Menu

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை

லங்கையின் சிரசென திகழும் யாழ் குடாநாட்டின் வடமராட்சியில் பருத்தித்துறை நகரில் அலைகடல் முன்பாக அறிவுச்சுடர் ஏற்றி வைக்கும் கலங்கரை விளக்காக முன்னோக்கி மேல்நோக்கி ஒளியை நோக்கி (Onward Upward Towards the Light) என்ற மகுடவாசகத்துடன் தலை நிமிர்ந்து நிற்கும் உன்னத கலைக்கோவிலே மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலையாகும். 185 ஆண்டுகள் பழம்பெரும் வரலாற்றினையுடைய பெருமை கொண்டது. 125 ஆண்டுகள் வெளிநாட்டவரின் கட்டமைப்பிலும், 1950க்குப் பின் தேசிய அதிபர்களின் தலைமைத்துவத்தாலும் வளர்க்கப்பட்டு இன்று புகழ் பூத்த பெரும் விருட்சமாக விளங்குகிறது.

இலங்கைக்கு விஜயம் செய்த வெஸ்லியன் மிசனரியின் சிந்தனையில் உதித்த எம் பாடசாலை கி.பி 1823 ஆம் ஆண்டு வண.தோமஸ் ஸ்குவணஸின் முயற்சியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்ப பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையின் ஆரம்பக்கட்டிடத்தில் ஆண் குழந்தைகள் மட்டுமே கல்வி கற்றனர்.

1875 இல் டபிள்யூ.ஆர். வின்சென்ற் பாதிரியாரும் அவரது மனைவியினதும் பெரும் முயற்சியினால் புதிய கட்டிடத் தொகுதியுடன் பெண்கள் விடுதிப் பாடசாலையாக மாறியது. இந்நிகழ்வானது பெண்கள் கல்வியில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது. ஒரு மண்டபமும் 3 அறைகளுடன் காணப்பட்ட பாடசாலையில் மூன்றாம் வகுப்பிலிருந்து படிப்படியாக ஒவ்வொரு வகுப்புக்களாக ஆரம்பிக்கப்பட்டு 8ம் வகுப்பு வரை நடைபெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது. இக் காலத்தில் பாதிரிமாரே பாடசாலையின் முகாமையாளர்களாக இருந்தனர். 19ம் நூற்றாண்டு வரை ஆங்கில மாதர்களான செல்வி பெஸ்ரல், செல்வி நிஸ்டேல், செல்வி பீற்றிஸ் வால்ஸ், செல்வி பியூஸ்சாம்ப் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றி வந்தனர்.

1910 – 1915 வரை அதிபராக கடமையாற்றிய செல்வி பாக்ஸ் அம்மையார் அவர்கள் சிறந்த அதிபராவார். இவரது காலத்தில் சாதி மத பாகுபாடின்றி அநேக மாணவர்கள் கல்வி கற்கும் வாய்ப்பைப் பெற்றனர். 1921 இல் பிராட்போட் அம்மையாரின் காலத்தில் பழைய மாணவர்களின் முயற்சியால் பாடசாலைக்கென ஓர் மண்டபம் அமைக்கப்பட்டது. விஞ்ஞான ஆய்வுக்கூடம் ஒன்று இக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டமை வரலாற்றின் படிக்கல்லாகவே அமைந்தது. 1924 இல் நடாத்தப்பட்ட தமிழ்ப் பாடசாலை விடுகைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்த முதல் தமிழ் பெண் எம் பாடசாலையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1926 இல் செல்வி றொபின்சன் காலத்தில் கல்வியில் மட்டுமன்றி ஏனைய துறைகளிலும் பாடசாலை வளர்ச்சி கண்டது. விளையாட்டுத் துறையிலும் சாரணர் அமைப்பிலும் சாதனையை ஏற்படுத்தி அகில இலங்கையிலும் தன் நிலையை வெளிப்படுத்திக் கொண்டது.

1927 – 1937 காலப்பகுதிவரை கிறீன்வூட் அம்மையார் அதிபராகப் பொறுப்பேற்றார். 1938 இல் இரண்டு வகுப்பறைகளும் மனையியல் பயிற்சிக் கூடமும் அமைக்கப்பட்டது. 1938 இல் இப் பாடசாலை துவிபாஷா பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டமை பெருமைக்குரிய விடயமாகும்.

செல்வி எவரெட் அம்மையார் அதிபராக கடமையாற்றிய காலப்பகுதியில் வேம்படி துவிபாஷ பாடசாலை மூடப்பட்டு அம்மாணவர்களும் எம் பாடசாலையுடன் இணைக்கப் பட்டனர். இக் காலப்பகுதியில் மெக்கற்றொயிட் அம்மையார் அதிபராக கடமையாற்றினார். மாணவர் தொகை அதிகரிக்கப்பட்டதுடன் புதிதாக வகுப்பறைகள் அமைக்கப்பட்டு மண்டபமும் பெரிதாக்கப்பட்டது. புதிய விடுதிக் கட்டிடமும் அமைக்கப் பட்டது. இக் கால கட்டத்தில் ஏற்பட்ட துரித வளர்ச்சி காரணமாக 1942 இல் உயர்தர ஆங்கிலப் பாடசாலையாக எம் பாடசாலை தரமுயர்த்தப்பட்டது.

1944 – 1947 காலப்பகுதி வரை பார்க்கர் அதிபராகக் கடமையாற்றினார். 1948 ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடந்த நிகழ்வில் எம் பாடசாலை மாணவிகளும் பங்குபற்றினர். 1949 – 1950 வரை கடமையாற்றிய செல்வி டோர் அம்மையாரே கடைசி ஆங்கில அதிபராவார். அவரைத் தொடர்ந்து 1950 – 1966 வரை செல்வி.ஆர்.எம் சின்னையா அவர்கள் அதிபராக பதவியேற்றார். எம் பாடசாலையின் முதல் தேசிய அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது காலத்தில் பாடசாலையை விரிவுபடுத்தி பல கட்டிடங்களையும் அமைத்தார். இவரது காலத்தில் விஞ்ஞான பிரிவு வளர்ச்சியடையத் தொடங்கியதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளும் வளர்ச்சியடைந்தன. இக் காலப்பகுதியில் தரம் 1க்குரிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. பாடசாலை மகுடவாசகம், பாடசாலை கீதம் போன்றவை இவரின் கடும் உழைப்பின் பிரதிபலனாகும்.

1966 – 1974 செல்வி ஆறுமுகம் அதிபராக இருந்த காலத்தில் விஞ்ஞானப் பிரிவிலும், கலைப்பிரிவிலும் பல்கலைக் கழகத்திற்கு அனுமதிபெறும் மாணவர் தொகை அதிகரித்தமை பாடசாலையின் வளர்ச்சியை எடுத்துக் காட்டுகிறது. சாரணத்துறை வளர்ச்சியடைந்தது. Rangers பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. நுண்கலைப்பிரிவுகளும், நுண்கலைப் பாடங்களும் ஆரம்பிக்கப் பட்டதுடன் Band குழுவும் அமைக்கப்பட்டது. சைவசமயத்தில் கலாசார மாற்றம் மிக மென்மையாகவும் ஆனால் உறுதியாகவும், இப்பிரதேச மக்களால் மறக்கமுடியாதவாறும் இடம் பெற்றது. சைவசமய பூசையும் பிரார்த்தனை மண்டபமும் இன்று வரை அவருடைய சேவையையும் பாடசாலை வளர்ச்சியையும் நினைவுகூரும் சின்னங்களாக உள்ளன.

1974 – 1983 செல்வி.ஆர்.ஜே.மான் அதிபராக இருந்த காலப்பகுதியாகும். பாடசாலை கல்வியிலும் ஏனைய துறைகளிலும் வளர்ச்சியடைந்தது. அவரைத் தொடர்ந்து திருமதி.ரி.அரியரட்ணம் அரசியல் பாதிப்புக்கள் நிறைந்த காலப்பகுதியில் பதவி ஏற்றார்.

1987 – 1993 காலப்பகுதியில் திருமதி.லீ.சந்திரசேகரம் அதிபராக பொறுப்பேற்றார். இக் காலப்பகுதியில் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட கட்டிடங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டது. சுருக்கெருத்து, தட்டெழுத்து போன்ற பாடங்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டன.

1994 – 1995 காலப்பகுதியில் திருமதி. இ. நந்தகுமார் அதிபராகப் பதவி ஏற்றார். பாடசாலை பல வழிகளிலும் முன்னேற்றம் கண்டது.

இவரைத் தொடர்ந்து 1996 – 1997 வரையான குறுகிய காலப்பகுதியில் திருமதி.எம்.ஜி.தவரட்ணம் அதிபராகப் பொறுப்பேற்றார். இவரது காலத்தில் கல்வித்துறையிலும் இணைப்பாடவிதானங்களிலும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்

1997 ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற திருமதி.செ.சுந்தரேசன் அவர்கள் ஆர்வமும் துடிப்பும் மிக்க இளம் அதிபராகச் செயற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும். இக்காலப்பகுதியில் பல கட்டிடங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டதுடன் கணனிநெறி போன்ற புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. மாணவர்கள் ஆங்கிலம், விளையாட்டு போன்ற துறைகளில் மாவட்ட, தேசிய மட்டங்களில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்குச் சான்றாக 1997 இல் மாகாண மட்ட Champion ஆக வலைப்பந்தாட்ட 17 வயதிற்குட்பட்ட அணி விளங்கியது. 1998 முதல் பிரதேச ரீதியான பாடசாலை அபிவிருத்தித் திட்டத்தில் (D.S.D) அபிவிருத்தி செய்யும் பாடசாலையாக இணைக்கப்பட்டு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2001.09.10 முதல் 2001.09.28 வரையுள்ள காலப்பகுதியில் இடைநிலை பாடசாலை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் புதுடெல்லியிலுள்ள திட்டமிடலுக்கும் நிர்வாகத்திற்குமான தேசிய கல்வி நிறுவனத்தில் (National Institute for Educational Planning and Administration – NIEPA) பெற்றுள்ள பயிற்சி எம்மை பாடசாலையின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவுகின்றது என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

2001 இல் பாடசாலையின் முன்பக்கமாக மேற்குப் புறத்தில் உள்ள 8 பரப்புக் காணி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர் பெற்றார் நலன் விரும்பிகளிடம் இருந்து பெறப்பட்ட அன்பளிப்புக்கள் மூலம் ரூபா 400000.00 கொள்வனவு செய்யப்பட்டது.

2002, 2003 இலும் 17 வயது வலைப்பந்தாட்டக் குழுவினர் மாகாண நிலையில் முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் பங்கு கொண்டமை பாடசாலை இணைப்பாடவிதான செயற்பாடுகளில் வளர்ச்சிப்போக்கினை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. 2003 இல் அதிபர் திருமதி.செ.சுந்தரேசன் அவர்கள் கனடா ஒன்ராறியோவில் நடைபெற்ற அதிபர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்குமான மூன்று வார பயிற்சிப் பட்டறையில் கலந்து பெற்ற அனுபவங்கள் பயிற்சிகளால், எம் பாடசாலையில் பல மாற்றங்கள் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய விடயமாகும். தரம் 6 முதல் க.பொ.த(சாதாரண) தரம் வரையிலான வகுப்புக்களில் ஆங்கில மொழி மூலமான கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

2004 இல் அதிபர் காரியாலயமும் நூலகமும் உள்ளிட்ட 6 வகுப்புக்களும் கொண்ட புதிய மாடிக்கட்டிடத் தொகுதிக்கு அத்திவாரம் இடப்பட்டு 2006இல் கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

2005 ஆனி மாதம் எமது பாடசாலை உயர் பாதுகாப்பு வலயத்திலிருந்ததனால் மாணவர்களுக்கு ஏற்படும் திடீர் சுகயீனங்களின் போதும் பாடசாலைத் தேவைகளுக்கும் முச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. பாடசாலை மாணவர்கள் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்கள் நாவல், மஞ்சல் வர்ண ஆடை அணியும் முறை நடைமுறைக்கு வந்தது.

2007 .06.29 இல் பாடசாலைக்கான முதலாவது வலைத்தளம் (methodistgirls.org) உருவாக்கப்பட்டது. அத்துடன் 185வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது.

க.பொ.த (உயர்தர) இல் விஞ்ஞானப் பிரிவில் ஆங்கில மொழி மூலக் கற்கை நெறி 04.05.2009 இல் உத்தியோகபூர்வமாக வலயக் கல்விப் பணிப்பாளர் திரு . வை . செல்வராசா ஆரம்பிக்கப்பட்டது. 27.11.2009 இல் பாடசாலைக்கென school net வசதி ஏற்படுத்தப்பட்டது. பாடசாலை ஆசிரியர்கள் செவ்வாய், வியாழன் ஆகிய இரு தினங்கள் நாவல், மஞ்சள் வர்ண சேலை அணியும் முறை நடைமுறைக்கு வந்தது.

2010 பாடசாலையில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களின் போதும் பாடசாலை முடிவடையும் நேரத்தில் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களை துரிதபடுத்துமுனமானவும் கிழக்குப் பக்கத்தில் அரச சார்பற்ற நிறுவனமான UNOPS இன் நிதிப்பங்களிப்புடன் நுழைவாயில் ஒன்று அமைக்கப்பட்டதுடன் ஆனி மாதம் 10 ஆந் திகதி உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலைக்கான சுற்றுமதில் அரச சார்பற்ற நிறுவனமான UMCOR இன் அனுசரனையுடன் கட்டி முடிக்கப்பட்டதுடன், பாடசாலைக்கான கிறிஸ்த பிரார்த்தனை மண்டபம் ஒன்று மெதடிஸ்த திருச்சபையின் நிதிப்பங்களிப்புடன் கட்டிமுடிக்கப்பட்டது. அவுஸ்திரேலியா பழைய மாணவர் சங்கத்தின் நிதிப்பங்களிப்புடன் இரு கணனிகள் கொள்வனவு செய்யப்பட்டதுடன், கனடா பழைய மாணவர் சங்கத்தின் அன்பளிப்பான இரு புகைப்பட கருவியும் பாடசாலைக்கென கிடைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் உலக உணவுத் திட்டத்தின் பங்களிப்புடனும் சமையலறை கட்டிமுடிக்கப்பட்டது. அத்துடன் 2000 ஆம் ஆண்டு அத்திவாரமிடப்பட்ட க.பொ.த உயர்தர உயிரியல், இரசாயன, பௌதீக ஆய்வுகூடமும் பத்து வருடங்களின் பின்தற்போது வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்டது. மாகாண மட்டத்தில் 15 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணியும், 19 வயதிற்குட்பட்ட எல்லே அணியும் முதலாமிடத்தையும், 15 வயதிற்குட்பட்ட சதுரங்க அணியும்,19 வயதிற்குட்பட்ட கரப்பந்தாட்ட அணியும் இரண்டாமிடத்தையும், 19 வயதிற்குட்பட்ட கிரீக்கெட் மென்பந்தாட்ட அணியும், 19 வயதிற்குட்பட்ட பூப்பந்தாட்ட அணியும் மூன்றாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது. மெய்வல்லுனர் நிகழ்ச்சிகளான 17 வயதிற்குட்பட்ட அஞ்சலோட்ட அணி முதலாமிடத்தையும், 19 வயதிற்குட்பட்ட ஈட்டி எறிதலில் முதலாமிடத்தையும், 17 வயதிற்குட்பட்ட தட்டெறிதலில் மூன்றாம், நான்காம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளது.