பறாளை விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணப் பட்டினத்துக்கு வடமேற்கில் சமுத்திரக்க கரைக்கு சமீபத்தில் தொல்புரம் மற்றும் சோழியபுரம் என்று இரண்டு ஊர்கள் இருக்கின்றன. தொல்புரம் என்பது பழைய ஆசாரங்களை அனுட்டித்தவர்கள் இருந்ததினால் வந்த பெயர் என்றும், சோழியபுரம் என்பது இந்தியாவிலிருந்த சோழியர்கள் வந்திருந்ததனால் வந்த பெயர் என்றும் கூறுவர். சோழியர்புரம் சுழிபுரம் என மருவியதென சொல்லுகின்றார்கள். சுழிபுரம் முற்காலத்தில் செந்தமிழ்க் கல்விக்கும் சைவாசாரத்திற்கும் உறைவிடமாய் இருந்தது. இந்தச் சுழிபுரத்தில் உள்ளது பறாளாய் என்னும் இடம். பறாளாய் என்பது பறாளை என மருவியது.

திசைமழுவன் என்னும் சிற்றரசன் அரசு செய்த இடம் இதற்கு சமீபத்திலுள்ளது என்பர். இந்த இடம் மழுவைக்காடு என்று சொல்லப்படும். இந்த இடத்தில் திசைமழுவன் காலத்தில் விளங்கிய சம்பேசுரன் என்னும் சிவாலயம் இருந்த இடம் அழிந்து கிடப்பதை இப்போதும் காணலாம். இன்னும் இதற்கு சமீபத்தல் இராமபிரான் பாதம் வைத்த காரணத்தால் திருவடி நிலை எனப் பெயர்பெற்ற ஒரு தலம் இப்போதம் வழிபடப்பெற்று வருகின்றது. இத்தலம் யாழ்ப்பாணத்துக் கீரிமலையைப்போல மூர்த்தி தலம் தீர்த்த விசேடங்களை பெற்றது. இங்கேதான் பறாளை விநாயகர், முருகன் தீர்த்த உற்சவங்களும், பொன்னாலை கிருஸ்ணன் கோவில் தீர்த்த உற்சவங்களும் நடைபெற்று வந்தன.

இந்தப் பறாளையில் ஒரு விநாயகர் ஆலயம் தமிழரசர் காலத்தில் கட்டப்பட்டிருந்து. போர்த்துக்கேயர் மற்றைய சைவஆலயங்களை இடிக்கின்ற காலத்தில் இதனையும் இடிக்கத்தொடங்க, ஒரு காகம் வந்து இடிப்பித்த அதிகாரியின் கண்ணைக்கொத்தி இடிக்க விடவில்லை. அதனால் அப்பிள்ளையாருக்கு கண்ணைக்கொத்தி காக்கைப் பிள்ளையார் என்று பெயர் வழங்கலாயிற்று. விநாயகராலயத்திற்கு சமீபமாக முருகன் ஆலயம் ஒன்றும் உண்டு.

இவ்விநாயகர் ஆலயம் காலகதியில் சிதிலமடைந்திருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இவ்வாலயம் புதிப்பிக்கப்பட்டு கும்பாபிடேகம் முதலியன நடைபெற்றன. காலத்துக்கு காலம் ஊர்மக்களின் உதவியுடன் புனரமைப்பு செய்யப்பட்டு வந்த ஆலயம் 1960ம் ஆண்டளவில் மலாய் நாட்டிலிருந்த சுழிபுரம் ஐக்கிய சங்கத்தாரின் உதவியுடன் களஞ்சியம் மடைப்பள்ளி என்பனவும் மீளமைக்கப்பட்டன.

இப்போது ஆலயத்தில் தவறாது நித்திய நைமித்த பூசைகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலயத்தின்மீது எழுந்த நூல்களுள் நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் செய்த பறாளை விநாயகர் பள்ளு பிரசித்தமானது.

ஆலய புகைப்படங்கள்