Menu

அளவெட்டி குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம்

ளவெட்டி, தெல்லிப்பழை, மல்லாகம் ஆகிய மூன்று கிராமங்களும் இணையும் எல்லைப்பகுதியில் அமைந்து சிறக்கின்றது கணேஸ்வரம் என அழைக்கப்படுகின்ற குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம். இவ்விநாயகர் ஆலயத்தின் வரலாறு மிகத்தொன்மையானது. பதினான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வாழ்ந்த சம்பந்த ஞானியார் என்கின்ற துறவி இவ்வாலயச் சூழலிலே வாழ்ந்து, சித்திகள் பல செய்து, சமாதியடைந்தார் என்கின்ற கர்ணபரம்பரைக் கதைகளை இன்னமும் நாங்கள் கேட்க முடியும்.

சம்பந்த ஞானியார் சமாதியடைந்த இடத்திலே இன்று தெற்கு நோக்கிய ஒரு வைரவர் ஆலயம் உண்டு. இங்கு ஆல், அரசு, வேம்பு ஆகிய மூன்று மரங்களும் தலவிருட்சமாய் பின்னிப்பிணைந்துள்ளன. இவர் சமாதியடைந்த இடத்திலே அளவெட்டி வாழ் மக்கள் கோயிலமைத்து வழிபாடு செய்த வந்தனர். இதனால் இக்கோயில் சம்பந்த ஞானியார் கோயில் என அழைக்கப்பட்டு வந்தது.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்ட காலத்தே, இந்துக்கோயில்கள் பலவும் தரைமட்டமாக்கப்பட்டமையினால், இவ்வாலய விக்கிரகமும் நிலத்தின்கீழே புதைத்து வைக்கப்பட்டது. அந்நியராட்சி ஒழிந்த பின்னர், மக்கள் மீண்டும் கோயில்களை புனரமைக்கலாயினர். அக்காலத்தே அளவெட்டியை சேர்ந்த சைவக்குருக்கள் ஒருவர், தனது வீட்டுக்கு கிணறு வெட்டியபோது, இவ்விநாயக்பெருமானுடைய சிலை கண்டெடுக்கப்பட்டது. அரியதும், பெரியதும், அழகியதுமாயிருந்து இவ்விநாயகர் விக்கிரகத்தை கிணற்றடியருகே கோயில் அமைத்து வழிபட்டு வந்தனர். அக்காலம்தொட்டே ஆலயம் குருக்கள் கிணற்றடி விநாயகர் ஆலயம் என்று பெயர்பெற்றது. 1845 அரசாங்கப் பதிவுகளிலும் இவ்வாலயம் அப்பெயராலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

1900ம் ஆண்டளிவில் விநாயகர் மீது அளவிலா பக்தி கொண்டிருந்த பரியாரி காசிப்பிள்ளை என்பார் தன் நிலங்களையும் பொருட்களையும் கோயிலுக்கென வழங்கி, கோயிற் திருப்பணிகளை ஆரம்பித்தார். இவர் சிறிது காலத்தில் மறைய, அவரது மைத்துனரான கந்தப்பர் சுப்பிரமணியம், திருப்பணிகளை பொறுப்பேற்று, நிறைவு செய்தார். 1910இல் கும்பாபிடேகமும் நடைபெற்றது. 1920இலிருந்து, ஆடித்திங்கள் உத்தர நட்சத்திரத்திலே ஆரம்பித்து, ஆடிப்பூரணையை அந்தமாய் கொண்டு 10 நாட்களுடன் கூடிய தேர்த்திருவிழா நடைபெற ஆரம்பித்தது.

விநாயகர் சட்டி, விநாயகர் சதுர்த்திகள், விஷயதசமி, கந்தசட்டி, மார்கழித் திருவாதிரை, சிவராத்திரி என பல விழாக்களும் ஆலயத்தே கொண்டாடப்படுகின்றன. விழிசிட்டி பண்டிதர் சி. கதிரிப்பிள்ளை இயற்றிய “திருமருவும் யாழ்ப்பாணம் நாட்டில் மேலத் தெல்லிநகர்” என்று தொடங்கும் திருவூஞ்சற் பாட்டும் ஆலயத்துக்குண்டு.

1910இற்கு பின்னர் 1973 இல் திருப்பணி வேலைகள் சிறிது சிறதாய் ஆரம்பிக்கப்பட்டு, பணம் போதாமையினால் தடைப்பட்டு பின்1978 இல் பூரணப்படுத்தப்பட்டடு, அவ்வாண்டே கும்பாபிடேகம் நடைபெற்றது. 1980இல் முருகன். கஜலட்சுமி, நடராஜர் ஆகிய பரிவார மூர்த்தி ஆலயங்களும் அமைக்கப் பெற்றன.

1999ம் ஆண்டு அதிகப்பிடியான திருப்பணி வேலைகளோடு பாலஸ்தாபனம் நடைபெற்றது, நவக்கிரகங்கள், வைரவர், சண்டேசுவரர் மற்றும் மனோன்மணி அம்மன் ஆகியோருக்கு பரிவார ஆலயங்கள் அமைக்கப்பட்டதுடன், வசந்த மண்டபம், யாகசாலை என்பனவும் புனரமைக்கபட்டு, நீண்டகாலமாய் பூர்த்திசெய்யப்படாதிருந்த உள்வீதி கொட்டகை அமைக்கபட்டு 2001ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றது.

தூபியுடன் அமைந்த பல பரிவார மூர்த்திகளை கொண்ட இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தெற்கு வீதியிலே ஒரு மடமும் உண்டு. ஏழு மண்டபங்கள் இவ்வாலயத்தை அணி செய்கின்றன. 11 பேர் கொண்ட நிர்வாகக்குழு ஆலயத்தை நிருவகித்து வருகின்றது.

ஆலய புகைப்படங்கள்