Menu

அளவெட்டி பெருமாக்கடவை விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்தின் பெருமைமிகு கிராமங்களிலே ஒன்றான அளவெட்டிக் கிராமத்தினிலே அமைந்து சிறக்கும் பெருமைமிகு ஆலயக்களிலே பெருமாக்கடவை விநாயகர் ஆலயமும் ஒன்றாம். மல்லாகம், சுன்னாகம் மற்றும் கந்தரோடை கிராமங்களை தொட்டு நிற்கும் அழகிய வயற்பரப்பின் மத்தியிலே அமைந்திருக்கின்றது இவ்வாலயம். ஆலயத்தின் முன்னே புராதனமான ஒரு சதுரவடிவ செந்தாமரைத் தடாகம் இருக்கின்றது. ஆலயத்தின் மேற்கே நித்திய பூசைகளை மேற்கொள்ளும் அந்தணர்களின் இல்லங்களும், தெற்கே ஆலயத்தை தாபித்து தொடர்ச்சியாய் பரிபாலித்து வரும் மணியகாரன் பரம்பரையினரின் வழியுரிமையான ஆதனங்களும் வடக்கே துர்க்கை அம்மன் ஆலயம் ஒன்றும் உள்ளன.

ஆலய நிர்மாண காலந்தொட்டு ஆலயத்திற்கு புரோகிதம் செய்யும் இசை வேளாளர்கள் வடக்கே உள்ள ஆதனங்களில் குடியிருந்ததாயும், இவையனைத்திற்கும் மேலாய் இவ்வாலயச் சுற்றாடல் மா, பலா, வாழை தென்னை மரங்கள் செறிந்த பசுமைத் தோற்றமும் சுத்தமான காற்றோட்டமும் உள்ளதாய் அமைந்துள்ளது.

ஆலய வரலாறு தொடர்பாயும் பிரதேசப் பெயர் தொடர்பாயும் பல்வேறு கர்ண பரம்பரைக் கதைகள் கூறப்பட்டு வருகின்றன. இங்கு வாழ்ந்த பலரும் குதிரைகளை பட்டிகளாய் வைத்திருந்தமையால் பெரிய குதிரைகள் அடங்கிய கடவை – பெருமாக்கடவை என அழைக்கப்பட்டதெனவுக் கூறுவாரும், பண்டைய ஆட்சிக்காலத்தில் இப்பகுதி மக்கள் பெரும் செல்வாக்கோடு வாழ்ந்தமையினால், பெருமக்கள் கடவை என இவ்விடம் அழைக்கப்பட்டதாயும் பின் அதுவே பெருமாக்கடவை ஆகியதெனவும் கூறுவாரும் வேறும் பல கதைகளை கூறுவாரும் உளர்.

இவ்வாலயம் தொடர்பான பல உத்தியோக பூர்வ ஆவணங்கள் இன்னமும், அரசாங்க அதிபர் காரியாலயத்திலும், அரச கலாச்சாரத் திணைக்களத்திலும், தேசிய சுவடிக் காப்பகத்திலும், காணிகள் பதிவுகள் திணைக்களத்திலும் உள்ளன. 1892ஆம் ஆண்டின் கச்சேரி பதிவுகளின் பிரகாரம், இவ்வாலயம் பிள்ளையாருக்குரிய வழிபாட்டிடம் எனவும், அப்போதிருந்த கட்டடத்தை கட்டியவரும், நிலத்தின் உரிமையாளரும், வீரகத்தியர் முருகேசு உடையர் எனவும், ஆலயம் கல்லாலே கட்டப்பட்டு கிடுகினாலே வேயப்பட்டிருந்தது எனவும் தெரியவருகின்றது. மேலும் இப்பதிவு மேற்கொள்ளப்பட்ட காலத்தே (1892) ஆலய முகாமையாளரும், உரிமையாளருமாக அம்பலவாண முதலியார் சின்னத்தம்பர் மணியகாரர் விளங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சின்னத்தம்பர் மணியகாரரின் தந்தையாரான அம்பலவாண முதலியார் ஆலயத்தினை மீளஸ்தாபித்த தாபகர், வீரகத்தி முருகேசு உடையாரின் மகனாவார். இவர் 1840இலிருந்து 1869இல் இறக்கும் வரை காங்கேசன்துறை, வீரமாணிக்க தேவன்துறை தொடக்கம் தாவடி வரையிலான பிரதேசத்திற்கு மணியகாரராயும், 17 உடையார் பிரிவுகளுக்கு மேலதிகாரியாயும் விளங்கியவர்.

இவ்வாலயமானது கற்பக்கிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடித்தம்ப மண்டபம், வெளிமண்டபம் போன்றவற்றோடு கூரை வேயப்பட்ட உட்பிரகாரத்தையும், மடப்பள்ளி, குருக்கள் அறை, களஞ்சிய சாலை, நால்வர் மண்டபம், வாகனசாலை, வசந்த மண்டபம், யாகசாலை போன்றவற்றுடன் பரிவார மூர்த்திகளாக வைரவக் கடவுள், சுப்பிரமணியர் போன்ற உட்பிரகாரக் கோயில்களையும், கொடித்தம்பம், நந்தி, பலிபீடம் போன்றனவற்றையும் கொண்டுள்ளது. மூலவர் விக்கிரகம் அமர்ந்த நிலையிலுள்ள கருங்கல்லினாலான சிலையாயுள்ளது. இம்மூலவர் பலராலும் சித்தி விநாயப் பெருமான் என அழைக்கப்பட்டு வருகின்றார். ஆலய பக்தி இலக்கியங்கள் எரம்ப விநாயகனே என்று மூலவரை விளிக்கின்றன.

ஆரம்ப காலத்தில் இவ்வாலயத்தில் நியமநைமித்தியங்களாக ஆனியிலே வருட மகோற்சவம் பத்து நாட்களும், கந்தசட்டி ஆறு நாட்களும், திருவெம்பாவை பத்து நாட்களும் இருந்து வந்தன. காலப்போக்கில் இந்நிலை படிப்படியாய் மாறி பன்னிரு மாதங்கள் தோறும் இரு பட்ச சதுர்த்தித் திருவிழாக்கள், சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்தரம், சித்திராப் பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆனி உத்தரம், திருஞானசம்பந்தர் குருபூசை, ஐப்பசி வெள்ளி, திருக்கார்த்திகை, மானம்பூ, பிள்ளையார் கதை என்பனவும் மேலதிக உபயங்களாக நடாத்தப்பட்டு வருகின்றன. பொருத்தமான நேரங்களில் புராண படனங்களும் நடைபெற்று வருகின்றன. கந்தசட்டியைத் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் சிறப்பாய் நடைபெற்று வருகின்றது.

உர்மக்களின் பங்களிப்போடு ஆலய புனர்நிர்மாணங்கள் காலத்துக்கு காலம் நடைபெற்று வருகின்றன. 1968, 1982 மற்றும் 2002 இல் ஊர்மக்களின் பங்களிப்போடு ஆலய கும்பாபிடேககங்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாலய அந்தணர் பரம்பரையிலே வந்த முகாந்தரம் தி. சதாசிவஐயர் அவர்கள், பெருமாக்கடவை விநாயகப் பெருமான் மீது பல பதிகங்களை பாடியுள்ளார்.

ஆலய புகைப்படங்கள்