Menu

அளவெட்டி தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோயில்

வ்வீழ நாட்டில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடபால் அளவெட்டி என்னும் அரிய புகழ் படைத்த ஊர் அமைந்துள்ளது. நகுலேஸ்வரத்திற்கு நேர்தெற்கே இரண்டு கல் தொலைவில், தெல்லிப்பளை பண்டைத்தரிப்பு வீதியில் அளவையூரின் அமைதிமிகு சூழலில், ஓமெனும் மந்திரத்துட் பொருளாயிருக்கும் உலகத்து நாயகி அன்னை முத்துமாரி கோயில் கொண்டு அருள்பாலிக்கும் தவளக்கிரி திருத்தலம் அமைந்திருக்கின்றது. இத்திருத்தலத்தின் வரலாற்றைச் சரிவரச் சொல்லக்கூடிய சரித்திர புராணச் சான்றுகளோ சாசன ஏடுகளோ எவையுமில்லை. கர்ண பரம்பரைக் கதைகளே ஓரளவுக்கு கைகொடுக்கின்றன. கோவிலின் பழமையை அன்னையின் திருவுருவ அமைப்பும், முன்பிருந்த தூண்களும், கட்டடமமைக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் எடுத்துச் சொல்லுகின்றன.

நீண்டகாலமாகவே இக்கோயிலில் வேள்விக்கொடியேற்றி பலியிடும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. நாமறிந்த வரையில், 1918ம் ஆண்டளவில் ஒரு கும்பாபிடேகம் நடைபெற்றிருக்கின்றது. இக்கும்பாபிடேகத்தை கோணேசர் கோவிலைச்சேர்ந்த சிவஸ்ரீ சரவணமுத்துக் குருக்களவர்கள் நடத்தி வைத்திருக்கின்றார்கள். 1924, 25 அளவில் பலியிடுதல் நிறுத்தப்பட்டு மகோற்சவம் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். தொடர்ந்து பத்து ஆண்டுகள் வரை மகோற்சவம் நடந்திருக்கின்றது. ஆயின் திரும்பவும் பலியிடுதல் வழக்கத்தை கொண்டுவர சிலர் ஈடுபட்டமையினால் பெரிய குழப்பம் ஏற்பட்டு மகோற்சவம் தடைப்படலாயிற்று. பலியிடும் முயற்சியும் பலிக்கவில்லை. 1935ம் ஆண்டு தூபியின் திருத்த வேலைகள் செய்யப்பெற்று, இரண்டாவதாக மாக கும்பாபிடேகம் நடைபெற்றது. தொடர்ந்த சில ஆண்டுகளின் பின்னர் மகோற்சவம் நடைபெறத்தொடங்கியது.

1965ம் ஆண்டு தை மாத அத்த நட்சத்திரத்திலே மூன்றாவது மகா கும்பாபிடேகம், கோவிலிலே நடைபெற்ற பல திருத்த திருப்பணி வேலைகளைத் தொடர்ந்து நடைபெற்றது. வீரசைவக் குருக்கள் மட்டுமன்றி பிராமணக்குருமாரும் சில சந்தர்ப்பங்களிலே மகோற்சவத்தில் பணி புரிந்திருக்கின்றார்கள்.

இக்கோவிலுக்குரிய தலவிருட்சம் சரற்கொன்றை. இது வடக்கு வெளிவீதியில் வானுற வளர்ந்து நிற்கின்றது. இக்கோவிலின் பின்புறமாக ஆதி வீரபத்திர சுவாமி ஆலயம் 1982ம் ஆண்டில் எடுக்கப்பட்டிருக்கின்றது.

பின்னர் 1989ம் ஆண்டில் தொடக்கப்பட்ட திருப்பணி வேலைகள் நிறைவு செய்யப்பட்டு 31-01-1990ல் கும்பாபிடேகம் நடைபெற்றது. நாட்டுச் சூழ்நிலையால் 1997 வரை தடைப்பட்ட ஆலய நித்திய பூசைகள் 1998 இல் இடம்பெற்ற கும்பாபிடேகத்தின் பின் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. 2015ல் ஆலயத்திற்கு ஒரு புதிய சித்திரத்தேரும் அமைக்கப்பெற்றிருக்கின்றது.

முன்பு விநாயகர், காத்தவராயர், அம்பிகை மூவரும் உற்சவ காலங்களில் பவனி வரும் வழக்கம் இருந்திருக்கின்றது. இப்போது அம்பிகை மட்டுமே உற்சவ காலங்களில் வீதி வலம் வருகின்றாள், நடராஜப்பெருமானுக்கு இங்கு தனிச்சந்நிதி இருக்கின்றது. இது தெற்கு நோக்கி அமைக்கப் பெற்றிருக்கின்றது. பரிவார மூர்த்திகளான விநாயகர், முருகன், நாகேஸ்வரர், வைரவர் சந்நிதிகளும் இங்கு இருக்கின்றன.

அன்னையின் அருட்பெருக்கினை போற்றிப் புகழ்ந்து பாடப்பட்ட பாடல்கள் நயமிக்கவை. ஆக்கியவர் யாரென்று தெரியாத தவளக்கிரி முத்துமாரியம்மன் பதிகம், வழிவழி அண்ணாவிமார் போற்றிப்பரவிய துதிப்பாடல் தொகுப்பு, வைத்தியர் அம்பலவாணர் கதிரித்தம்பியவர்கள் செய்த தவளக்கிரி முத்துமாரியம்மன் இரட்டை மணிமாலை, பன்னாலையூரைச் சேர்ந்த அறிஞர் மு. பொன்னம்பலப்பிள்ளையவர்கள் இயற்றிய முத்துமாரியம்மன் திருவூஞ்சல், கவிஞர் செ. கதிரேசர்பிள்ளையவர்களின் திருப்பள்ளியெழுச்சி, தளக்கிரி முத்துமாரியம்மன் அந்தாதி என்பன குறிப்பிடத்தக்கவையாகும்.

வெண்மையான சிகரங்களை கொண்டிருப்பதனால் இமயமலைக்குத் தவளக்கிரியென்றும் பெயர் உண்டு. இமயத்தின் செல்வி பார்வதி. பார்வதிதேவியின் ஒரு அம்சமான அன்னை முத்துமாரி எங்கள் தவளக்கிரியிலிருந்து அருளாட்சி செய்து வருகின்றாள்.

காப்பது நின் கடனாத மெமை நிதங் கண்மணியே
மாப்பெரு மாட்டி தவளக் கிரிப்பதி மாரியம்மா
ஆப்பி லடுக்கி லகப்பட்ட வானர மாயிருந்தேன்
கூப்பிட் டழைத்துக் குறைதீர்த்த மெல்லியற் கோமளமே.

என்று தவளக்கிரிவளர் தாயை பணிந்து சஞ்சலம் தீர்ந்திடுவோம்.

ஆலய புகைப்படங்கள்