Menu

நவாலி அட்டகிரி கந்தசுவாமி கோயில்

யாழ்ப்பாணத்தின் கண்ணே அமைந்திருக்கும் புராதன கிராமங்களிலொன்று நவாலி. இக்கிராமத்தின் கண்ணே அமைந்து சிறந்திருக்கின்றன பல சைவத் திருக்கோயில்கள். அவற்றில் முருகப்பெருமான் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஆலயம் அட்டகிரி கந்தசுவாமி ஆலயமாகும். நவாலியூர் சோமசுந்தரப் புலவர் இத்தலத்தின் மீது அட்டகிரிக் கந்தர் பதிகமும், அட்டகிரிக் கலம்பகமும், அட்டகிரி வெண்பாவும், பிள்ளைத் தமிழும் பாடியுள்ளார்கள். நவாலிக் கிராமத்துள்ளோரும் அயற் கிராமத்தோரும் தம் இன்னல் களைய அட்டகிரி வேலனை நாடித் துதித்து நிற்பர்.

யாழ்ப்பாண அரசு 1620ல் அன்னியர் கைப்பட்டதிலிருந்து, ஏறத்தாள 200 வருடங்களிற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டுச் சைவத் தமிழருக்கு பகிரங்க சமய வழிபாடுகள் இல்லாது போயின. போர்த்துக்கேயர் ஆலயங்கள் அனைத்தையும் இடித்தழித்ததனால், சைவர்கள் இரகசியமாக சிறிய ஆலயங்களை தங்கள் வளவுகளில் அமைத்து வழிபட்டு வந்தார்கள். சைவக்குருக்களும் பண்டாரங்களும் கிராமந்தோறும் சென்று தம்மதத்தோருக்கு இரகசியமாக புரோகிதம் செய்து வந்தார்கள். இப்படிப்பட்ட சைவக்குருக்கள் ஒருவருடைய வசிப்பிடம் நவாலியில் இக்கோயிலருகில் இருந்தது. இதனால் இவ்வாலயத்தை “குருக்கள் கோயில்” எனவும் அழைப்பர்.

18ம் நூற்றாண்டில் நவாலியிலே வாழ்ந்த இலங்கை நாராயண முதலியார் என்பார் தனது மனைவி கதிரைமலை அம்மையாருடன் கதிர்காம யாத்திரை சென்று வந்தார். யாத்திரையால் வந்தபின்பும் அத்தலத்தின் பக்திப்பிவாகம் அவர்களை விட்டகலவில்லை. கதிரைமலையம்மையாருடைய உடல் நவாலியிலிருந்தாலும் உள்ளம் கதிர்காமத்தே நின்றுவிட்டது. இதனையறிந்த கதிர்காம ஆலய பூசகர் ஆதிமூலத்திலிருந்து ஒரு வேலை எடுத்து கதிரைமலையம்மையாரிடம் கொடுத்துவிடுமாறு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு யாத்திரிகரிடம் கொடுத்து விட்டார். அவ் யாத்திரிகரோ அவ்வேலை தானே வைத்திருந்தால் சித்தி கிட்டும் என நினைத்து வேலை தன்னுடனே வைத்துக்கொண்டார். ஒருநாள் தற்செயலாக அவர் வீடு தீப்பிடித்து பகுதி எரிந்து போயிற்று. இதனை தெய்வக்குற்றமாக கருதிய அவ்வடியார் உடனே வேலை எடுத்துச் சென்று கதிரைமலையம்மையாரிடம் ஒப்புவித்துவிட்டார்.

அவ்வேலிற்கு நவாலியிலே உகந்த நிலமெடுத்து கோயிலமைத்து பிரதிஸ்டை செய்தனர். குருக்கள் மடத்திலிருந்த சைவக்குருக்களை நித்திய நைவேத்தியங்களுக்கு பொறுப்பாய் நியமித்தார்கள். காலப்போக்கில் சுப்பிரமணியக் கடவுளும் தெய்வயானை வள்ளி சமேதராய் பிரதிட்டை செய்யப்பட்டார்கள். விளை நிலங்களும் கோயிலுக்கு மானியமாய் வழங்கப்பட்டன.

அன்றிலிருந்து அட்டகிரி கந்தசுவாமி ஆலயத்தில் சைவாகம முறைப்படி வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. நாவாலியூர் மக்களினால் கோவில் காலம் தோறும் திருத்தங்கள் செய்யப்பெற்று நற்பொலிவோடு விழங்குகின்றது. அட்டகிரி வேலவனும் வேண்டுவோர் குறைதீர்த்து அருள்பாலித்து வருகின்றார்.

உருமேவு செம்பொன்முடி யோராறு மிரவிபுரை
    யொளிமேவு குழைநிரைகளும்
ஒன்னலர் நடுங்கிடும் பன்னிருபு யாசலமு
    மொண்கடப் பந்தெரியல்சூழ்
மருமேவு மார்புமெஞ் ஞானவா தித்தனாய்
    வலமேவு வடிவேலுமம்
மங்கைமார் வடிவமும் பேரன்ப ருள்ளமாம்
    வாவிமலர் சரணமலரும்
கருமேவு மயிலுநான் கண்டுகளி கொள்வதெக்
    காலமோ வட்டகிரிவாழ்
கருதடிய ரிருவினையு மிடிபிணியு நொடியிலழி
    கந்தசுவா மிக்கடவுளே.

என்று அட்டகரிக் கந்தனை வேண்டி வணங்கி நிற்போம்.

ஆலய புகைப்படங்கள்