Menu

நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான் ஆலயம்

யாழ்ப்பாணத்துக்கு அணித்தாயுள்ள அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்று அமைந்து சிறந்திருக்கும் நயினாதீவினிலே உள்ள தம்பகைப்பதியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றார் பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான்.

இளைய பண்டாரம் கோயில் எனவும் ஸ்ரீ வீரவாகு கோயில் எனவும் ஆதியிலே அழைக்கப்பட்ட இவ்வாலயம் ஏறத்தாள 375 வருடங்களுக்கு மேலாக ஒரு கிராமியத்தெய்வ ஆலயமாக இருந்து தம்பகைப்பதி மக்களால் வழிபட்டு வந்ததாக ஆங்காங்கே குறிப்புக்கள் உண்டு.

1933ம் வருடம் இடம்பெற்ற கும்பாபிடேகத்தின் பின்னர் மும்மலங்களையும் அழிக்கின்ற சிவமூர்த்தங்களின் ஒன்றான வீரபத்திரர் ஆலயமாகவே இவ்வாலய வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாலயத்திற்கு இதன்பின்னர் ஒரு கும்பாபிடேகம் 1954 இலும் இடம்பெற்றது. 1975ம் வருடத்திலிருந்து 1981ம் வருடம் வரையான காலப்பகுதியில் ஆலயம் ஊரவர்களின் பங்களிப்புடன் பெரும் மாற்றம் கண்டது. மூலமூர்த்தியாக இருந்த வேலும் வாளும் வேறிடத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு மூலஸ்தானத்தில் வீரபத்திரர் விக்கிரகம் பிரதிட்டை செய்யப்பட்டது. பத்திரகாளி அம்மனுக்கு ஒரு சந்நிதானமும், முருகப்பெருமானுக்கு ஒரு சந்நிதானமும், விநாயகருக்கு ஒரு சந்நிதானமும் அமைக்கப்பட்டன. வைரவப்பெருமான விக்கிரகமும் பிரதிட்டை செய்யப்பட்டது. இப்புனருத்தாரணங்களின் பின்னர் 2-9-1981ல் கும்பாபிடேகம் வெகுசிறப்பாய் நடைபெற்றது. மக்களின் இடப்பெயர்வுகளால் ஆலயம் பரிபாலம் சிறிதுகாலம் தடைப்பட்டாலும் 1997ம் வருடம் மீளவும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு தட்சணாமூர்த்திக்கு ஒரு மாடக்கோயிலும் சண்டேஸவரருக்கு பரிவாரக் கோயிலொன்றும் புதிதாயமைக்கப்பெற்று 24-11-1997ம் வருடம் கும்பாபிடேகம் மிகச்சிறப்பாய் இடம்பெற்றது.

மேலும் புனருத்தானங்களின் பின்னர் 2011ம் வருடமும் ஒரு கும்பாபிடேகம் இடம்பெற்றது. 2014ம் வருடம் ஆலயத்தில் தேரடி வைரவருக்கு ஒரு பரிவாரக் கோயிலும் அமைக்கப்பெற்றிருக்கின்றது.

ஆலயத்தின் தல விருட்சங்களாய் வில்வமும் ஆலும் அமைந்திருக்கின்றன.

தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமான் மீது பலர் தோத்திரப் பாடல்கள் சொல்லியிருக்கின்றார்கள். பசிக்கவி பராராஜசிங்கம் என்பார் மானச பூஜா அலங்கார மாலை என்ற சதகம் செய்திருக்கின்றார்கள். அருட்கவி விநாசித்தம்பி அவர்கள் திருவூஞ்சல் செய்திருக்கின்றார்கள்.

பவமறு மென்றுன் பாதமலரில் பனிமலராம்
நவமுறு முல்லை சண்பகம் அல்லி நற்றாமரையும்
அவமறு சிந்தையில் அர்ச்சனை செய்தனன் அண்டர்பதி
சிவனருட் தோற்றமாம் வீரபத்திர நின் சேவடிக்கே. 1

என்று சைவர்களெல்லோரும் பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப் பெருமானை வழிபட்டு அருள்பெற்றுய்வோமாக.

  1. மானச பூஜா அலங்கார மாலை

ஆலய புகைப்படங்கள்