புங்குடுதீவு மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில்

யாழ்ப்பாணத்துக்கு வடமேற்கிலே இருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில், மடத்துவெளி என்கின்ற கிராமத்தில் பச்சைப் பசேலென்ற நெல்வயல்களின் நடுவே இருந்து அருள்பாலிக்கின்றார் பாலசுப்பிரமணியர். ஆரம்ப காலத்தில் இளந்தாரி நாச்சிமார் கோயிலாக இருந்த இவ்வாலயம் ஏறத்தாள நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததாய் இருக்கலாம்.

இவ்வாலயத்தின் அமைக்கப்பட்டது தொடர்பில் ஒரு பேச்சு வழக்கு கதை ஒன்று உள்ளது. வள்ளிநாச்சியார் என்பவர் அயல்கிராமத்திலிருந்து மடத்துவெளிக்கு திருமணமாகி வந்தார், வழமைப்படி மணமகன் வீட்டில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார். மூன்றாம் நாள் காலை நாச்சியார் முன் புறம் உள்ள வயலில் இறங்கிய போது வயலின் உரிமையாளர் “நீர் புகுந்த வீடு எம்மோடு சேர்ந்து வாழும் தகுதி அற்றது” என்று ஏளனம் செய்தார்.இதனை கேட்டு கவலையுற்ற நாச்சியார் அதே இடத்திலேயே தனது தாலிய கழற்றி அந்த வயல் வரம்பில் ஒரு கல்லின் மீது வைத்து சிரட்டையால் மூடி விட்டு தனது பிறந்த வீட்டுக்கு சென்று விட்டார் . இதனை கண்ட இவரது கணவர் அன்று முதல் அதே இடத்தில அந்த கல்லை வைத்து ஒரு கோவிலை உருவாக்கி வழிபட்டு தானும் மறுமணம் செய்து வாழ்ந்து வந்தார். வள்ளி நாச்சியார் தனது பிறந்த ஊருக்கு சென்று அங்கே உள்ள இழுப்பண்ணை என்னும் இடத்தில் ஒரு ஆலயத்தை வைத்து வழிபட்டார். அந்த ஆலயம் வல்லன் இழுப்பண்ணை நாச்சிமார் கோவில் என் இப்போதும் அழைக்கப் படுகின்றது.

1960ம் வருடம் ஆலய உரிமையாளராக இருந்த வேலுப்பிள்ளை சபாபதி அவர்கள் தன் வறுமை காரணமாய் வர்த்தகராயிருந்து அருணசலம் அவர்களிடம் ஒப்படைத்தார். அருணாசலம் அவர்கள் இவ்வாலத்தை முழுமையாக புனரமைத்து வடமேற்கு மூலையில் நாச்சிமாரை பிரதிட்டை செய்து மூலஸ்தானத்திலே வேலாயுதத்தையும் பிரதிட்டை செய்தார். அதன்பின்னர் இவ்வாலயம் பாலசுப்பிரமணியர் ஆலயம் ஆயிற்று.

இவ்வாலயத்திலே அன்று தொட்டு நித்திய நைமித்திய பூசைகள் சிறப்பாய் நடைபெற்று வருகின்றன. அருணாசலம் அவர்களை தொடர்ந்து இவ்வாலயத்தின் பரிபாலனத்தை ஏற்ற இராமநாதன் என்பார் 1970 களின் ஆரம்பத்தில் இவ்வாலயத்திற்கு அழகிய சித்திரத் தேரொன்றை உருவாக்கினார்.

மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயிலின் கொடியேற்றம், எட்டம் திருவிழா, பூங்காவனம், தீர்த்தம் உட்பட சிறப்பான சித்திரதேரோட்டம் வெகுவிமரிசையாக ஆண்டுதோறும் நடைபெறும். மேலும் சூரன்போர், வாழை வெட்டு, கந்தசஸ்டி திருவெம்பாவை போன்ற திருவிழாக்களும் மிக சிறப்பானதாக நடைபெற்று வருகின்றன.

திருவெம்பாவை அதிகாலை 4 மணிக்கு ஆரம்ப மணியோசையுடன் தொடக்கி திருப்பள்ளி எழுச்சி படி துயில் எழுப்புதல் மங்கள வதியகசேரி கூட்டு வழிபாடு என வரிசையாக நடைபெற்று காலை ஆறரைக்கு முடிவுறுதல் வரலாற்றுபதிவாகும்.இதே காலத்தில் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் அதிகாலையிலேயே சங்கு சேமக்கலம் சகிதம் கிராமந்தோறும் பள்ளி எழுப்பும் தொன்மை வாய்ந்த நிகழ்வை மேற்கொள்வர். இவ்வாலயத்தின் கூட்டு வழிபாடு மன்றம் புங்குடுதீவில் மிக சிறப்பு பெற்றது என்றால் மிகையாகாது.

இவ்வாலயத்தின் நிர்வாகப் பணிகளில் வே.சபாபதி வி.அருணாசலம் .வி.இராமநாதன் அ.பா.பாலசுப்ரமணியம் இ.குலசேகரம்பிள்ளை க.தியாகராசா வி.சுப்பிரமணியம் பொ.நாகேசு க.அம்பலவாணர் க.நாகநாதி கு கதிர்காமு கோ .நாகேசு பரராசசிங்கம் கி.சவுந்தரநாயகி வே.இளையதம்பி அ.இளையதம்பி நடராசா க.வீரசிங்கம் பா.பாலசுந்தரம் து.ரவீந்திரன்.அ.சண்முகநாதன் ந.தர்மபாலன் வே.சுப்பிரமணியம் கு.கிருபானந்தன் ஆகியோர் சிறப்பாகக் கடமை ஆற்றியிருந்தனர் .

1991 காலப் பகுதியில் இராணுவம் உட்புக பெரும்பாலான மக்கள் இடம்பெயர ஆலயம் பொலிவிழந்து போனது. பின்னர் சோ.சிவலிங்கம் தலைவராகவும் கு.கிருபானந்தன் செயலாளராகவும் கி.சவுந்தரநாயகி பொருளாளராகவும் கொண்ட புதிய பரிபாலன சபையும் உருவாகியது. பின் வந்த காலங்களில் தம்பிபிள்ளை என்பவர் தானே தனித்து ஆலயத்தை துப்பரவு செய்து தினமும் விளக்கேற்றி வழிபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. 2002 வருடம் முதல் நித்திய நைவேத்திய பூசைகள் மீளவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

2013 இல் இவ்வாலயம் மீளவும் சிறப்பாக புனரமைக்கப்பட்டதோடு ஆலயத்திற்கு புதியதொரு இராஜ கோபுரமும் அமைக்கப்பட்டுள்ளது. 26.06.2013 அன்று ஆலயத்திற்கு சிறப்பாக கும்பாபிடேகமும் இடம்பெற்றது.

ஆலய புகைப்படங்கள்