Menu

புலோலி பர்வதவர்த்தினி சமேத பசுபதீஸ்வரர் ஆலயம்

டமராட்சியின் புலோலி மண்ணில் பர்வதவர்த்தினி சமேதராக கோயில்கொண்டு அருள்பாலிக்கின்றார் பசுபதீஸ்வர சிவபெருமான். இவ்வாலயத்தை பருத்தித்துறைச் சிவன் கோயில் என அழைப்பாருமுளர்.

இவ்வாலய வரலாறு வாய்மொழிக் கதையாகவே உள்ளது. 18ம் நூற்றாண்டின் பிற்கூற்றில் தென்னிந்தியாவிலிருந்து புலோலி வந்தடைந்த சுவாமியார் ஒருவர் ஆலயம் இருக்குமிடத்திலிருக்கம் கொன்றைமர அடியில் தான் கொண்டு வந்த கருங்கல்லாலான பிள்ளையார் மற்றும் தாமிரத்தினாலான வீரபத்திரர் விக்கிரகங்களை பிரதிட்டை செய்து வழிபட்டு வந்தாரென்றும், காரைக்காலிலிருந்து அவருடன் காரைக்காலிலிருந்து வந்து சேர்ந்து நட்புடனிருந்த சுப்பிரமணியம் கணபதிப்பிள்ளை என்பார் இச்சுவாமியார் மறைவின் பின்னர் சுவாமியாரின் சொற்படி அருகிலிருந்து குளத்தை தூர்வாரி அதனுள் கண்ட புதையல் பொருள் எடுத்து இவ்வாலயத்தை கட்டி சுவாமியார் விருப்பப்படி பசுபதீஸ்வரர் ஆலயம் எனத் திருநாமமிட்டார்கள் என்பர். சுவாமியருக்கு சின்மயானந்தக் குருக்கள், கதிரவேல் என இரு சீடர்களுமிருந்தனர் என்பர். சுவாமியாருடைய சமாதிக்கோயில் இப்போதும் இவ்வாலயத்திலுண்டு. கதிரவேல் அவர்களுடைய பரம்பரையினர் இன்றும் சுவாமியாருக்கு பூசை செய்து வருகின்றனர்.

1782ல் இந்தியாவிலிருந்து வரவைக்கப்பட்ட சிற்பாச்சாரியார்களை கொண்டு பொழிகற்களினால் மூலஸ்தானம், அர்த்த மண்டபம், மகாமண்டபம், அபிசேக மண்டபம் என்பவற்றை கட்டுவித்து 1822ல் கும்பாபிடேகத்தையும் நடாத்தினார்கள் கணபதிப்பிள்ளை அவர்கள். 1840ம் வருடம்வரை அவரே இவ்வாலயத்தை பரிபாலித்தும் வந்தார்கள். அவருடைய சந்ததியினரே இன்றும் இவ்வாலயத்தை பராமரித்து வருகின்றார்கள். சுவாமிகள் கொண்டு வந்த பிள்ளையார் விக்கிரகம் இரண்டாம் பிரகாரத்தில் மேற்கில் அமைந்துள்ளது. வீரபத்திரர் விக்கிரகம் தேவசபையில் உள்ளது. கொன்றை மரம் இன்றும் தலவிருட்சமாயுள்ளது. சின்மயானந்தக் குருக்களின் பரம்பரையினர் ஆலய ஓதுவார்களாயுள்ளனர்.

இவ்வாலயம் காலத்துக்கு காலம் புனரமைக்கப்பெற்று 1944, 1966, 1987, 2005 மற்றும் 2019ம் வருடங்களில் கும்பாபிடேககங்கள் நடைபெற்றிருக்கின்றன.

ஆறுமுகநாலவர் அவர்கள் பிரசங்கம் செய்த கோயில்களில் புலோலி பசுபதீஸவரர் ஆலயமும் ஒன்று. இக்கோவிலினை பரிபாலித்த இராமசாமிச் செட்டியாரின் வேண்டுகைக்கு இசைந்து நாவலர் பெருமான் இவ்வாலயத்திற்கு ஒரு ஊஞ்சற் பதிகமும் பாடியுள்ளார்கள்.

மழை பொழிந்த நாளொன்றில் ஆறுமுக நாவலரின் பிரசங்கத்திற்கு

அன்பர்கண் ணீர்மழை யுஞ்சிவ னார்மெய் யருள்மழையும்
மன்பிர பந்த மழையும் பிரசங்க மாமழையும்
கொன்புனை நீலப் புயலின் மழையும் கொடைமழையும்
இன்பொடு மல்கப் புலோலிமெய் வாழ்வினி லேறியதே

என்று பாடலாய் தொகுப்புச் சொல்லி சிவசம்புவாக இருந்தவர் நாவலரால் அன்போடு புலவரே என அழைக்கப்பட்டு சிவசம்புப் புலவரானதும் இப்பசுதீஸ்வரர் ஆலயத்திலேயே.

ஆறுமுக நாவலர் பாடிய ஊஞ்சற் பதிகம் உள்ளடங்கலாய் இவ்வாலயத்தின் மீது பல பக்தி இலக்கியங்கள் எழுந்துள்ளன். மதுரைத் தமிழச்சங்கப் பண்டிதை பதமாசினி அம்மாள் அவர்கள் தனது இருபத்திரண்டாவது வயதிலேயே பசுபதீஸ்வரவர் மீது பதிற்றுப்பத்தந்தாதி பாடியிருக்கின்றார்கள். வித்துவான் கிருஷ்ணபிள்ளை அவர்களும் ஒரு பதிற்றுப் பத்தந்தாதி பாடியிருக்கின்றார்கள். சிவசம்புப் புலவரவர்கள் முத்துக்குமாரசுவாமி திருவூஞ்சல் பாடியிருக்கின்றார்கள். ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த முத்துக்குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் பசுபதீசுரரந்தாதி பாடியிருக்கின்றார்கள். கலாநிதி வீரமணி ஐயர் அவர்கள் பல கீர்த்தனங்களும் பாடியிருக்கின்றார்கள்.

உலகம் புகழப் புலோலி நகருறையுங் கருணைப் பசுபதியே
நிலவுஞ்சடை மேனிலாவணியு நிமலாசரண பங்கயமேல்
மலரும் பேரன்புடையார்க்கு வானின்பதமு மெளிதாக்கு
மலகில் சோதியருட் கடலேயடி யேன்றனைக் கண்பாராயோ

என்று சைவர்களெல்லோரும் பர்வதவர்த்தினி சமேத பசுபதீஸ்வரப் பெருமானை வேண்டி உய்வோமாக.

ஆலய புகைப்படங்கள்