Menu

மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயம்

யாழ்ப்பாணக் குடாநட்டில் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிறிஸ்தவ மிசனரிகள் தமது மதத்தினைப் பரப்பும் நோக்குடன் கிராமங்களில் ஆங்கிலப் பாடசாலைகள் நிறுவுவதை அவதானித்த வீரசிங்கம் என்னும் பெரியார் இத்தகைய சைவத் தமிழ்ப் பாடசாலை ஒன்று மீசாலையில் நிறுவப்பட்டால் சைவசமயத்தின் மீது பற்றுக்கொண்ட மீசாலையூர் மக்கள் மதம் மாறமாட்டார்கள். அதே வேளை ஓரளவு ஆங்கில அறிவைப் பெற்றுக் கொள்வார்கள் என எண்ணி மீசாலை புத்தூர்ச்சந்திக்கு அண்மையில் தமது காணியை அமெரிக்க மிசினரிக்கு கையளித்து அதில் ஆங்கிலப் பாடசாலையொன்றை நிறுவ உதவி செய்தார். ஆனால் காலப்போக்கில் அமெரிக் மிசனரி மாரின் மதமாற்று நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த இவர் சைவசமயத்தின் மீது கொண்ட பற்றுக் காரணமாக சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்கில் தனது காணியொன்றில் சைவத் தமிழ் பாடசாலையொன்றை ஆரம்பித்து அதற்குத் தாமே தலைமையாசிரியராக கடமையாற்றியதுடன் மூன்று ஆசிரியர்களை நியமித்து தனது சொந்தப் பணத்தில் சம்பளமும் வழங்கினார்.

இப்பாடசாலையில் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தமையால் ஏ9 வீதிக்கு அண்மையில் தற்போது பாடசாலை உள்ள இடத்தை பாடசாலைக்கென வழங்கி அங்கு விசாலமான கொட்டில்களை அமைத்து ஒரு பாடசாலையை ஆரம்பித்தார். அப்பாடசாலையை நிர்வாகிப்பதற்கு ஓர் பரிபாலனசபையையும் அமைத்திருந்தார். இது இப்பாடசாலையின் அபிவிருத்திச் சங்கமாக இருந்திருக்கலாமெனவும் கருதப்படுகிறது. 1919ம் ஆண்டளவில் இவர் இயற்கை எய்தியமையால் இப்பாடசாலை நடவடிக்கைகள் இச்சங்கத்தினாலேயே நிர்வகிக்கப்பட்டன. இந்த வகையில் இச்சங்கமானது 1926ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ஆம் திகதி வீரசிங்கம் சைவ வித்தியாசாலை எனும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.மு.சின்னத்தம்பி அவர்கள் நியமிக்கப்பட்டார். இவருடன் திரு.ந.சதாசிவம், திரு.வி.ஏகாம்பரநாதர், திருமதி.நாகம்மா, திரு.காசித்தம்பி, திரு.முருகேசு ஆகியோர் ஆரம்ப கால ஆசிரியராக கடமையேற்றனர். பாடசாலை ஆரம்பிக்கப்படும்போது 100×20 அளவு கொண்ட கல்லாலான கட்டடமும் 40×20 அளவு கொண்ட ஒரு தற்காலிக கொட்டகையும் காணப்பட்டது. படிப்படியாக வளர்ச்சி கண்ட இப்பாடசாலை 1935ஆம் ஆண்டு சீனியர் செக்கண்டரி பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

1950ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இவ்வித்தியாலயம் பெருவளர்ச்சியைக் கண்டிருந்தது. இங்கு 1952ஆம் ஆண்டு நெசவுக் கல்வியும் பன்ன வேலைக் கல்வியும் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் 1955ஆம் ஆண்டில் விவசாய பாடமும் ஆரம்பிக்கப்ட்டது. 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் விளையாட்டுத் துறை துரித வளா்ச்சியைக் கண்டது. 1965ஆம் ஆண்டு திரு.மு.பதஞ்சலி அவர்கள் அதிபராக கடமையேற்ற காலத்தில் இப்பாடசாலை துரித வளர்ச்சி கண்டது. 1968 நடுப்பகுதியில் பதஞ்சலி அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்ல பண்டிதர் க.சிவலிங்கம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றார். இவரது முயற்சியின் விளைவாக 1971 ஆம் ஆண்டு முதன் முதலாக க.பொ.த.உயர்தர கலைப்பிரிவை ஆரம்பித்து வைத்தார். 1974ஆம் ஆண்டு வர்த்தகப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அக்காலப்பகுதியிலே அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடனும் எம்.ரி.சுப்பிரமணியம் அவர்களின் உதவியுடன் ஒரு கிணறும் நீர்த்தாங்கியும் அமைக்கப்பட்டது. இதேபோல் இக்காலப் பகுதியிலேயே அபிவிருத்திச் சங்கத்தின் உதவியுடன் பழைய விஞ்ஞான ஆய்வுகூடம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பல அதிபர்களைக் கண்ட இப்பாடசாலை 1997ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ம் திகதி இப்பாடசாலையின் பழைய மாணவனாகிய திரு.கு.சிவானந்தம் அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவியேற்ற பின்னர் எல்லாத்துறைகளிலும் பாரிய முன்னேற்றம் கண்டுவந்துள்ளது. 1998ஆம் ஆண்டு இப்பாடசாலையானது ஜனாதிபதி அவர்களின் பணிப்பின் கீழ் நவோதயா பாடசாலையாகவும் 2004ஆம் ஆண்டில் வெளிச்சவீட்டுப் பாடசாலையாகவும் தரமுயர்த்தப்பட்டு செயற்பட்டு வந்தது. இதன் பின் திரு.சிவானந்தம் அவர்களின் பதவி உயர்வுக்குப் பின் 2009ம் ஆண்டளவில் திரு.வே.விநாயமூர்த்தி அவர்கள் அதிபராகப் பொறுப்பேற்ற பின் இப்பாடசாலையானது வரலாறு காணாத வளர்ச்சி கண்டு வருகிறது.