Menu

கொக்குவில் கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்

கொக்குவில் “புதுக்கோயில்” என அழைக்கப்படும் கிருபாகர சிவசுப்பிரமணியசுவாமி ஆலயம் 1830ம் ஆண்டளவில் அமைக்கப்பெற்றது (1860ம் வருடமென கூறுவாருமுளர்). இக்கோயில் தோன்றுவதற்கு முன்பே இதன் அண்மையில் ஒரு தீர்த்தம் (கேணி) இருந்துவந்தது. அது இருந்த இடத்திலேயே தற்போதைய தீர்த்தக் கிண்று அமைந்துள்ளது.

இவ்வாலயம் தோன்றிய காலத்தில் இதன் சுற்றாடலில் ஒரு பதினைந்து சைவ குடும்பத்தினர் வாழ்ந்துவந்தனர். அவர்கள் தாங்கள் இறைவழிபாடு செய்யவும் தொண்டாற்றவும் விழாக் கொண்டாடவும் இறைவன் திருக்கோயில் ஒன்று தங்கள் ஊருக்கு இன்றியமையாது என்றெண்ணி இவ்வாலயத்தை தாபித்தனர். நினைத்ததை முடிப்பதற்குப் பஞ்சகர்த்தா சபை ஒன்றை ஏற்படுத்தினர். ஆரம்பகாலங்களில் அச்சபையில் அங்கம் வகித்தவர்கள் திருவாளர்கள் சண்முகம் முருகேசு, வேலாயுதர் முருகேசு, சட்டநாதர், சின்னப்பு, திரித்தம்பு, அம்பலவாணர், தரமோதரம்பிள்ளை என்பவர்களாவர். கோயில் அமைக்கும் பொறுப்பு சண்முகம் முருகேசு என்பவரிடம் விடப்பட்டது. சபையினர் இக் கோவிலை அமைப்பதற்காக ஒரு காணியை வாங்கித் தர்மசாதனஞ் செய்தனர். அத்துடன் திரு. சண்முகம் முருகேசுவும் தனது காணியொன்றினை தர்மசாதனம் செய்தனர். ஈற்றில் இவ்விரு நிலப்பகுதிகளும் கோயில் நிலங்களாயின.

சண்முகம் முருகேசு கோயில் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு முயற்சி செய்யலானார். இம்முயற்சியின் பயனாகக் கோவிலின் பிரதான அங்கங்களான கர்ப்பக்கிருகம், அதன் மேல்விமானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன்மண்டபம், விநாயகர் ஆலயம், மஞ்சனக் கிணறு என்பன போன்ற திருப்பணிகள் நிறைவேறின. அக்காலத்திலே பிரபல பஞ்சாங்க கர்த்தாவாய் விளங்கியவரும் கொக்குவில் வாசியுமான இரகுநாதையர் அவர்களைப் பிரதம குருக்களாய்க்கொண்டு, விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத சுப்பிரமணியர் ஆகிய மூர்த்திகளைப் பிரதிட்டை செய்வித்து மகா கும்பாபிடேகமும் மங்களகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இக் கோவிலைச் சார்ந்தவர்களால் திருப்பணிவேலைகள் காலந்தோறும் நிறைவேற்றப்பட்டன. அவற்றுள் தம்பமண்டபம் ச. சபாரத்தின முதலியார், தாமோதரம்பிள்ளை ஆகியோராலும், கோவிற் சுற்றுமதில் சண்முகம் முருகேசு பெண் பறுபதத்தாராலும், வசந்தமண்டபம் சபாரத்தின முதலியாராலும், வைரவமூர்த்தி பிரதிட்டை ஆ. குட்டித்தம்பியாலும், நவக்கிரக சந்நிதி இராமலிங்கம் ஆறுமுகத்தினாலும், வேணுகோபால மூர்த்தி சந்நிதி செ. இரத்தினப்பிரகாசத்தினாலும், ஆறுமுக சுவாமி மூர்த்தி சந்நிதி ஊரிலும் மலேசியாவிலும் பணஞ் சேர்த்து சு.காசிப்பிள்ளை என்பவராலும் செய்யப்பட்ட திருப்பணிகளாகும். உற்சவ மூர்த்திகளுள் சுப்பிரமணியர் சண்முகம் முருசுவினதும், விநாயகர் சு. காசிப்பிள்ளையினதும், பாலசுப்பிரமணியர் வேலாயுதர் முருகேசுவினதும் உபயங்களாகும்.

தீர்த்தக்கிணற்றுக்கு அண்மையிலுள்ள தண்டாயுதபாணி ஆலயம் பொ.அப்பாத் துரையினதும், மூர்த்தி – சீனிவாசகம் பெண் இராசாத்தியம்மாவினதும் உபயங்களாகும். கோயில் முதல் வீதியின் மூன்று பக்கத்துக் கொட்டகையும் வை. சின்னத்தம்பி என்பவரின் உபயமாகும். மடைப்பள்ளிக் கிணறு சு. சங்கரசிவத்தின் உபயமாகும், மடைப் பள்ளியும் களஞ்சியமும் தொடக்கத்திலேயே அமைக்கப்பட்டவை. வாகனசாலை சபாரத்தின முதலியாராற் கட்டப்பட்டது.

சண்முகம் முருகேசு அடியவர்களின் ஆதரவுடன் கோயில் நித்திய பூசையைக் கவனித்துவந்தார். திருவலகிடுதல் முதலிய தொண்டுகளைத் தாமே செய்துவந்தார். அவருக்குப் பின், சைவசீலராயும் சித்தாந்த விற்பன்னராயும் விளங்கிய குகதாசர் சபாரத்தின முதலியார் முன்னையவர் போலவே கோவிற் பூசை முதலியவற்றைக் கவனித்து வந்தார். அவருக்குப்பின் சிறிதுகாலம் கோவிற் குருக்களே வழிபடுவோரின் உதவியை நேரிற் பெற்றுக் கோவிற் பூசையை நடாத்தி வந்தார். பின்பு விசுவலிங்கம், முத்துத்தம்பி, ஞானசுந்தரம், இராசரத்தினம், மாணிக்கவாசகர், வினாசித்தம்பி, சின்னத்தம்பி காசிப்பிள்ளை, சிற்றம்பலம், செ. நடராசர், சதாசிவம் முதலியோர் பரிபாலன சபைகளை ஆண்டுதோறும் நிறுவிக் கோவிலின் சகல அலுவல்களையும் கவனித்துவந்தனர். மாதந்தோறும் பணஞ் சேகரிக்குந் தொண்டை ந.மருதப்பு என்பார் செய்துவந்தார். இந்த அடிப்படையிலேயே கோயில் நிருவாகம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

கோயில் முதற் பூசகராயிருந்தவர் சின்னப்பா ஐயர். பின்பு அவர் கோவிற் பூசையையும் கோவிலைச்சேர்ந்த குடும்பத்தினரின் புரோகிதத்தையும் தம்முடைய தம்பியாரான ஐயாத்துரை ஐயரிடம் ஒப்படைத்தார். அவருக்குப்பின் அவரது மருகர் இராசரத்தினக் குருக்கள் பூசகராயிருந்தார். அவரது குடும்பத்தினரே தொடர்ந்து அத்தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வரன் முறையிலே குமாரசாமிக் குருக்களுக்குப் பின் தகுந்த குருக்கள் ஒருவர் இல்லாதது ஒரு பெருங் குறையாயிருந்த போதிலும், பரிபாலன சபையார் கோவிற் பூசைகளும் உற்சவங்களும் செவ்வனே நடைபெற ஆவன செய்தனர். இப்படிச் சில ஆண்டுகள் கழிய, ஈற்றில் 1982ஆம் ஆண்டு தொடக்கம் குமாரசாமிக் குருக்களின் குடும்பத்தினரே கோவிற்பூசைகளுக்குப் பொறுப்பாயிருந்து சேவை புரிந்துவருகின்றனர்.

கோயில் அமைக்கப்பட்டபின் கந்த புராணப் படிப்பு, அறுபத்து மூவர் பூசைகள் ஆகியன சிலகாலம் தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றன. இவற்றிற் கலந்துகொண்டு தொண்டு புரிந்தவர்களுள் சபாரத்தினமுதலியார், ஐயாத்துரை, கந்தப்பிள்ளை, மருதப்பு, செல்லத்துரை ஆகியோர் விதந்து குறிப்பிடத்தக்கவர்களாவர். பின்பு அலங்கார உற்சவம் நீண்டகாலமாக நல்லமுறையிலே நடைபெற்றுவந்தது.

பின்னர், பற்மநாதபிள்ளை என்பவரின் முயற்சியால், வழிபடுவோரின் உதவியுடன் கொடித்தம்பம், தேர், யாகசாலை முதலிய திருப்பணிகள் 1927இல் நிறைவேறியதும் மகோற்சவம் தொடங்கப்பட்டது. வண்ணை வைத்தீசுவரன் கோவிற் பிரதம குருக்களா யிருந்த வைத்தியநாதக் குருக்களாலே முதல்முதலாக மகோற்சவம் தொடக்கி வைக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் கோவிற் பரிபாலன சபைப் பிரமாணங்கள் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன. 1957 ஆம் ஆண்டு ஐப்பசி மாதந் தொடக்கம் கோயில் நித்திய பூசைகள் நடைபெற்று வருகின்றன.

திரு. வை. சின்னத்தம்பி, கோயில் உட்பிரகார மண்டபங்களைத் தம்முடைய சீவிய காலத்திலே கட்டிமுடிக்கப் பேராவல் கொண்டிருந்தாராயினும் இத் திருப்பணி முழுவதும் நிறைவுபெறாததால், பின்பு அவருடைய மகன் வை. சி. சிவகுரு 1964 ஆம் ஆண்டில் இத்திருப்பணி வேலைகளைச் செவ்வனே செய்து முடித்துதவினார்கள். இவை தவிர, 1962 இல் திருமதி சின்னத்துரை வள்ளியாச்சி அம்பாள் கோவிலின் வடக்கு வீதியிலே தன்து பொருட்செலவில் கடையொன்று கட்டுவித்துக் கோவிலுக்கு நன்கொடையாகக் கொடுத்திருக்கிறார். 1967 கோயில் அடியார்களி பண உபயத்தில் புதியதொரு கண்டாமணி கோவிலில் அமைக்கப்பெற்றது.

இக் கோவிற் பரிபாலன சபை சங்க அமைப்புச் சட்டத்தின் கீழ் 1962ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆந் தேதி பதிவு . செய்யப்பட்டது. திரு.க.பொன்னம்பலம் 1963 தொடக்கம் 1980 வரை பரிபாலன சபையின் தலைவராயிருந்து பெரும்பணி யாற்றினார். 1965 ஆம் ஆண்டு ஆவணி மாதம் 17ஆந் தேதி இக்கோவிலில் வாலஸ்தாபனக் கிரியைகள் நடைபெற்றன. சைவ அடியார்களின் ஆதரவுடன் திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு. 1966 இல் மஹா கும்பாபிஷேகமும் தொடர்ந்து 40 நாள் மண்டலாபிஷேகமும் ஈற்றில் சங்காபிஷேகமும் நடைபெற்றன.

இக்கோயிலின் பழைய தேர் பழுதடைந்து விட்டதால் அடியார்கள் சேர்ந்து பெரும் பொருட்செலவில் 1979ம் வருடம் புதிய தேர்த் திருப்பணியை ஆரம்பித்து 1983ம் வருடம் தேரினை வெள்ளோட்டம் செய்தார்கள்.

1987 இன் பின்னரான யுத்தகாலத்தில் இவ்வாலயம் சிதைவுக்குள்ளாகிய போதிலும் முருகனடியார்களின் பெருமுயற்சியால் ஆலயம் மீளவும் புனர்நிர்மாணிக்கப் பெற்று 1998ம் வருடம் கும்பாபிடேகமும் நடைபெற்றது. இதன் பின்னர் ஆலயம் மேலும் பல திருப்பணிகள் கண்டு 2015ம் வருடம் கும்பாபிடேகமும் நடைபெற்றது. இவ்வாலயத்தில் இராஜ கோபுரம் ஒன்றில்லாத குறையினைத் தீர்கக அடியவர்களின் முடியற்சியால் 2019ம் வருடம் பஞ்சதள இராஜகோபுரம் ஒன்று அமைக்கப்பெற்று 2020ம் வருடம் மகாகும்பாபிடேகமும் நடைபெற்றது.

கிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் மீது பல பக்தி இலக்கியங்கள் எழுந்துள்ளன. சபாரத்தின முதலியார் அவர்கள் மும்மணிக் கோவையும், வெண்பா அந்தாதியும் பாடியிருக்கின்றார்கள். சைவப்புலவர் சின்னத்தம்பி அவர்கள் கலித்துறை அந்தாதியும் ஊஞ்சலும் பாடியிருக்கின்றார்கள். அருட்கவி விநாசித்தம்பி அவர்கள் தோத்திரமாலை பாடியிருக்கின்றார்கள். செ. வேலாயுதபிள்ளை அவர்கள் திருப்பள்ளி எழுச்சியும் பதிற்றுப்பத்தந்தாதியும் வேணுகோபாலர் மீது ஒருபா ஒருபஃதும் பாடியிருக்கின்றார்கள். கலாநிதி வீரமணி ஐயர் அவர்கள் பக்திப்பாடல்களும் பாடியிருக்கின்றார்கள்.

ஆதிபுக ழாறுபடை ஏறிவிளை யாடிவரும்
    அப்பனே ஆறுமுகனே
அசுரகுல சங்கார அடியர்தொழு சிங்கார
    அயில்வேல் பிடித்த அரசே
சோதிதரு மைந்தனே வேதமணி கந்தனே
    தூய செந் தமிழழகனே
சொல்லினிய குக்குடத் துவசனே நடமிடும்
    தோகைமாமயில் வாகனா
நாத மொடு விந்துகலை மூலமே ஐங்கரன்
    நயக்கும் மழலைச் சிறுவனே
நடனகுஞ்சரி வள்ளி நாதனே ஓங்காரா
    நாரணி தரும் பாலனே
தீதகல நின்பதும் சேவடி நினைந்து பணி
    செய்தின்ப மெய்த அருள்வாய்
திருமருவு கொக்குவிற் பதியமர் க்ருபாகர
    சிவசுப்பிர மண்ய குருவே.

என்று நாமெல்லாம் கிருபாகர சிவசுப்பிரமணியப் பெருமானை போற்றிப்பாடி அருள்பெற்று உய்வோமாக.

ஆலய புகைப்படங்கள்