்தப்பா.

ஆலய புகைப்படங்கள்