Menu

உரும்பிராய் பர்வதவர்த்தனி அம்மன் கோயில்

ரும்பிராய்க் கிராமத்தில் மூன்று கோயில் எனப் பிரசித்தம் பெற்ற ஆலயங்களில் ஒன்று உரும்பிராய் பர்வதவர்த்தினி அம்பாள் கோயில். உரும்பிராயின் தென்மேற்திசையில் கருணாகரத் தொண்டைமானால் தாபிக்கப்பட்ட கருணாகரப் பிள்ளையார் ஆலயம் அமைந்திருக்கின்றது. அவ்வாலயத்தின் வடகீழ் எல்லையில் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. அவ்வாலயத்தின் கிழக்கெல்லையில் கோயில் கொண்டு அருள்பாலிக்கின்றார் பர்வதவர்த்தினி அம்பாள்.

இவ்வாலயம் தற்போது இருக்குமிடத்தில் பெரு வில்வமரம் ஒன்று இருந்ததாயும் அவ்வில்வ மரத்தடியே நாகபூசை செய்து வந்து விநாசித்தம்பி என்பார் ஒரு சிறுகுடிலில் அம்பாளைத் தாபித்து வழிபட்டு வந்தார் என்பர். இவரது கனவில் அம்பாளே தோன்றி தனக்கு ஆலயமெடுக்க அருட்செய்ததாய் ஒரு வாய்மொழிக் கதையும் உண்டு.

1930ம் வருடமளவில் குடிசையாய் இருந்த இவ்வாலயம் விநாசித்தம்பியரின் பேரனான ஆ. வேலுப்பிள்ளை என்பவரின் முயற்சியால் ஊரவர்களின் உதவியுடன் கற்கோயிலாக அமைக்கப்பெற்றது. ஊரவர்கள் ஆலயத்துக்கு பல காணிகளையும் உபயம் செய்தனர். 1932ம் வருடம் ஆலயத்தில் முதலாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.

காலந்தோறும் சிறிது சிறிதாக பொதுமக்கள் பங்களிப்புடன் திருப்பணி வேலைகள் இடம்பெற்றன. பிரதான மண்டபங்கள், பரிவார மூர்த்தங்களுக்கான சந்நிதிகள் கொடித்தம்பம் என்பனவும் சிவாகம முறைப்படி அமைக்கப்பெற்று 1948ல் கும்பாபிடேகமும் நடைபெற்றது. ஆலயத்தில் பத்துநாள் நைமித்தய பூசைகளும் நடாத்தப்படத் தொடங்கின.

இதன் பின்னர் ஆலயம் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டு புதிய கருவறையும் விமானமும் பிரதான மண்டபங்களும் மணிக்கோபுரமும் அமைக்கப்பெற்று 1963ம் வருடம் கும்பாபிடேகம் நடைபெற்றது. கோவில் காலத்துக்கு காலம் திருத்தவும் புணருத்தாரணம் செய்யப்பட்டு 1990இலும் பின் 2004 இலும் கும்பாபிடேககங்கள் நடைபெற்றன.

2017ம் வருடம் ஆலயத்திற்கு ஒரு பஞ்சதள இராஜகோபுரம் அமைக்கப்பெற்று கும்பாபிடேகம் நடைபெற்றது.

இவ்வாலயத்தே மக்கள் தனித்தனியே பொங்கிப் படைத்து வழிபடும் வழக்கம் உண்டு.

பர்வதவர்த்தனி அம்பாள் மீது அடியார்கள் தோத்திரங்களைப் பாடியிருக்கின்றார்கள். பர்வதவர்த்தனி அம்பிகை அந்தாதி என்ற நூலினைக் கவிஞர் செ. ஐயாத்துரை அவர்கள் பாடியிருக்கின்றார்கள்.

பொன்னார் உரும்பையிற் போதரும் தேவி புகலியர்கோன்
முன்னாள் அருந்த முலைப்பால் சுரந்த முழுமுதல்வி
எந்நாளும் தேவர் ஈண்டி இறைஞ்சிடும் ஈசுவரி
எந்தாய் பருவதவர்த்தினி அம்மைதாள் ஏத்துவனே.

என்று நாமும் பர்வதவர்த்தினி அம்பாள் தாள்பணிந்து உய்வோமாக.

ஆலய புகைப்படங்கள்