அராலி அகாயக்குளம் விநாயகர் ஆலயம்

யாழ்ப்பாணத்து வலிகாகமம் மேற்கு பிரதேசத்திலே “பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூராணந்தமே” என்று தாயுமானவர் சொல்லுவதுபோல காணுகின்ற இடமெங்கும் கோயில்கள் மடாலயங்களும் நிறைந்தது அராலிக்கிராமம். அக்கிராமத்திலே இருக்கின்ற ஒரு சரித்திரப்பிரசித்தி பெற்ற தலமாயுள்ளது அகாயக்குளம் விநாயகர் ஆலயம். அராலிப்பிரதேசத்தை ஆட்சி செய்த அகாயன் என்பான் இவ்வாலயத்துக்கு என அமைத்த பெருங்குளத்தை ஒட்டி இவ்வாலயம் அகாயக்குளம் ஆலயம் என பெயர் பெற்றது.

யாழ்ப்பாணத்து தமிழரசர் காலத்திலேயே இவ்வாலயம் புகழோடு விழங்கியதாக கூறுவர். இக்கோவிலின் மூலஸ்தான மூர்த்தியாய் அமர்ந்திருக்கும் விநாயகர் பல்லவர்கால சிற்பமுறையை சார்ந்தாயிருப்பதால் இவ்வாலயம் பல்லவர் காலத்தை ஒட்டிய காலத்தில் அமைக்கப்பட்டிருக்கலாம் என கருத இடமுண்டு. பதினாறாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போர்த்துக்கேயர் இந்துக்கோயில்கள் யாவற்றையும் அழித்து வந்தனர். அப்பிரகாரம் இவ்வாலயத்தையும் அழிக்கவந்த போர்த்துக்கேயர் அங்கிருந்த சைவப்பெருமக்களிடம் இதுவென்ன கோவிலென வினாவினர். அவர்கள் இது மாதாவின் ஆலயம் என்று கூறி அலயத்துள்ளே இன்றளவும் காணப்படுகின்ற கண்ணகி அம்மன் சிலையினை ஆதாரமாய் காட்டினர். இதனால் இக்கோயில் இடிபடாது தப்பியது. அன்றுதொட்டு இவ்வாலயம் மாதாவின்கோவில் (மாதாங்கோவில்) எனவும் அழைக்கப்பட்டு வருகின்றது.

தொந்தி வயிறும் துதிக்கை முகத்தழகும்
துலங்கத் தோன்றி எம் முன்னே
விந்தை பல விளைவிக்கும் விநாயகனே
வேண்டும் அடியார் துயர் தீர்க்கும்
வித்தகா அந்தரித்து அல்லலுற்ற
நேரமதில் அபயமளித்தாய் எம்
சிந்தை உருக உன்பாதமலர் பணிந்தோம்
அகாயக்குளத்தானே யெமைக் காப்பாய் ஐயா.

என்று எல்லோரும் விநாயகப்பெருமானை வேண்டி வழிபட்டு துயரங்கள் தீர்க்கின்றனர்.

ஆலய புகைப்படங்கள்