Menu

பன்னாலை சிவபூதவராயர் ஆலயம்

தெல்லிப்பழைச்சந்தியிலிருந்து மேற்கு நோக்கி அம்பனைச் சந்தியைக் கடந்து பிரதான வீதிவழி 600 மீற்றர் வரை மேற்கே செல்ல ஓர் ஒழுங்கை வடக்குப்புறம் வரத்தலம் கற்பக விநாயகர் ஆலயத்தினை சென்றடைகின்றது. அங்கிருந்து வடக்கே செல்ல மேற்கு நோக்கி பிரிந்து செல்லும் பாதையில் சிறிது தூரத்தில் பன்னாலை அருள்மிகு சிவபூதவராயர் ஆலயத்தை தரிசிக்க முடியும்.

பூர்வீகம்

பன்னாலை நகரத்தஞ்சீமா என்னும் பெயரிய நிலப்பரப்பில் ஏறத்தாள 1780ஆம் அண்டளவில் வாழ்ந்த பெத்தநன்னியர் எனும் பெரியார் தாம் குடியிருந்த நிலத்திற்குப் பக்கத்திலிருந்த மாட்டுத்தொழுவத்தயனின்ற இலுப்பை மரத்தடியில் ஒரு கல்லு வைத்து வழிபட்டு வந்தார். அவ்வண்ணம் வழிபட்டு வருங்கால் ஒரகண்டாகாரமான பூதவடிவம் அவர் கனவிற்றோன்றி தாம் சிவபூதவராயர் என்னுங் குறிப்புக்காட்டி, தம்மை அந்த இடத்திலே வழிபடலாம் என்று அருளி மறைந்தது. கிழக்கு வாயிலை உடையதாக அந்த இடத்திலே ஒரு கொட்டிலை அமைத்து வழிபட்டு வந்தார் பெரியவர். காலப்போக்கிலே பெத்தநன்னியரின் பேரனான வைரவப்பிள்ளை என்பார் மூலஸ்தானம் வேறு வழிபடுவோர் நிற்குமிடம் வேறு என்ற வகையில் அமைந்த கட்டிடத்தை உருவாக்கினார். அவருக்கு பின் அவர் மைந்தன் நாகமுத்து அவர்கள் சுண்ணாம்புச்சுதை கொண்டு சுவர்களையும் தூண்களையும் எழுப்பிக் கூரைக்கு ஓலைபோடச் செய்தார். சிவபூதராயரின் கற்பனை உருவத்தை திரைச்சீலை ஒன்றிலே வரைந்து அதனை கர்ப்பக்கிரகத்தில் வைக்கப்பட்டுள்ள கண்ணாடியில் விம்பம் விழக்கூடிய வகையில் தொங்கவிட்டு வழிபாடு நடைபெற்று வந்தது. அபிடேக ஆராதனைகள் எல்லாம் விம்பத்திற்கே நடைபெற்று வந்தன.

நாகமுத்து அவர்காலத்திலேயே திருமஞ்சனக்கிணறும் கர்ப்பக்கிரகத்திற்கு ஈசானத்தில் வெட்டப்பட்டது. நாகமுத்து அவர்களின் மறைவினைத் தொடர்ந்து அவர் மகன் சுப்பிரமணியம் திருப்பணிகளை தொடர்ந்தார். இரண்டாவது மூன்றாவது மண்டபங்கள் சீமெந்தினால் கட்டப்பட்டு ஓடு போடப்பட்டன. இவ்வாலயம் ஆகமவிதியமைதிக்கு புறம்பான முறையிலேயே கட்டப்பட்டுள்ளது. கர்ப்பக்கிரகத்திற்கு நேரெதிரே மூன்றாவது மண்டப வாயிலிலுள்ள ஊஞ்சலின் வடக்குப்புறமாக 17 அடி உயர மணிக்கோபுரமும், அதற்கு வடக்குப் புறத்தில் நாகதம்பிரானும், அதற்கு வடக்காக வைரவரும் எழுந்தருளியுள்ளனர். ஈசான மூலையில் வசந்த மண்டபம் உண்டு. தென்கிழக்கில் மடைப்பள்ளி களஞ்சிய அறை என்பன உண்டு. உள்வீதியை சுற்றி மதிலும் அமைக்கப்பட்டுள்ளது.

நைமித்திய விழாக்கள்.

பங்குனி அத்த நட்சத்திரத்தை முதலாக கொண்டு பதினைந்து தினங்கள் அலங்கார உற்சவம் நடைபெறும். சித்திரை வருடப்பிறப்பு, சித்திரைப்பூரணை, ஆனி உத்தரம், ஆடிப்பூரம், விஜயதசமி, திருவாதிரை என்னுந் தினங்களிலும் சுவாமி வீதியுலா வருவதுண்டு.

கும்பாபிடேகம்.

1948 வைகாசி திருவோண நட்சத்திரத்தில் முதலாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. பின்னர் 1982 பங்குனி அத்த நட்சத்திரத்தில் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. இக்கும்பாபிடேகத்தை தொடர்ந்து ஆலயத்தினை சிறப்பாக பரிபாலனம் செய்யவென பரிபாலன சபை ஒன்று தெரிவாகியது. 2001ம் ஆண்டு பல புனருத்தாரண பணிகளின் பின் பஞ்சகுண்ட பட்ச புனராவர்த்தன பிரதிட்ட மகா கும்பாபிடேகம் நடைபெற்றது.

மூர்த்திகள்

மூலமூர்த்தி சிவபூதவராயர் இரு திருக்கரங்களை மட்டும் உடையவராக காணப்படுகின்றார். முத்தலைச் சூலம் ஒரு திருக்கரத்திலும், தாமரைப்பூ மற்றொரு திருக்கரத்திலும் காணப்படுகின்றன. கருங்கற் சிலா விக்கிரகம் நிற்கும் நிலையுடையது. நாகதம்பிரானுக்கு கருங்கற் சிலையும், எழுந்தருளி சிவபூதவராயருக்கும் வைரவருக்கும் ஐம்பொன் விக்கிரகங்களும் காணப்படுகின்றன.

ஆலய புகைப்படங்கள்