Menu

சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில்

யாழ்ப்பாணத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த நகராம் சித்தன்கேணியிலே, யாழ்ப்பாணம் – சங்கானை – பொன்னாலை பிரதான வீதியும் கீரிமலை – பண்டத்தரிப்பு – அராலி பிரதான வீதியும் சந்திக்கும் நாற்சந்தியிலே பெரியவளவு என்னும் பதியிலே சித்தன்கேணி ஸ்ரீ மஹா கணபதி பிள்ளையார் கோயில் அமைந்திருக்கின்றது.

இக்கோயில் அமைந்துள்ள பெரியவளவு என்னும் இடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சோலையாக விளங்கியது. அச்சோலையில் ஒரு விருட்சத்தின் கீழ் இருந்து விநாயகப்பெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்பாலித்து வந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விநாயகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பெற்று சைவ ஆகம முறைப்படி பூசைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பின்னர் 1898 இல் இக்கோவிலின் முக்கிய பகுதிகள் கருங்கற்க்களால் விசாலமாக கட்டுவிக்கப்பட்டது. பின்னர் 1912 இல் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது.

சைவ ஆகம விதிப்படி பூசைகள் ஆரபித்த காலத்தில் இருந்து பிராமணக் குருமார் இக் கோவில் பூசைகள் செய்து வருகின்றார்கள். திரு ஐயாமுத்து ஐயர் அவர்களே இக்கோவிலின் முதற் பூசகர் ஆவார்கள். அவருடைய குடும்பத்தினரே பல காலம் தொடர்ந்து பூசை செய்தனர். சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள் அவர்கள் இக்கோவிலின் பூசைகளைப் பொறுப்பேற்றபின்னர் இக்கோவில் பல சிறப்புக்களை பெற்றது. அடியார்களின் பங்களிப்புடன், இந்தியாவில் இருந்து சிற்பாச்சரியர்களை வரவழைத்து தமிழ்நாட்டில் கோவில்களில் உள்ளதுபோல் சமயம் தொடர்பான ஓவியங்களையும் சிற்ப்பங்களையும் கோவிற் சுவர்களிலும் தூண்களிலும் அமைக்கச்செய்தார். விநாயகர் புராணத்தில் உள்ள பல கதைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இக்கோவிலின் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வரையப்பட்டுள்ளன. அத்துடன் நாயன்மார்கள் நால்வரினதும் மும்மூர்த்திகளினதும், விநாயகப்பெருமான் முருகப்பெருமான், கண்ணபிரான், இராமபிரான், சூரியன், சந்திரன் ஆகியோருடைய சிற்பபங்களும் சிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அனைத்து இந்துக்குருமாரும் வியக்கும் வண்ணம் முதன் முதலாக முப்பத்து மூன்று ஓம குண்டங்கள் அமைத்து 1958 இல் மஹா கும்பாவிஷேகம் நடாத்தி இக் கோவிலுக்குப் பெருமை சேர்த்தார்.

பின்னர் 1972ம் வருடமும் 1989ம் வருடங்களிலும் ஆலயம் மேலும் புனரமைக்கப்பட்டடு மகா கும்பாபிடேகங்கள் நடைபெற்றன. 2002ம் கோயில் மேலும் புனரமைக்கப்பட்டடு மகா கும்பாபிடேகம் நடைபெற்றது. இதன்பின்னர் 2016ம் வருடம் மீளவும் ஆலய புனருத்தாரண வேலைகள் ஆரம்பித்து புதிய பஞ்சதள கோபுரமும் அமைக்கப்பெற்று 2018ம் வருடம் கும்பாபிடேகம் சிறப்பாக நடைபெற்றது.

மூலமூர்த்தியாகிய விநாயகப்பெருமானுடன் முருகப்பெருமான், வைரவர், சனீஸ்வரர், சண்டேஸ்வரர் ஆகியோரும் வடக்குப் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கைலாசநாதரும் நித்தியா கல்யாணி அம்பாளும், அத்துடன் வடகிழக்கு மூலையில் நாகதம்பிரானும் தென் கிழக்குப் பக்கத்தில் கடம்பமர முருகனும் இருந்து எமக்கெல்லாம் அருள்பாலிக்கின்றார்கள். இந்த கோவிலிலே பெரிய அளவிலான சிவலிங்கமும் அம்பாள் விக்கிரகமும் அமைந்துள்ளன.

இவ்வாலயத்தே ஐந்து காலப் பூசைகள் தினமும் நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தில் மகோற்சவம் நடைபெற்று வைகாசிமாதப் பௌர்ணமிக்குத் தீர்த்தம் நடைபெறும். அத்துடன் மாதப்பிறப்பு அபிஷேகம், மாதாந்த சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, விநாயகர் நோன்பு, கந்தசஸ்டி, நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை, ஆகிய திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.

மாகா கணபதிப்பிள்ளையார் மீது பக்தி இலக்கியங்கள் எழுந்துள்ளன. அருணாசலம் என்பார் மகா கணபதிப்பிள்ளையார் மீதும் சுப்பிரமணியர் மீதும் ஊஞ்சற் பதிகங்கள் பதிப்பித்திருக்கின்றார்கள். ஆசிரியர் திருமதி ஜெ. அருள்மயம் அவர்கள் கீர்த்தனமொன்று பாடியிருக்கின்றார்கள்.

வானார்போந் தடிதொழவே அருளும் பெம்மான்
    வளர்குடிலை வடிவாய ஐங்கரத்தோன்
மானார்செய் வழிபாட்டில் மகிழ்க யாரி
    மழவரையர் தாயத்தார் பணியை ஏற்றோன்
தேனார்நற் பொழில்வட்டர்ச் சித்தன்கேணி
    திகழுஞ்சீர்ப் பெரியவள வுவந்த தெய்வம்
கானார்தார் புனையுமஹாகணபதிப் பேர்க்
    கடகளிற்றைக் கைகூப்பி பணிய வாரீர்

என்று சைவமக்கள் எல்லோரும் மாகா கணபதிப்பிள்ளையாரின் அருள் பெற்று உய்வோமாக!

ஆலய புகைப்படங்கள்