Menu

கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரி

தென்மராட்சி மணியகாரராக செயலாற்றிய கரவெட்டி பெருங்குடிமகனான இராசவாசல் முதலியார் உயர்திரு வீரவாகு சிற்றம்பலம் அவர்களினால் 1917ம் ஆண்டு இக்கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது.

அன்றைய சூழ்நிலையில் ஆங்கில அறிவு மிகவும் அவசியமாகத் தேவைப்பட்டது. கரவெட்டியிலும் அதனை அடுத்துள்ள கிராமங்களிலும் ஆங்கிலம் போதிக்கும் பாடசாலைகள் எதுவும் இல்லாமையினால் அம் முக்கிய தேவையை நிறைவேற்றுவதற்கு சின்னத்தம்பி முதலியார் பெருமனதுடன் முன்வந்தார்.

இராசவாசல் முதலியார் உயர்திரு வீரவாகு சிற்றம்பலம்

மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இருந்து சில மாணவர்களையும் மூன்று ஆசிரியர்களையும் கொண்டு கரவெட்டி மேற்கு, நெல்லியடி வெல்லன்கிராய் றோட்டில் நுகவில் வயலுக்குக் கிழக்குப் பக்கத்தில் கிடுகுக் கொட்டகையுடன் பாடசாலை ஆரம்பமானது. திரு. கதிரித்தம்பி கிருஸ்ணபிள்ளை அதிபராகவும், திரு. வல்லிபுரம் மயில்வாகனம் முகாமையாளராகவம் நியமனம் பெற்றனர். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 1917.10.06ல் மூன்று வகுப்பறைகளைக்கொண்ட நிரந்தரக்கட்டடத்தைக் கொண்டதாக மாற்றம் பெற்றது.

1919இற்குப் பின்னர் ஈ.எஸ்.எல்.சி. வகுப்புக்கு மாணவர்களைத் தயார்படுத்த இந்தியாவிலிருந்து பட்டதாரி ஆசிரியர்கள் தருவிக்கப்பட்டிருந்தனர். விஞ்ஞானம் போதிப்பதற்குரிய வசதிகளை திரு.க.சின்னத்தம்பி (இராசவாசல் முதலியார்) ஏற்படுத்திக் கொடுத்தார். இதன் பயனாக எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சைக்கு மாணவர் தோற்ற வழிவகுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் இலண்டன் மற்றிக்குலேசன் பரீட்சைக்கு மாணவர் தோற்றக்கூடிய பிரபல்யம் வாய்ந்த பாடசாலையாக 1933ல் வடமராட்சிப்பகுதியில் சிறந்து விளங்கியது.

1954ல் அதிபர் திரு. கே. சிவப்பிரகாசத்தின் முயற்சியினாலும் முகாமையாளர் திரு. கே. சி. நடராசாவின் செல்வாக்கினாலும் பாடசாலையில் H.S.C கலை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர்களின் பெரு முயற்சியினால் 1958ல் H.S.C விஞ்ஞான வகுப்புக்களும் கொண்ட பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. மாணவர்கள் பல்கலைக்கழக புகுமுக வகுப்புகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகினர்.

1960ல் ஆய்வுகூடவசதிகள் போதாமை காரணமாக க.பொ.த.உயர்தரம் (விஞ்ஞானம்) வகுப்புகளை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது. 1964ல் தகுதி வாய்ந்த ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டதனால் க.பொ.த.உயர்தரம் (கலை) வகுப்புகளை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.

1972ல் அதிபர் திரு.பொன் கணேசன் அவர்களின் முயற்சியினால் அருகாமையிலுள்ள கரவெட்டி மேற்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை இக்கல்லூரியுடன் இணைக்கப்பட்டு அப்பாடசாலையின் ஆசிரியர்களும் மாணவர்களும் விக்னேஸ்வராக் கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களுமாயினர். பாலர்பிரிவு ஆரம்பிக்கப்பட்டது.

1977ல் அதிபர் திரு. எஸ். நமசிவாயம், பாடசாலை அபிவிருத்திச்சபை, பழைய மாணவரும் வெளிநாட்டு உதவித்திணைக்கள கணக்காளருமான திரு.எஸ்.வேலாயுதம் அவர்களின் பெருமுயற்சியினால் க.பொ.த.உயர்தர கலை, வர்த்தக, விஞ்ஞான வகுப்புகள் மீளவும் கல்லூரியில் ஆரம்பிக்கப்பட்டன.

1980ல் திரு.க.சிவபாதசுந்தரம் அவர்கள் அதிபராகக் கடமையேற்ற பின் கல்லூரி சகல துறைகளிலும் துரித முன்னேற்றம் கண்டது. பல்கலைக்கழகத்திற்கு விஞ்ஞானபீடம், கலைப்பீடம், வர்த்தகபீடம் ஆகியவற்றிற்கு மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் தெரிவாகினர். இவர் சகல விளையாட்டுத் துறைகளின் நுட்பங்களையும் நன்கு கற்றுத்தேர்ந்தவராகவும், ஆர்வமுடையவராகவும், இருந்தபடியால் கல்லூரியில் மாணவர்களிடையே விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆர்வத்தையும் புகுத்தினார். இவர் தனது அதிபருக்குரிய பொறுப்புக்களோடு கல்லூரியில் முழுநேர ஆசிரியராக விலங்கியலையும், ஆங்கிலத்தையும் திறமையாகக் கற்பித்தவர். இவர் காலத்தில் மாணவர் ஆசிரியர் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்ததோடு, கட்டிட வளர்ச்சித்துறையிலும் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் நிறைவு கண்டு கல்லூரி துரித வளர்ச்சியை எய்தியது,

தோடர்ந்து அதிபர்கள் வரிசையில் திரு.வி.செல்வராஜா, திரு.க.அம்பலவாணார், திரு.வே.சிவசிதம்பரம் போன்ற அதிபர்கள் தமது நிர்வாகத்திறனாலும் அயரா உழைப்பினாலும் கல்லூரியின் தரத்தையும் புகழையும் மேலும் ஓங்கச் செய்து இன்றும் எமது கல்லூரி வடமராட்சிப் பகுதியில் ஒரு சிறந்த 1AB பாடசாலையாக விளங்க வழிவகுத்துள்ளார்கள்.

மேலும் இன்றைய அதிபர் திரு.வே.சிவசிதம்பரத்தின் காலத்தில் இசுறு பாடசாலையாக அத்திட்டத்தின் கீழ் உள்வாங்கபட்டது ஒரு முக்கிய மாற்றமாகும். இதன் பயனாக பாடசாலைக் கட்டமைப்பிலும் பௌதீக வள விருத்தியிலும் துரித மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைக் கட்டமைப்பைப் பொறுத்தவரை ஆரம்பப்பிரிவு வேறாக்கப்பட்டு தனியான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு யா/விக்னேஸ்வரா ஆரம்ப பாடசாலை என்ற பெயரில் இயங்க வழிவகுக்கப்பட்டுள்ளது.

பௌதீக வளங்கள்

ஆரம்பகாலத்தில் கிடுகுக்கொட்டகையுடன் ஆரம்பிக்கப்பட்ட எமது பாடசாலை இன்று பல மாடிக் கட்டிடங்களைக் கொண்டதாய் நிமிர்ந்து நிற்கின்றது. இவ்வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களாய் இருந்தவர்கள் பலர். பழையமாணவர், பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வித்திணைக்களத்தினர், அரசசார்பற்ற நிறுவன அமைப்புக்கள் எனக் கூறிக் கொண்டே போகலாம். இந்தவகையில் இன்றைய கட்டிடத்தொகுதியை அவை அமைக்கப்பட்ட கால அடிப்படையில் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

1. திறந்தவெளி அரங்கு, சுவாமிஅறை – 1964
2. மேற்கு மேல்மாடி மண்டபம் – 1980
3. கிழக்கு மேல்மாடி மண்டபம்(சிவபாதசுந்தரம் மண்டபம்) – 1983
4. செயற்பாட்டறை – 2000
5. இரசாயனவியல் ஆய்வுகூடம், பௌதீகவியல் ஆய்வுகூடம், கணனிகற்றல் நிலையம் ஆகியவற்றை உள்ளடக்கிய மூன்று மாடிக்கட்டடத்தொகுதி – 2002
6. நூலகம் 2005
7. கிழக்கு மேல்மாடி மண்டபம் (பொன் கணேசன் மண்டபம்) – 2005
8. மேற்கு மேல்மாடியுடன் இணைந்ததாய் பொது விஞ்ஞான ஆய்வு கூடத்தை உள்ளடக்கிய கட்டடத்தொகுதி – 2009