Menu

புலோலி ஆத்தியடி பிள்ளையார் கோயில்

சிவபூமியாம் ஈழத்திருநாட்டின் தலையென விளங்கும் யாழ்ப்பாணத்தில் மர நிழல்களிலும் குளத்தடிகளிலும் சந்திகள் தோறும் விநாயகர் ஆலயங்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றில் பல ஆலயங்களின் வரலாறுகள் இப்போது சரியாக புலப்படாவிடினும் அவை தொன்மை வாயந்தவை.

பருத்தித்துறையின் புலோலி மேற்கிலே கட்டாடிச்சீமா என்றழைக்கப்படுகின்ற இடத்தே விநாயகர் ஆலயம் இருந்தாய் கூறுவர். இது போர்த்துக்கேயர் காலத்தே அழிவுற்றிருத்தல் வேண்டும் எனவும் கருதுவர். இருப்பினும், கட்டாடிச்சீமாவில் இலைமறை காயாய் விநாயகர் வழிபாடு தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஏறத்தாள 1860ம் ஆண்டளவில் கட்டாடிச்சீமாவிலிருந்த விநாயகர் விக்கிரகம் வாய்க்காற்புளியடிக்கு கொண்டு செல்லப்பட்டு விநாயகப் பெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டது. கட்டாடிச்சீமாவாகிய காணியில் ஆத்திமர நிழலில் இவ்விநாயகப் பெருமானை கண்ணுற்று இவ்வாலயம் அமைக்கப்பட்டமையினாலே இவ்விநாயகருக்கு ஆத்தியடிப் பிள்ளையார் எனும் திருநாமமே வழங்கலாயிற்று. அப்பெயர் காலப்போக்கில் இவ்வூருக்கும் “ஆத்தியடி” என வழங்கலாயிற்று. ஒழுக்க சீலர்களாயும், விநாயகர் அடியார்களாயும் வாழந்த பல ஊர்ப்பெரியார்கள் இவ்வாலய அமைவிலும் வளர்ச்சியுலும் முக்கிய காரணிகளாயிருந்துள்ளார்கள்.

இன்று கர்ப்பக்கிரகம் இருக்கும் இடமே அன்று மூலஸ்தானம் அமையப்பெற்றிருந்தது. சிறிய மண்டபமும், பனையோலையால் வேயப்பட்ட கூரையும், சாணத்தினாலே மெழுக்கிட்ட தரையுமாயிருந்துள்ளது.

ஶ்ரீமத் மு. தம்பையாக் குருக்கள் அவர்களே ஆத்தியடி விநாயகப்பெருமானின் பூசகராயிருந்த பாக்கியசாலி. இவர் இக்காலத்தே பூந்தோட்டம் இருக்கும் இடத்தே சிறு மண்குடிசை கட்டிக் குடியிருந்து மிக எளிய முறையில் நித்திய நைமித்திய பூசைகள் செய்து வந்துள்ளார்கள். இவர் காலத்திலேயே ஆத்தியடிப் பிள்ளையார் கோவிலில் கந்தபுராணப் படிப்பு, பிள்ளையார் புராணம், பிள்ளையார்கதை முதலியன ஆரம்பமாகி இன்று வழிமுறை வழிமுறையாக தொடர்ந்து வருகின்றது.

மண்குடிசையும் பனையோலையால் வேயப்பட்ட கோவிலில் இருந்து அருள்பாலித்த விநாயகப் பெருமானை இவ்வூர் விநாயகர் அடியார்கள் 1901ம் ஆண்டு பங்குனி மாதம் 30ம் திகதி பாலஸ்தாபனம் செய்து, அன்றைய சுபதினத்திலேயே புதிதாக அமைக்க உத்தேசித்துள்ள இடத்தில் அடிக்கல் நாட்டும் வைபவத்தையும் செய்துள்ளார்கள்.

தற்போது மடைப்பள்ளி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தெற்குப்பக்கமாக நின்ற பெரிய மாமர நிழலின் கீழ் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது. புதிய திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் அவை எதிர்பார்க்கப்பட்ட அளவு நடைபெறாமையை மக்கள் உணர்ந்து, 1903 அல்லது 1904ம் அண்டளவில் சந்திரசேகர் சபாபதிப்பிள்ளை அவர்களின் தலைமையில் கூடி “ஆத்தியடி பிள்ளையார் தரும பரிபாலன சபையினை” உருவாக்கினர். தருமபரிபாலன சபையினரின் கீழ் கோவிற் பணிகள் முன்னெடுக்கப்பட்டு, 1913ம் ஆண்டு கார்த்திகைத் திங்கள் 23ம் நாள் மகா கும்பாபிடேகம் நடைபெற்றது.

இதன்பின்னர் ஆலயத்தே 10 நாள் அலங்காரத்திருவிழா, கந்தசட்டி, திருவெம்பா, நவராத்திரி, சிவராத்திரி முதலிய விசேட பூசைகளும் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை சிறப்பாய் நடைபெற்று வருகின்றன.

1946ம் ஆண்டில் ஆலயத்தின் கொடித்தம்பம், யாகசாலை அமைக்கப்பட்டு முதன்முறையாய் கொடியேற்றத்திருவிழா நடைபெற்றது. 1947ம் ஆண்டிலிருந்து திருவிழாக்கள் வைகாசி மாத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்வாண்டில் திருப்பணி வேலைகள் நடைபெற்று, ஸ்தம்ப மண்டபமும் ஒடுகளால் வேயப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்து வந்த ஆலயத்தில் 2004ம் ஆண்டு 5வது மகா கும்பாபிடேகமும் 2011 இல் ஆறாவது மகா கும்பாபிடேகமும் நடைபெற்றுள்ளது.

ஆலய பூசகர்களில் மு. தம்பையாக்குருக்கள், து. சிவசிதம்பரக் குருக்கள், சிதம்பரப்பிள்ளை குருக்கள், மதியாபரணக் குருக்கள் என்போர் முக்கியமானோர்.

ஆத்தியடிப்பிள்ளையார் மீது தம்பையாக்குருக்களால் ஊஞ்சல் பதிகமும், கணபதிப்பிள்ளையவர்களால் ஆத்தியடி விநாயகன் பதிகமும் ஆத்தியடி சுப்பிரமணியர் மேற் பதிகமும் பாடப்பட்டுள்ளன.

எந்தவுயிருக்கு முன்னாரருள் கிடைக்குமென்‌ றின்சுருதி சுலையாகம
    மியம்புமொழி பொய்யதோவல்ல வெனிலவ்வுயிரி லெளியேனு மொருவனலனோ
வந்தவினைவிக் கினம்பனிபோல மாற்‌றியருள் வல்லவொரு தேவனலவோ
    வறுமைபிணியி கலாதியெனை நலித்திடவுனதுவன் கருத்‌தீதுகொல்லோ
சிந்தையருணோக் கிலாதிறுமாந்‌ திருந்திடத்‌ தீயனேன் செய்தபவமோ.
    தினந்தினம்‌நானு மிங்கலறவுங் கேட்கிலாய் சிறியனேனேது செய்வேன்‌
அந்தமதிழைக் கவங்குசபாசமேந் துகையண்ணலே யையங்கரத்தோய்‌
    ஆத்திநிழல் கோயில்கொள் விநாயகக் கடவுளேயற் புதானந்தமயமே 1

என்று சைவர்களெல்லோரும் ஆத்தியடி விநாயகர் ஏற்றிப் பணிந்து துதித்துய்வோமாக.

  1. ஆத்தியடி விநாயகன் பதிகம் 11ம் செய்யுள்

ஆலய புகைப்படங்கள்