சிவகாமி அம்பாள் சமேத சிதம்பரேஸ்வரர் கோவில்

இவ்வாலயம் சிதம்பரேஸ்வரர் கோயில் என்பதை விட சிவகாமி அம்பாள் ஆலயம் எனவே ஊர்மக்களிடையே வழங்கி வருகின்றது.

சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் ஆலய வரலாறு – பண்டத்தரிப்பான்புலம், காரைநகர்

1917ம் ஆண்டு வீரகத்தி கந்தப்பரினால் இத்தேவஸ்தானம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. பின் கந்தப்பர் ஆறுமுகம், கந்தப்பர் சண்முகம் ஆகிய ஆதீனகர்தாக்களால் கோவிலானது புதிதாகக் கட்டப்பட்டு விஸ்தரிக்கப்பட்டு பிரதமகுரு பிரம்மஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்களினாலும் மற்றைய சிவாச்சாரியர்களினாலும் ஆவணி மாதம் 1927ம் ஆண்டு முதலாவது கும்பாபிடேகம் நடாத்தப்பெற்றது.

அதன்பின் கோவிலானது சண்முகம் கந்தையாவினால் விஸ்தரிக்கப்பட்டு 1955ம் ஆண்டு ஆவணிமாதம் இரண்டாவது கும்பாபிடேகம் நடைபெற்றது.

1966ம் ஆண்டு தேவஸ்தானம் கந்தையா பரமசாமியினால் பொறுப்பேற்கப்பட்டது. 1971ம் ஆண்டு அவரின் மறைவின்பின் கந்தையா கணேசு, கந்தையா சிவஞானத்தினால் பொறுப்பு ஏற்கப்பட்டு அவர்களது காலத்தில் திருத்தவேலைகள் நடைபெற்று 1977ம் ஆண்டு ஆனி மாதம் 13ம் திகதி மூன்றாவது கும்பாபிடேகம் நடைபெற்றது. மீண்டும் இவர்களது காலத்தில் 1987ம் ஆண்டு நடேசர் தேவஸ்தானம், வசந்த மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுத் திரும்பவும் இதற்கு கும்பாபிடேகம் செய்யப்பட்டது.

நாட்டின் போர் நிலை காரணமாக மக்களின் இடப்பெயர்ச்சியினாலும், 1993ம் ஆண்டு தொடக்கம் 1996ம் ஆண்டு ஆனி மாதம் வரை கோவில் பூட்டப்பட்டு பராமரிப்பற்ற நிலை ஏற்பட்டது, 2000ம் ஆண்டு ஆடி மாதம் 3ம் திகதி கந்தையா சிவஞானத்தினாலும், அம்பிகை அடியார்களின் ஆதரிவினாலும், சிவஸ்ரீ. தா. மகாதேவாக் குருக்கள், சிவஸ்ரீ. க. ச. சோமாஸ்கந்தக் குருக்கள் ஆகியோரின் வழிபாட்டின்கீழ் பாலஸ்தானம் செய்யப்பட்டது.

2000ம் ஆண்டு புரட்டாதி மாதம் 1ம் திகதி சிவன் மூலஸ்தானத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கோவில் ஸ்தபதியாக கோபாலரத்தினம் ஆச்சாரியார் நியமிக்கப்பட்டு சிவன் மூலஸ்தானம் இரட்டை பஞ்சாங்க அமைப்பில் கட்டத்தீர்மானிக்கப்பட்டது, அதன்பின் சிவன் மூலஸ்தான அனேக வேலைகள் 2001ம் ஆண்டு புரட்டாதி மாதம் முடிக்கப்பட்டது. அம்மன் மூலஸ்தானமும், மற்ற பரிவார மூர்த்திகளின் மூலஸ்தானங்களும் சீரழிந்து கிடந்ததன் காரணமாக அவையும் மீள கட்டப்படல் வேண்டுமென்ற முடிவெடுக்கப்பெற்று, 2001ம் ஆண்டு ஐப்பசி மாதம் பிள்ளையார், அம்மன், முருகன், சண்டேஸ்வரர் கோவில்களுக்கும் அடியவர்களால் அடிக்கல் நாட்டப்பெற்று உரிய திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஆலயமானது முழுமையான சிவன் தலமாக அமையவேண்டும் என்கின்ற காரணத்தினால், மேலும் தட்சணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சரஸ்வதி, நால்வர், பூமாதேவி, விஷ்ணு, ஸ்ரீதேவி, மகாகாளி, வீரபத்திரர் முதலிய ஆலயங்களும் புதிதாய் அமைக்க தீர்மானிக்கப்பெற்று 2003ம் ஆண்டு ஆனி மாதம் 30ம் திகதி எல்லா வேலைகளும் பூர்த்தியாக்கப்பெற்று 09.07.2003 அன்று மகாகும்பாபிடேகம் செய்யப்பெற்றது.

சிவகாமி அம்பிகா சமேத ஸ்ரீ சிதம்பரேஸ்வரர் கரைநகரிலே அமர்ந்திருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.

ஆலய புகைப்படங்கள்