அட்டமட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்

கீரிமலைச்சந்தியிலிருந்து தெற்கு நோக்கிக் கருகம்பனை, பன்னாலை, பன்னாலையூடாக தெல்லிப்பழை செல்லும்வீதியிற் கீரிமலையிலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் உள்ள மயிலங்கூடற் சந்தியிலிருந்து கிழக்கு நோக்கி 50 மீற்றர் தொலைவில் வீதியின் தென்மருங்கில் அட்டமட்டை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

தோற்றம்

இந்த இடத்தில் வாழந்த திருமதி நாகமுத்து செல்வி என்பவரது உணர்வில் ஏற்பட்டதொரு தாக்கம் அம்மன் ஆலயத் தோற்றத்திற்கு வித்தாகியது. அம்பாள் வயப்பட்ட அந்த அம்மையின் விருப்பிற்கமைய 1940இல் ஓலைக்குடிசையொன்றமைத்து அதனுள்ளே கருங்கல் ஒன்றை வைத்து அம்மையாகப் பாவனை செய்து வழிபட்டு வந்தனர்.

அபிவிருத்தி

காலப்போக்கில் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றன. கர்ப்பக்கிருகம் சீமெந்தால் கட்டப்பட்டு ஓட்டினால் வேயப்பட்டது. 1972 இல் அர்த்தமண்டபம் மகாமண்டபம் என்பனவும் சீமெந்தால் கட்டப்பட்டு ஓடு வேயப்பட்டன. மகாமண்டபத்தின் வடகிழக்கில் மணிக்கோபுரம் அமைந்துள்ளது. தெற்கில் மடைப்பள்ளி உள்ளது. கிழக்கு நோக்கிய இந்த ஆலய மூர்த்தி அம்பாள் கருங்கல் விக்கிரகம். பரிவாரமூர்த்தி நாகதம்பிரான் வடக்குப்புறம், உள்வீதியில், ஒரு சிறிய அமைப்பில் எழுந்தருளியுள்ளார். ஐம்பொன்னாலாய உற்சவமூர்த்தியுமுண்டு.

நித்திய நைமித்தியம்.

தினமும் அம்மனுக்கு பூசை நடைபெறுகின்றது. வருடப்பிறப்பு, சித்திரைப்பூரணை, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஐப்பசி வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, திருவெம்பாவை, தைப்பொங்கல், தைப்பூசம் சிவராத்திரி ஆகிய தினங்களில் விசேட வழிபாடு உண்டு. வருடப்பிறப்பு, விஜயதசமி திருவாதிரை நாள்களில் அம்பாள் வீதியுலா வருவார்.

ஆலய புகைப்படங்கள்