புளியந்தீவு ஸ்ரீநாகேஸ்வரன் கோவில்

யாழ்ப்பாணத்தை அண்டிய அனலைதீவின் தெற்குப்பகுதியிலே உப்பு நீர் சதுப்பு நிலத்தால் பிரிக்கப்பட்டிருக்கும் சிறிய தீவே புளியந்தீவாகும். சிறியதீவாக இருந்தபோதும் பயன்தரும் தென்னை, பனைமரங்களும் படர்ந்த ஆலமரங்களும் வானுயர்ந்த அரசு, வேம்பு மரங்களும் நிறைந்த ஒரு சூழலில் கோவில் கொண்டிருக்கிறார் ஸ்ரீநாகராஜேஸ்வரி சமேத நாகேஸ்வரப் பெருமான்.

இவ்வாலயம் தோற்றம்பெற்றது எப்போது என்பது சரியாக தெரியாவிட்டாலும் போர்த்துக்கேயர் காலத்துக்கு முற்பட்டது என்பது தெளிவானது. போர்த்துக்கேயர் நயினை நாகபூசணி அம்மன் கோவிலை தகர்த்தபோது அங்கிருந்த சிவலிங்கத்தை இக்கோவிலில் கொண்டுவந்து வைத்து வழிபட்டதாக வரலாறு உண்டு.

எருக்கலம் பற்றைக்காட்டின் நடுவே நின்ற அரசமரத்தின்கீழ் சிறிய கொட்டிலொன்றினை அமைத்து நயினாதீவைச்சேர்ந்த நாகப்பனும், இராமு உடையானும் ஆரம்பத்தில் வழிபட்டதாகவும், இவர்களுடன் நயினாதீவு கதிரவேலு கணபதியும் இணைந்து சிறிதாக இருந்த ஆலயத்தை படிப்படியாக புனரமைத்தனர். 1950இல் நடந்த கும்பாபிடேகத்தின் போது ஆலயம் காரைச்சுண்ணாம்பினாலும் காட்டுக்கற்களாலும் கட்டப்பட்டு, மூலவராக நாகதம்பிரானும், மகாமண்டபத்தில் தெற்கு நோக்கிய நிலையில் நடராசப்பெருமானும், சிவகாமி அம்மையாரும் பிரதிட்டை செய்யப்பட்டனர்.

இதன்பின்னர் அனலைதீவு மக்கள் ஒன்றுகூடி ஒர் நிர்வாகசபையினை ஏற்படுத்தினர். இச்சபை மீண்டும் கோவிலை புனரமைத்து 1960இல் கும்பாபிடேகத்தை செய்தார்கள். இதை தொடர்ந்து கோயில் சிறிது சிறிதாக புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் செய்யப்பட்டு, இரட்டை பஞ்சாங்க அமைப்பினாலான தூபியையும், மண்டபங்களையும், அம்மன் சந்நிதியையும் அமைத்து சிறந்த ஒரு சிவாலயமாக 1998இல் குடமுழுக்கு விழாவும் செய்தார்கள்.

பிள்ளையார், முருகன், நவக்கிரகங்கள், வைரவர், சண்டேசுவரர் என்போர் பரிவார மூர்த்திகளாக அமைந்து அருள் செய்கின்றார்கள். மார்கழித்திருவெம்பாவையும், ஆருத்ராதரிகனமும் இந்த ஆலயத்தில் பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. அத்தோடு பிட்டுப்பூசையும் மண்சுமந்த விழாவும் கொண்டாடப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு கால விசேட அபிடேகமும், காலையில் சமுத்திர தீர்த்தமும் நடைபெறுகின்றன.

சமுத்திரத்தால் சூழப்பட்ட சிறுதீவாக இருக்கின்றபோதும் நாகபுஸ்கரணி தீர்த்தம் இன்றளவும் நன்னீர்த்தீர்த்தமாகவே இருக்கின்றது. அத்தோடு இவ்வாலயத்தின் தெற்கு புறமாக நயினை நாகபூசணி அம்பாள் கோவிலுக்கு நேராக 15×5 அடி அளவிலான படிகளுடன் ஒரு கட்டுமானம் கடலுக்குள் இருக்கின்றது என்றும் அறியமுடிகின்றது.

நாகேஸ்வரப்பெருமான் இங்கே குடியிருந்து அனலைதீவு மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ஆலய புகைப்படங்கள்