Menu

வரைபடம்

ணுவில் ஊர், சிவபூமி எனச் சொல்லப்படுகின்ற இலங்கையின் யாழ்ப்பாணத்தே யாழ் நகரில் இருந்த காங்கேசன் துறை செல்கின்ற காங்கேசன் துறைச் சாலையில் நான்காவது கிலோமீற்றரில் இருக்கின்றது. செந்தமிழும் சிவநெறியும் செழித்து வாழும் இவ்வூர், கிழக்கே உரும்பிராயையும், வடக்கே சுன்னாகத்தையும், தென்கிழக்கே கோண்டாவிலினையும், தெற்கே தாவடியையும், மேற்கே சுதுமலையையும், வடமேற்கே உடுவிலினையும் எல்லையாக கொண்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க இணுவில், யாழ்ப்பாணத்து அரசின் தொடக்க காலத்தில் அதன் ஆட்சிப் பிரிவுகளில் ஒன்றாக இருந்தது எனவும், இப்பிரிவுக்கு ஆட்சித் தலைவர் ஒருவர் இருந்தார் எனவும், அக்காலத்தில் இவ்வூர் பல்வளமும் நிறைந்து பரந்த நிலப்பரப்பினதாக விளங்கியதெனவும், யாழ்ப்பாணத்து வரலாற்று மூலங்கள் தெரிவிக்கின்றன.

கோட்டு மேழித் துவசன் கோவற்பதி வாசன்
சூட்டுமலர்க் காவிற் றொடை வாசன் – நாட்டமுறு
ஆதிக்க வேளாளன் ஆயுங்கலை அனைத்தும்
சாதித்த ரூபா சௌந் தரியன் – ஆதித்தன்
ஆறாயிரங் கதிரோடொத்த மேனிப் பிரகாசன்
பேராயிர வனெனும் பேரரசைச் – சீராரும்
கன்னல் வெறிவாழை கமுகுபுடைசூழக் கழனி
துன்னும் இணுவிலிற் துளங்கவைத்து
(கைலாயமாலை அடி 170-175)

கோவலூர் வேளாளனும் மேழிக்கொடியனும் குவளை மாலையும் பெரும் பராக்கிரமமும் கல்வியும் கட்டழகும் உடையவனும் ஆகிய பேராயிரவனைக் கரும்பும் கமுகும் வாழையும் நெல்லும் செழித்து ஓங்கும் வளமுடைய இணுவில் என வழங்கும் இணையிலியிற் குடியிருத்தினான்
(யாழ்ப்பாணச் சரித்திரம், ஆ. முத்துத்தம்பிப் பிள்ளை)

இதே செய்திகளை யாழ்ப்பாண வைபவ மாலை, முதலியார் செ. இராசநாயகம் எழுதிய யாழ்ப்பாணச் சரித்திரம் முதலிய நூல்களும் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரில் இருந்து அரசு செய்தான் எனப் பஞ்சவன்னத் தூது நூலில் உள்ள அகவல் தெரிவிக்கின்றது.

அட்ட லட்சுமியுறைந் தருளும் யாழ்ப்பாணப்
பட்டினந் தன்னிற் பரராச சேகரனெனும்
ஆரிய குலத்திறை அரசுவீற் றிருந்த
தென்னிணு வையெனுந் திருநகர்
(அகவல் அடி 17-20)

இவ்வூரின் கண்ணே அமைந்திருக்கின்ற பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்தை இம்மன்னனே அமைத்தான் என செவிவழிச் செய்திகள் சொல்லும்.

முதலாம் குலோத்துங்க சோழனின் படைத்தளபதி கருணாகரத் தொண்டைமான் இலங்கை வந்தபோது இவ்வூரிற் காரைக்காற் பகுதியில் தங்கியிருந்தான் என முதலியார் இராசநாயகம் தமது யாழ்ப்பாணச் சரித்திரத்தில் எழுதியுள்ளார். (பக்கம் 38-39)

இவ்வூர்த் தொடக்க ஆட்சியாளன் பேராயிரவன் திருக்கோவலூரினன். இவனின் பின் இவ்வூர் ஆட்சித் தலைவனாயிருந்தவன் காலிங்கராயன். இவன் காரைக்கால் ஊரினன் என்பதைப் பஞ்சவன்னத் தூது நூல் “பேராயிரவன் குடிப் பேரதிகாரி”, “காரைநாடான்”, “காரைப்பதிவாசன்” எனக் கூறுதலால் அறியலாம். தொண்டை நாட்டு ஊர்ப் பெயர்களோடு கூடிய குடியேற்றங்கள் காரைக்கால் – காரைக்காடு (இணுவில்) எனத் திரு முத்துக்குமாரசாமிப்பிள்ளை தமது யாழ்ப்பாணக் குடியேற்றம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்கம் 4)

காலிங்கராயனும் அவன் மகன் கைலாயநாதனும் இணுவிலூருக்குப் பெரும் புகழ் தேடித்தந்துள்ளனர். ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் ஒருவர் தானும் மதம்மாறாது இவ்வூரின் சிறப்பினை உயர்வடைய வைத்துள்ளனர்.

தமிழிலும் சைவத்திலும் பற்றுமிக்க இவ்வூர் யாழ்ப்பாண அரசர் ஆட்சிக்காலத்திலும், பின் வந்த ஐரோப்பியர் ஆட்சியின் போதும் இயல் இசை நாடகம் ஆகிய முத்துறைகளும் சைவமும் வளர உறுதுணையாயிருந்துள்ளது. ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தவரான இணுவை சின்னத்தம்பிப் புலவர் முத்தமிழிலும் புலமையுள்ளவராய் விளங்கினார். முத்தமிழ்த்துறைகளும் அமைந்த பஞ்சவன்னத்தூது நூலை ஆக்கியதோடு கோவலன் நாடகம், நொண்டி நாடகம், அனிருத்தன் நாடகம், என்னும் மூன்று நாடக நூற்களையும் ஆக்கினார்.

ஆங்கிலேய ஆட்சிக் காலத்தவரான நடராசையர் நாவரிடங் கல்வி கற்றவர். தமிழிலும் வடமொழியிலும் வல்லவர். இவர் தமிழ்நாடு சென்று அறிஞர் பலருக்கு ஆசிரியராய் விளங்கி சிவஞான சித்தியாருக்கு உரையெழுதியுள்ளார். அம்பிகைபாகப் புலவரும் நாவலரிடம் கற்றவரே. நாவலர் வழியில் இணுவிலில் சைவப் பாடசாலையை நிறுவியர். தணிகைப் புராணத்திற்கு உரையெழுதியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தே வாழ்ந்த பெருஞ்சித்தர் பெரிய சந்நியாசியாவார். இவர் இணுவிலுக்கு பெரும் புகழ் தேடித்தந்தார். இலங்கையில் பெருஞ்சிற்ப வேலைகள் அமைந்த இணுவை மஞ்சத்தை உருவாக்கியவர். காரைக்கால் சிவன் கோவிலை மீள தாபித்தவர். இணுவில் கந்தசுவாமி கோவிலில் இருந்து காரைக்கால் சிவன் கோவில் வரை அகலமான தேரோடும் வீதியையும் அமைத்தவர். இவ்வீதி பின்னர் அதன் அரைப்பங்காகி விட்டது.

கடந்த நூற்றாண்டின் ஈற்றிலும் இந்நூற்றாண்டிலும் இசைத்துறையிலும் நாடகத்துறையிலும் வல்ல பலர் இவ்வூரிலே இருந்தனர். இவர்கள் இசை நாடகக்கலையை யாழ்ப்பாணத்திலும், இலங்கையிலும் வளர்த்தார்கள். சிறந்த நாடக அரங்கொன்று இங்கு காணப்பட்டது. நாகலிங்கம் சிறந்த நடிகராயும், ஏரம்பு, சுப்பையா என்போர் சிறந்த அண்ணாவிமார்களாயும், சின்னத்தம்பிச் சட்டம்பியர் சிறந்த நாடக ஆசிரியராயும் விளங்கினர். இவ்வூர் நாடகங்களிலே பங்கு கொண்டு சிறந்த நடிகர்களாய் விளங்கியோருக்கு, அனுமார், நாரதர், வஞ்சிப்பத்தன், நம்பிராசன், சீதை, மாலியவான் என அந்நாடகப் பெயர்களே பெயர்கள் ஆயின. பெரிய பழனி என்பார் சிறந்த இசை மேதையாய் விளங்கினார்.

இந்தியாவில் கருநாடக இசைக்கு இருப்பிடம். ஈழத்தில் இணுவையம்பதியாகும். (ஈழத்தில் இசைத்தமிழ் வளர்ச்சி, நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு மலர்.)

இணுவில் கிராமத்தில் கலைஞர் பெருமக்களும் கலாரசனை உள்ளவர்களும் நிறைய இருக்கின்றார்கள். நாட்டிற்கு பெருமை தேடித்தந்த, தருகின்ற இசைக்கலைஞர்களை பலரை நமக்குத் தந்தது இணுவையூர். (சிரித்திரன் இதழ் 1972 மார்ச், 1973 திசெம்பர்)

இணுவில் சிறந்த நிலவளமும் நீர்வளமும் கொண்டு விளங்குகின்றது. உளவுத்தொழிலே இவ்வூரின் உயிர்நாடி. பயிர்விளை நிலங்கள் பல உள்ளன. இப்போது குடியிருப்பு பகுதிகளாய் விளங்குகின்ற பல இடங்களும் முன்னே பயிர் விளை நிலங்களாயிருந்தவையே.

பல சைவக் கோவில்களும், கல்வி நிலையங்களும், திருமடங்களும் இவ்வூரெங்கும் நிறைந்துள்ளன. புராணபடனம், திருமுறை, சைவப்பிரசங்கம் என்பன நிலைபெற்றுள்ளன. அருள்மிகு வடிவேல் அடிகளார் அண்மைக்கால இணுவிலின் சமய வளர்ச்சிக்கு தொண்டாற்றியவர். இவ்வூரிலே இருக்கின்ற இளந்தாரி கோவில் முன்னைய அரசர் ஒருவருக்காக நடுகல் வழிபாட்டு முறையில் அமைந்துள்ளது. அரசர் ஒருவருக்காய் அமைந்த நடுகல் வழிபாட்டுக் கோவில் இலங்கையில் இதுவொன்று மட்டுமே.

சேர் பொன் இராமநாதன் மகளிர் கல்லூரியும், யாழ் பல்கலைக் கழகத்தின் நுண்கலைப் பீடமும் இணுவையம் பதியிலேயே உள்ளன.

அரச நிருவாக முறைமையின் படி இணுவிலானது வலி தெற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவினில் அமைந்து நான்கு கிராம அலுவலர் பிரிவுகளை உள்ளடக்கியது.

ஆலயங்கள்

பரராஜசேகரப் பிள்ளையார் கோயில்
இணுவில் காரைக்கால் சிவன் கோவில்
சிவகாமி அம்மன் கோயில்
செகராஜசேகரப் பிள்ளையார் கோயில்
இணுவில் கந்தசுவாமி கோயில்
மஞ்சத்தடி அருணகிரிநாத சிவசுப்பிரமணியர் திருக்கோவில்
இணுவில் இளந்தாரி கோயில்
இணுவில் கிழக்கு கப்பனைப் பிள்ளையார் கோயில் (அரசோலைப் பிள்ளையார்)
இணுவில் வைரவர் ஆலயம்

பாடசாலைகள்

இணுவில் இந்துக் கல்லூரி
இணுவில் மத்திய கல்லூரி