Menu

கைதடி விக்னேஸ்வர வித்தியாலயம்

வரலாறு

யாழ்ப்பாணக் குடாநாட்டில் செந்தமிழும் சைவமும் சிறந்து விளங்கும் கைதடி என்னும் ஊரின் நாற்றிசையிலும் நான்கு தமிழ் பாடசாலைகளும் ஓர் ஆங்கிலப் பாடசாலையும் அக்காலத்தில் அமைந்திருந்து இவ்வூர் மக்களுக்கு கல்விச் செல்வத்தை வாரி வழங்கி வந்த போதிலும் கைதடி கிழக்கில் ஓர் பாடசாலை இல்லாமை பெருங் குறைபாடாய் இருந்து வந்தது.

இதனை உணர்ந்த இவ் ஊர் பெருமக்கள் திருவாளர் இராமலிங்கம் சிதம்பரநாதன் அவர்களின் தலைமையில் ஒன்றிணைந்து கைதடி வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்த மடத்தில் 1953 ஆம் ஆண்டு கைதடி விக்னேஸ்வர வித்தியாலயத்தினை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்தனர். இம் முயற்சிக்கு தோள்கொடுத்து உதவியவர்களில் திரு.கந்தையா வேலாயுதர், திரு.ஆறுமுகம் வல்லிபுரம், திரு. கந்தையா சிதம்பரப்பிள்ளை, திரு.வல்லிபுரம் தம்பிராசா மற்றும் திரு.மானார் நகுலேஸ்வரன் என்போர் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பாடசாலையில் திரு. இராமலிங்கம் இராசமாணிக்கம், திரு. சந்திரசேகரம் கணபதிப்பிள்ளை மற்றும் திரு. வேலுப்பிள்ளை கணபதிப்பிள்ளை ஆகியோர் ஆரம்ப காலத்தில் ஆசிரியர்களாய் பணியாற்றினர். இவர்கள் தம் வேதனத்தையோ வேறு எவ்வித கைமாறையோ எதிர்பாராது பணியாற்றியமையை குறிப்பிடத்தக்கது.

தாபகர் அமரர் இராமலிங்கம் சிதம்பரநாதன்

ஆரம்பத்தில் தீர்த்த மடத்தில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை அடுத்த ஆண்டு தற்காலிகக் கொட்டைகையின் கீழ் இயங்கத் தொடங்கியது. ஆரம்பத்தில் சைவ வித்தியாவருத்திச் சங்க நிர்வாக முகாமையாளராக திரு. இராமலிங்கம் சிதம்பரநாதன் அவர்கள் செயற்பட்டார். இவருக்கு உதவியாக திரு.செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள், திரு. இராமலிங்கம் கந்தையா அவர்கள், திரு. அம்பிகைபாகன் சுந்தரலிங்கம் அவர்கள் என்போர் செயற்பட்டனர்.

காலப்போக்கில் பாடசாலைகென நிரந்தரமான ஓர் இடம்தேவை எனப் பலராலும் உணரப்பட்டது. அப்போது பாடசாலைக்குரிய காணியினை திரு. அம்பிகைபாகன் சுந்தரலிங்கம், திருமதி. அம்பிகைபாகன் தங்கரத்தினம், திரு. அம்பிகைபாகன் கனேசலிங்கம், திரு. இராமலிங்கம் சிதம்பரநாதன் மற்றும் திருமதி. சிதம்பரநாதன் தையல்நாயகம் என்போர் மனமுவந்து அன்பளிப்புச் செய்தனர். இவர்களால் வழங்கப்பட்ட காணியின் அளவு 82 பரப்பாகும். இது இரு கட்டங்களாக வழங்கப்பட்டது. இக் காணியில் முதலில் தற்காலிக மண்டபம் ஒன்று அமைக்கப்பட்டு பாடசாலை இயங்கி வந்தது. பின்னர் படிப்படியாக பல கட்டிடங்கள் நிரந்தரமாக அமைக்கப்பட்டன. காலத்துக்குக்காலம் கடமையாற்றிய பல்வேறு அதிபர்களாலும் ஊர் மக்களின் பேருதவியாலுமே இது சாத்தியமாகியது. இன்று விக்னேஸ்வரா வித்தியாலயம் 6 நிரந்தரக்கட்டிடங்களையும் சுமார் 400 மாணவர்களையும் 20 நிரந்தர ஆசிரியர்களையும் 1 கல்வி சாரா ஊழியரினையும் கொண்டு விளங்குகின்றது. அரைநூற்றாண்டு காலப்பகுதிக்குள் 15 அதிபர்களையும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களையும் பல ஆயிரம் மாணவச் செல்வங்களையும் இப்பாடசாலை கண்டுள்ளது

இப்பாடசாலையின் முதல் அதிபரக திரு. சி. பொன்னம்பலம் 12.05.1954 இல் கடமையேற்றார். அக்காலத்தில் சாவகச்சேர் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. குமாரசாமி அவர்களின் பேருதவியினால் இப்பாடசாலை அரச நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றமடைந்தது. இக் காலத்தில் கடமையாற்றிய செல்வி. சு. நாகம்மா, திரு. வே. மூத்ததம்பி ஆகியோரின் சேவையினையும் குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் கீதம்

இராகம் – கரகரப்பிரியா
தாளம் – ஆதி

சுந்தர நற்கலை ஒளிதரும் கைதடி
விக்னேஸ்வர வித்தியாலயமே
சிந்தை மகிழ்வோடு என்றும் உயர்வுற
வந்தனை செய்து நாம் வாழ்த்துவோமே. (சுந்தர)

ஆனைமுகன் திருக் கோயிலுக்கண்மையில்
அவனருள் விக்கினம் நீங்கிடவே
கானமதில் உயர் குழலிசை தவிலொலி
காற்றினில் வந்தின்பம் ஊட்டிடவே. (சுந்தர)

செந்தமிழ் ஆங்கிலம் கணிதம் விஞ்ஞானம்
நன்னெறியூட்டும் சமயமுடன் கலைகள்
வாழ்வாங்கு வாழ்ந்திட குடியியல் புவியியல்
வரலாறு தொழில்நுட்ப அறிவும் திறனும் தரும். (சுந்தர)

அதிபர்கள்

திரு. சி. பொன்னம்பலம் (1954 – 1955)
திரு. வ. நடராஜா (1955 – 1962)
திரு. சு. இராசையா (1962 – 1962)
திரு. பொ. கந்தையா (1962 – 1962)
திரு. சு. இராசையா (1962 – 1963)
திரு. பொ. கந்தையா (1963 – 1967)
திரு. க. சிவஞானசுந்தரம் (1967 – 1968)
திரு. ச. பொன்னுத்துரை (1968 – 1975)
திரு. க. வீரகத்தி (1975 – 1976)
திரு. க. நடராஜா (1976 – 1989)
திருமதி. இ. தேவபாலசுந்தரம் (1989 – 1992)
திரு. சி. ஆ. சோதிலிங்கம் (1992 – 1994)
திரு. சி. இ. மகேந்திரன் (1994 – 1998)
திரு. க. அரியதாஸ் (1998 – 1999)
திரு. மா. து. பாலசுந்தரம் (1999 – 2005)
திரு. ச. ஞானலிங்கம் (2005 – 2010)
திருமதி. ல. முகுந்தன் (2010 – 2013)
திரு. சு. சிவானந்தன்
திரு. நாகலிங்கம் கருணாகரன்