அச்சுவேலி காட்டுமலைக் கந்தன்

மிழுக்கு அணிகலனாய் சைவத்துக்கு உறைவிடமாய் விளங்கும் யாழ்ப்பாணத்திலே சான்றோர்களோடு சமன்செய்து உயரும் தெங்குகளும் கமுகுகளும் வானத்தை முட்ட வளம் பல பெருகும் அச்சுவேலிக் கிராமத்தில் நாவலம்பதி என்னும் ஒரு பகுதி உண்டு. அப்பதியிலே வேலுடையான் அன்பர் வினைகளையும் காலுடையான், முக்கண்ணுடையன் முருகப்பெருமான் கோயில் கோயில் கொண்டருளிய வரலாறு புதுமையானது.

காட்டுமலைக் கந்தசுவாமி கோவில் எண்பது வருடச் சரித்திரத்தை கொண்டது. நாவலம்பதியிலே வசித்த சீனியர் என்னும் அருளாளன் தமக்குற்ற தீரா நோயைத்தீர்க்கு முகமாக ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தெட்டாம் ஆண்டு கதிர்காம யாத்திரையை மேற்கொண்டார். அக்காலம் இந்த யாத்திரை அச்சம் தருவதும், அருமையுடையதும் புனிதமுள்ளதுமான ஒரு தவப்பேறாகும். காடும் மலையும் கடந்த அருளாளன் சீனியர் அவர்கள் கதிர்காமத்தை அடைந்து, அதிரவரு மாணிக்க கங்கைதனில் மூழ்கி அன்போடு கதிர்காம வேலவன் பவனி கண்டு கதிரமலை ஏறிக் கந்தனைத் தோத்தரித்து கற்பூரத் தீபமேற்றி விபூதிப் பிரசாதத்தோடு துணையாக வயது முதிர்ந்த ஒரு தம்பதிகளுடனும் ஊர் திரும்பினார். பண்டாரம் போல் வடிவம் தாங்கி வந்த தம்பதிகளுடன் நாவலம்பதி வந்தடைந்து தாம் வதியும் மனைக்குச் சென்றார். வீடு வந்து சேர்ந்தவர்கள் கால் கழுவி வர கிணற்றடிக்குச் சென்றனர். அவ்வேளை துணையாக வந்த தம்பதிகளைக் காணது அருகில் உள்ள கொன்றை மரச் சோலையிலே தேடிப்பார்த்தார். அவர்களைக் காண முடியவில்லை. கந்தனையே வேண்டியவ ண்ணம் தன் மனை புகுந்தார்.

ஊழ்வினை வசத்தால் வந்த நோய்க்கு விபூதியே மருந்தாக எண்ணி அவர் வாழ்ந்தார். நோய் மேன்மேலும் வருத்தியது. கந்தன் கழலிணையே தஞ்சமென எண்ணி நைந்துருகினார். ஒருநாள் முருகன் கனவிலே தோன்றி கதிர்காமத்திலிருந்து கொண்டு வந்த வீபூதிப் பிரசாதத்துள் வேல் இருப்பதையும் அதனை ஒரு புனிதமான இடத்தைக் காட்டி அங்கே தன்னை வைத்துப் பூசித்தால் நோய் தீர்ந்து குணமடைவாய் எனக் கூறிப் போந்தார். அருளாளராகிய சீனியர் தாம் கண்ட கனவின்படியே ஆயிரத்துத் தொளாயிரத்து இருபத்தொன்பதாம் வருடம் ஆனித்திங்கள் இருபத்தைந்தாம் நாள் கதிரமலைக்கந்தனின் அனுக்கிரகத்தோடு கதிர்காம வழி காட்டுமலைக் கந்தனின் ஆலயத்தை நிறுவினார். தமிழ்வேதமாகிய தேவாரம், திருவாசகங்களையே மந்திரமாகக் கொண்டு அவர் அன்போடு செய்த பூசை வெகுவிரைவில் பலன் அளித்தது. நோய் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்தது. அருளாளர் மனம் மகிழ்ந்தார். காட்டுமலைக் கந்தன் கருணையை எண்ணி வியந்தார்.

காட்டுமலைக் கந்தனின் அருட்செயல்கள் எங்கும் பரவுவதாயிற்று. தீராநோய்த் தீர்ந்தருள வல்லான் என்ற செய்தியை நாடெங்கும் பரவுவதாயிற்று. வைத்தியர்களால் கைவிடப்பட்ட நோயாளர்கள் பலர் நீயே தஞ்சமென அடைக்கலம் புகுந்தனர். அருளாளர் சீனியர் அவர்கள் அப்பனை வணங்கி வெந்துயர் தீர்க்கும் விபூதியை அளித்துப் பலரைக் குணமாக்கினார்.

இக்கோவிலில் மூலமூர்த்தி சிவன் ஆக இருக்கவும் ஆறுமுகப் பெருமானுக்கே சிறப்பிடம் தரப்பட்டுள்ளது. சுற்றுப்புறத்தில் விநாயகரும் அம்மையும் வைரவரும் காளியும் பழனியாண்டவரும் பரிவார மூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். ஆலயம் தாபிக்கப்பட்ட காலத்திலிருந்து 1971 ம் ஆண்டு வரை ஆறுமுகப் பெருமானுக்கு விசேட உற்சவமாக ஆனி அமாவாசை தொடக்கம் ஆனிப்பூரணை வரை திருவிழாக்கள் நடைபெற்று வந்தன.

மூவைந்து தினங்கள் வெற்றி வடிவேலுடன் வீதி வலம் வந்த காட்டுமலை வேலனது திருத்தல வரலாற்றில் ஓர் புதுமை நிகழ்ந்தது. அவனருயாலே அவன் வாக்கிற்கமைய 1972 ம் ஆண்டில் திருவிழாவில் மாற்றம் செய்யப்பட்டது. வைகாசி மாதத்தில் வரும் அமாவாசையை அடுத்து வரும் ஆறாவது தினத்தில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆனி அமாவாசை அன்று தீர்த்தோற்சவம் நிகழும் வண்ணம் 25 தினங்கள் திருவிழா நடைபெறுகின்றன. இவ்விழாக்களோடு அம்மைக்குரிய நவராத்திரி பூசைகளும் விழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. இவைகளே அன்றி கார்திகை உற்சவங்கள் சூரசம்ஹாரம் வருடப்பிறப்பு தைப்பொங்கல் தைப்பூசம் என விசேட திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தின் தீர்த்தத்திருவிழா புதுமையானது. செல்வச்சந்நிதி ஆலயத்தினின்றும் பெருகி வரும் தொண்டைமானாறானது வல்லைப் பெரும் பாலத்துக்கூடாக அச்சுவேலிப்பகுதிக்குட் புகுந்து நாவலம்பதியை அடைந்து அப்பாலும் பாய்கிறது. நாவலம்பதியில் இந்த ஆறு வயல்களை உப்பாக்காதவாறு வரம்பெடுத்துத் தடுக்கப்பட்டிருக்கிறது. அதிகம் ஆழமில்லாத இக்குண்று சிறு கிணறு போல் கட்டப்பட்டிருக்கின்றது. இவ்விடத்திலே தான் காட்டுமலைக்கந்தன் பக்தர்கள் புடைசூழ அரோகராச்சத்தம் ஒலிக்கத் தீர்தமாடித் திரும்புகிறான்.

காட்டுமலை திருத்தல வரலாற்றில் அருளாளர் சீனியர் அவர்களால் கட்டப்பெற்று முடிக்கப்படாமலிருந்த திருப்பணி வேலைகள் பலவற்றைத் திருத்தமாகவும் அழகாகவும் பிரதமகுரு சிவகுரு ஐயா செய்து முடித்தார் 1960களில் கோவிலை புனரமைப்புச் செய்து அழகு மிக்க திருத்தலமாக காட்டுமலைகந்தசுவாமி கோயிலைத் நிர்மாணித்த பெருமை தர்மகர்த்தா பிரதமகுரு சீ.சிவகுருவிற்கே உரியதாகும்.மீண்டும் ஆலயத்தைப் புனரமைப்புச் செய்ய எண்ணி 1997 ம் ஆண்டு தற்போது பொலிவுற்று விளங்கும் ஆலயத்தை அமைக்கும் திருத்தொண்டு மேற்கொள்ளப்பெற்று 2000ம் ஆண்டு கும்பாபிடேகம் நடைபெற்றது. காட்டுமலைகந்தனின் கட்டுத்தேர் தொடர்ந்து செயற்பட முடியாமையினால் 1971ம் ஆண்டு அழகிய சித்திரத்தேர் செய்யப்பெற்று ஆறுமுகப்பெருமான் சித்திரத்தேரிலேறி அருளாட்சி புரிந்து வருகின்றான். 1986 ம் ஆண்டு திருமஞ்சம் செய்யப்பெற்று எம்பெருமான் மஞ்சத்தில் காட்சியளித்து அருள்பாலிக்கின்றான். மேலும் மணிக்கூட்டுக் கோபுரமும் கட்டப்பெற்றுள்ளது.

விநாயகராலயம், சக்தி ஆலயம், என பல ஆலயங்கள் சுற்றிலும் நிரம்பியுள்ள அச்சுவேலி நாவலம்பதியிலே உள்ள முருகனை வழிபடு தெய்வமாகக் கொண்டு ஏறக்குறைய 300 குடும்பத்தினர் செல்வத்தோடும் சீர்சிறப்போடும் வாழ்ந்து வருகிறார்கள். கொண்டிருக்கிறது. இவர்கள் மாத்திரமல்ல அயற்கிராமங்களிலிருந்தும் ஏராளமான அடியார்கள் வந்து கந்தனை வந்தனை செய்து திரும்புகிறார்கள். இக்கோவிலை ஸ்தாபித்த அருளாளர் சீனியர் அவர்களால் காட்டுமலைக்கந்தப் பெருமான் மீது பாடப்பெற்ற சில பாடல்களும், அச்சுவேலி தம்பிமுத்துப் பாகவதர்களால் பாடப்பெற்ற ஊஞ்சற் பதிகமும், சி.சிவலிங்கம், இராஜினிதேவி அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற புதிய பிள்ளைத்தமிழும், கு.கணேசன் அவர்களால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தசுவாமி மீது பாடப்பெற்ற அருட்பாடல்கள் என்ற நூலும் பரமானந்தம். சி.பாலமுரளி என்பவரால் பாடப்பெற்ற காட்டுமலைக்கந்தன் புகழ்பாடி என்ற நூலும் பொ.சகலகலாநிதி அவர்களால் பாடப்பெற்ற பதிகநூலும் இக்கோவிலுக்குண்டு. மேலும் பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டக் கந்தன் புகழ் பாடி அவனருள் பெற்று உய்வார்களாக.ஆறுமுகப் பெருமான் நாவலம்பதியில் நம் வினை தீர்க்க எழுந்தருளியுள்ளான். அவனைக் கண்டு காலால் அவனை வலஞ்செய்து பண்ணால் உருகிப்பாடி பணிந்து அருள் பெறுவோமாக.

ஆலய புகைப்படங்கள்