Menu

இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயம்

யானை முகம் மூன்று விழிகளும் நான்ற வாயினையுமுடைய ஞானமே வடிவான விநாயகப்பெருமான் பரராஜசேகரன் என்னும் திருநாமத்துடன் தெய்வீகத்திருவுருவும், வைதீகத்திருவுருவம் மிக்க இணுவையம்பதியில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகின்றான்.

இவ்வாலயமானது இற்றைக்கு ஆறு நூற்றாண்டுகட்குப் பழமை வாய்ந்த பெருமைக்குரியது. மேலும் அரசபரம்பரையோடு தொடர்புடைய பெருமையுடையது. யாழ்ப்பாண அரசின் சிம்மாசனப் பெயர்களில் ஓன்றான ‘பரராஜசேகரன்’ என்னும் பெயர்தாங்கி நிற்கின்றது. 14,15ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்தை ஆரியச்சக்கரவர்த்திகள் ஆண்டுவந்தனர். அவர்களில் பதினோராம் தலைமுறையில் வந்த பரராஜசேகர மன்னன் இவ்வாலயத்தை கட்டினான். இதனால் இவ்வாலயத்திற்குப் பரராஜசேகரப்பிள்ளையார் கோயில் என்னும் திருநாமம் வழங்கப்பட்டு வருகின்றது.

பரராஜசேகர மன்னன் காலம் (1478-1519) வரையாகும். எனவே இவ்வாலயமும் அத்தனைக்குப்பழமை வாய்ந்ததாகும். புரராஜசேகரன் போர்மேல் செல்லுங்கல் இப்பெருமானை வழிபட்டுச் சென்றதாகவும், நூற்றுக்கும் அதிகமான இளநீர்க்குலைகள் யானைமேல் ஏற்றி வந்தும், குடம் குடமாகப் பால் கொண்டுவந்தும் அபிடேகித்து வணங்கினான் என்றும் நாளும் வற்றாது குளம்போல் நின்ற இடம் குளக்கரை எனவும் வழங்குவதாயிற்று. மன்னனால் ஆலயத்திற்கு அருகே ஒரு கிணறும் திருக்கேணியும்,திருமஞ்சக்கிணறும் தோண்டப்பட்டது. ஆகம விதிப்படி பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. பரராஜசேகரப்பிள்ளையாரின் திருவுருவம் தென்னிந்தியச் சிற்பிகளால் செதுக்கப்பட்டு கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டடது என்பர்.

யாழ்ப்பாணத்தில் போர்த்துக்கேயர் ஆட்சியேற்பட்டு மக்கள் மதச்சுதந்திரம் தடுக்கப்பட்ட நிலையிலும் இணுவில் மக்கள் ஆலயத்தை மடம் ஒன்று பொய் கூறி இடிபடாது காத்தனர். மூலமூர்த்தியை ஒரு கொட்டகையிலே கொண்டு சென்று வைத்து வழிபட்டு வந்தார்கள். மடம் என்று கூறியதால் இது மடத்துவாசல் பிள்ளையார் கோயில் எனவும் அழைக்கப்படலாயிற்று. இவ்வாலயம் பல ஆண்டுகளாக சுதைக் கட்டடமாக சிதிலமடைந்து இருந்தமையால் அடியார்களும் ஊரவர்களும் இணைந்து ஸ்ரீ பரராஜசேகரனுக்கு கோவிலெடுக்க மனமொருமைப்பட்டனர். பரராஜசேகர விநாயகனின் அருளுடன் அயராது திருப்பணியில் ஈடுபட்டனர். இதன் பேறாக மடாலயத்தின்கண் மூர்த்தியும், மணிக்கூட்டு வைரவரும், ஒருதிருமஞ்சனக்கிணறும், ஒருதிருக்கேணியுமாக இருந்த ஆலயம் பஞ்சதள இராசகோபுரத்துடனும், பரிவார மூர்த்திகளுடனும், பஞ்சமுக விநாயகருடனும், மணிக்கூட்டுக்கோபுரமும், அழகிய முகப்பை அலங்கரிக்கும் மணிமண்டபமும் போததென்று தென்மேல் திசையில் மூன்றுமாடிக் கட்டடங்களைக்கொண்ட மணிமண்டபமும், தெற்குவாசலில் பஞ்சதள கோபுரமும் அமையப்பெற்று சிறப்புடன் திகழ்கின்றது.

இவ்வாலயத்தில் காலத்திற்கு காலம் கும்பாபிடேகங்கள் ஆகம விதிப்படி நடைபெற்றுள்ளன. ஆதியில் சுன்னாம்புக்கட்டிடமாக இருந்த ஆலயம் 1928 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 10 ஆண்டுகளின் பின் 1939ம் ஆண்டளவில் கற்கோவிலாக்கப்பட்டு ஸ்ரீ சதாசிவக்குருக்களினால் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி நடாத்தப்பட்டு, மண்டலாபிஷேகமும் உற்சவங்களும் தொடர்ந்து நடைபெற்றன. தொடர்ந்து 1961ம் ஆண்டு தை மாதம் 9ம் நாளிலும்,1972ம் ஆண்டு ஆவணி மாதம் 19லும்(04.09.1972), 1984ம் ஆண்டு தைமாதம் 23ம் நாளிலும் (06.02.1984) இராசகோபுரமும் நடைபெற்றன. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற வேண்டிய கும்பாபிஷேகம் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 1995 ல் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1997 ம் ஆண்டு தை மாதம் 27 ம் நாள் (09.02.1997) மகா கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது.

ஆரம்ப காலத்தில் மூலமூர்த்தியுடன் எழுந்தருளி விநாயகருடனும் அமைந்த ஆலயம் இன்று பஞ்சமுக விநாயகர், நடராஜர், முத்துக்குமாரசாமி, மகாலட்சுமி, சந்தானகோபாலர், வைரவர், நாகதம்பிரான், நவக்கிரகங்கள், பரிவார மூர்த்தியதகவும் மேலும் நர்த்தன விநாகர், பிரம்ம கணபதி, சதுர்முக கணபதி, துர்க்கை அம்மன், தஷ்னாமூர்த்தி, முதலிய தெய்வங்கள் கோஷ்ட தெய்வங்களாகவும், பாலகணபதி, பாலமுருகன், சூரியன், சந்திரன், முதலிய தெய்வங்களும்,சிவலிங்கம், சண்டேசுவரர், இராசேஸ்வரி அம்மன் முதலிய தெய்வங்களும், நித்திய விநாயகரும் தெய்வங்களாக அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஸ்ரீ பரராஜசேகரப் பிள்ளையார் கோயிலின் முகப்பை ஐந்து தளங்கள் கொண்டதும் தெய்வீக கலையம்சங்கள் பொருந்தியதுமான இராசகோபுரம் அலங்கரிக்க அயலே வடகீழ்பக்கமாக அமைந்த கண்டாமணிக் கோபுரம் எழுந்து நிற்க, கிழக்கே தீர்த்த மண்டபம் வர்ண வேலைப்பாடுகளுடன் காட்சிதர, தெற்கே பஞ்சமுக விநாகப் பெருமானுக்குரிய ஐந்துதள இராசகோபுரம் அழகிய சிற்ப வேலைகளுடன் காட்சிதர, மேற்கே அழகிய மணிமண்டபமும் காடசிதர, பரராஜசேகரன் ஆலயத்தோடு கூடியதாக தெற்கே கல்யாண மண்டபம் விளங்க, வடக்கே கல்வித்தானம் வழங்கும் இந்துக்கல்லூரி அமைந்திருக்க ஸ்ரீ பரராஜசேகரப்பிள்ளையார் கொலுவிருந்து அருள்பாலித்து வருகின்றார்.

மேலும் இவ்வாலயத்திருப்பணி வேலைகளை இவ்வூர்ப்பிரமுகர்களும், அடியவர்களும் சேர்ந்து நிறைவேற்றி வருகின்றனர். இவ்வாலயம் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், சபா மண்டபம், ஸ்தம்ப மண்பம், வசந்த மண்டபம், யாக சாலை, பாக சாலை, வாகன சாலை, மணி மண்டபம், மணிக்கூட்டு வைரவர் ஆலயம் என்ற வகையில் அமைந்துள்ளது. இவ்வாலயம் சிறந்தோங்க ஊர்த் தொண்டர்களும், இளைஞர்களும், வர்த்தகப் பெருமக்களும் உதவியுள்ளனர்.

இவ்வாலயப்பிரதம குருவாக விளங்கி ஆகம விதிப்படி பூசைகள் நடாத்தி வருபவர் சிவஸ்ரீ வை.சோமாஸ்கந்தக்குருக்கள் ஆவர்களும், அவருக்கு அடுத்தாற்போல் அவரது மகன் சோ.அரவிந்தக்குருக்களும் ஆவார். இதற்கு முன்னதாக சதாசிவக்குருக்கள், வைத்தீஸ்வரக்குருக்கள், சிவஞானக்குருக்கள் ஆகியோர் அவ்வாலயப் பிரதம சிவாச்சாரியார்களாக இருந்து பூசைகள் விழாக்களை நடாத்தியுள்ளனர்.

ஆலயத்தில் தினமும் ஆறுகாலப்பூசைகள் நடைபெற்று வருகின்றது. நித்திய விநாகர் தினமும் வீதிசுற்றுவது வழமை மேலும் மகோற்சவ விழாக்கள், மாதப்பிறப்பு அபிடேகங்கள்,விசேட நாட்களான சிவராத்திரி, வருடப்பிறப்பு, பங்குனி உத்திரம், ஆனி உத்திரம், ஆடிப்புரம், பூர்வபக்க சதுர்த்தி, அமரபக்க சதுர்த்தி, நவராத்திரி, கௌரி விரதம், கந்த சஷ்டி, திருவெம்பாவை, விநாயகர் சஷ்டி, முதலியனவும் கலசாபிடேகம் முதலியனவும் நடைபெற்று வருகின்றது. விழாக் காலங்களில் வீதி சுத்தம் செய்தல், பேரிகை அடித்தல்,தீவர்த்தி பிடித்தல், சுவாமி காவுதல், கூட்டுதல், கழுவதல் முதலிய தொண்டுகளையும் இவ்வூர் இளைஞர்கள் செய்து வருகின்றார்கள்.

கல்வி வசதி,வறுமைப்பட்டோருக்கு உதவுதல்,வசதி அற்றோருக்கு வைத்தியச் செலவு செய்தல் போன்ற பணிகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது. ஆதிகாலத்தில் ஆலயங்கள் சமூகத்திற்கு வேண்டிய பணிகளை உதவும் வகையில் அமைந்திருந்தன. இதே போன்றே ஒரு நிலை இங்கும் உருவாகி ஆலயம் சமூகத்திற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. அதே வேளை ஆத்மீகத்தை வளர்க்கும் நிலையமாகவும் விளங்குகின்றது.

இவ்வாலயத்தில் எழுந்தருளியிருக்கும் பரராஜசேகரர் மீது பல பக்தி இலக்கியங்களும் எழுந்துள்ளன.

அம்பிகைபாக உபாத்தியாயர் மகன் அ. பொன்னம்பலப்பிள்ளை அவர்கள் ஓர் ஊஞ்சல் பதிகம் பாடியிருக்கின்றார். சைவப்பிரசாரகர் வை. கதிர்காமநாதன் அவர்கள் பஞ்சமுக விநாயகர் மீது ஒரு உஞ்சல் பதிகம் பாடியிருக்கின்றார். இயலிசைவாரிதி கலாநிதி வீரமணி ஐயர் அவர்களும் ஓர் ஊஞ்சல் பதிகமும் அந்தாதியாய்க் கீர்த்தனைகளும் பாடியிருக்கின்றார். தங்கமாமயிலோன் என்பார் போற்றிப் பத்து பாடியிருக்கின்றார்கள். இதைவிடவும் பரராஜசேகர பிள்ளையார் மீது ஒரு திருவிரட்டை மணிமாலையும், மும்மணிக்கோவையும், பதிகமும் பாடப்பெற்றிருக்கின்றன.

வேதத்தின் தத்துவங்கள் தெளிந்த ஞான
    வேதவியா சப்பெருமான் பாரதத்தை
ஆதியில் கூறிடவே அழகொழுக
    ஆனைமுகா ஏடும் எழுத் தாணி ஏந்தி
மேதினிக்கே பாரதத்தைக் காவி யமாய்
    மேருவிலே வரைந்தனையே வாரணனே
பூதலத்தில் பூம்பதியாம் இணுவை யூரின்
    பரராஜ சேகர கணேசா போற்றி

ஏன்று நாமும் பரராஜசேகர பிள்ளையாரை ஏற்றிப் பாடி வணங்கியருள் பெறுவோம்.

ஆலய புகைப்படங்கள்