Menu

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம்

ழத்திருநாட்டில் விநாயகர் திருக்கோவில்களில் முதன்மைத் தலமாக விளங்குவது மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம். தமிழ் வேந்தர் காலத்துத் திருத்தலங்களிலொன்றாகப் போற்றப்படும் இத்தலம் பற்றிய பல்வேறு ஜதீகவரலாறுகள் கூறப்படுகின்றது. அருட்சிறப்பும் அற்புதமும் நிறைந்த மருதடி வினாயகர் ஆலயம் தனியாரின் பராமரிப்பில் பராமரிக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் பொதுக்கோவிலாகப் பிரகடனம் செய்யப்பட்டு பொதுமக்களால் தற்போது நிர்வகிக்கப்பட்டு வருகிறது. காலம் தவறாத பூசை, வழிபாட்டு ஒழங்கு, திருப்பணி வேலைகள் அறநெறிப்பாடசாலை என ஆலயநிர்வாகம் மிகவும் சிறப்பாக ஆலயத்தை நிர்வகித்து வருகின்றது. ஆண்டு தோறும் சித்திரை மாதம் புதுவருடப் பிறப்பன்று பல லட்சம் பத்தர்கள் புடைசூழ விநாயகப் பெருமானின் திருத்தேர்விழா நடைபெறும் மகிமை மிக்க மருதடியான் திருவருளைப் பெறுவதற்காக பல ஊர்மக்களும் நேர்த்திகளை நிறைவேற்ற இத்தலத்தை நோக்கி தினமும் வருவர்.

இப்புனித தலத்தின் கட்டட அமைப்பு நூற்றாண்டு கடந்த சுண்ணாம்பு கற்களாலான நிர்மாணமாக அமைந்திருந்தது ஆலய வசந்த மண்டபம் மற்றும் பரிவார ஆலயங்கள் சீரான அமைப்பில் அமைக்கப்படாது உட்பிரகாரம் மிகவும் நெருக்கமாகவும் பத்தர்களுக்கு முழுமையாக பூசை வழிபாடுகளை தரிசிப்பதற்கு முடியாத நிலையும் காணப்பட்டது இந்நிலையில் பழம்பெரும் இத்தலத்தை சிறப்பாக நெறிமுறைக்கு அமைய விசாலமாக அமைக்க வேண்டும் என்ற ஆவல் அடியார்கள் உள்ளத்தில் வியாபித்தது. ஆலய தர்மகத்தாசபை நாடறிந்த சிவாச்சாரியார் சமயப் பெரியோர்களை நாடி ஆலோசனை பெற்றனர். இந்திய சிற்பக் கலைஞர்களை அழைத்து சிவாகம நெறிமுறைக்கு அமைய கருங்கற்களாலான கருவறை அமைப்பபைக் கொண்ட அசையா நிலைக் கோவிலை உருவாக்க திட்டமிட்டனர்.

அனுபவ ஞானமுடைய அகவை எண்பது நிறைந்த கீரிமலை சிவசிறீ நகுலேஸ்வலக் குருக்கள் கோப்பாய் சிவசிறீ வ.பரமசாமிக் குருக்கள் முன்னிலையில் ஆலய புனர் நிர்மாணப் திருப்பணி அங்குரார்பணம் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஶ்ரீ ஜெயக்குமாரக்குருக்கள் பாலஸ்தாபனக் கிரியைகளை சிறப்பாக நடாத்தி பாலாலயத்தில் விநாயகப் பெருமானையும் பரிவாரத் தெய்வங்களையும் இருத்தி திருப்பணிக் கடமைக்காக ஆலயத்தை ஒப்படைத்தார். மாமல்லபுரச் சிற்பக் கலைஞன் செ.ஞானமூர்த்தி அவர்களின் தலமையில் இரவு பகலாக பிரமாண்டமான திருப்பணி வேலைகள் நடைபெற்று இந்தியாவிலுள்ள சோழர்காலத்திருக்கோவில்களின் வடிவம் போல் அடியார்களின் உள்ளத்தை ஆட்கொள்ளுமளவிற்கு புதிய ஆலய புனரமைப்பு மிகவும் விசாலமான அமைப்பட்டிருக்கின்றது. யாழ் குடாநாட்டில் சிற்பம் நிறைந்த பெருங்கோவில் என்ற தனித்துவத்தை மருதடியான் திருக்கோவில் பெற்றிருக்கின்றது எனலாம். இப்பெரும் புனருத்தாரணத்தின் பின்னர் ஆலயத்திற்கு 02.02.2015 மகா கும்பாபிடேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது.

மா.கா. வேற்பிள்ளைப் புலவரவர்கள் தாம்பாடிண ஈழமண்டலச் சதகத்தில் மானிப்பாய் மருதடி விநாயகராலயச் சிறப்புப்பற்றி பாடியிருக்கின்றார்கள். அதனை கீழே காணுங்கள்.

மருதடி விநாயகன் மானியம் பதிவாசி
    மறைமுத லெழுத்துறுமிறை
மதகய முகற்செற்ற மூலவா தாரமுதன்
    மாபாரதம் பொறித்தெங்
கருதடிந் திடுகடவு ளவ்வைகயி லையினுறக்
    கடிதுய்த்து விடுகணபதி
கருதினவர் கருதாத வர்க்குநன் மைகடீமை
    காட்டும்விக் கினகருத்தா
அருவடிவ மாமமல னேழையேன் பிழைபொறுத்
    தருடருங் கருணைக்கட
லம்புயன் முதலோரு மறியாத தத்துவ
    னளப்பரிய வாந்தரங்கள்
சருநெடிது துய்த்தொர்புன் மரமாகி யிங்குளேன்
    சாந்தநா யகிசமேத
சந்த்ரமௌ லீசனே யைந்தொழில் விலாசனே
    சந்த்ரபுர தலவாசனே.

இவ்வாலயத்தின் கண்ணே பல பக்தி இலக்கியங்களும் எழுந்துள்ளன.

அறிவுதய மிதுகாறு முலகபந் தங்கள்சேர் அடியேனின் புந்தி யதனை
    யரித்துநல் சன்மார்க்க வழிகோயி யான்செய்த பொல்லாங் கெலா மகற்றி
அறமான நற்கரும வழிகளிற் செலுத்தியென் னாணவத் திமிர டக்கி
    அறிவான வொளிகாட்டி யான்மாக்கள் சிவமேன்றே அழிவிலா வருளை யீந்த
நறவாடு மலர்மாலை மணியோடு நகையாடு முரமார்பில் நாலு கின்ற
    விறலாடு வங்குசக் கையனே நம்பினோற் கருள்சொரிந் திடு மெய்யனே
உறவாக வுன்பதம் நம்பினே னுறுதுயர் உலையாது களைந்தருள் செய்வாய்
    உத்தமர்கள் வாழ்கின்ற சத்திமிகு மானியம் பதியுறையு மருதை யனே.

என்று நாமும் மானியம்பதியுறை மருதையனை ஏற்றிப் பாடித் தொழுது உய்வடைவோம்.

ஆலய புகைப்படங்கள்