மாதகல் நுணசை வித்தியாலயம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் மாதகல் கிராமத்தில் நூணசைப் பிரதேசத்தில் அமைந்திருக்கிறது மாதகல் நுணசை வித்தியாலயம். எறத்தாள 21 வருடகால இடப்பெயர்வின் பின்னர் 02/01/2013 முதல் சொந்த இடத்தில் இயங்கி வருகின்றது. நுணசை அமெரிக்கன் மிஷன் பாடசாலை எனவும், நுணசை முருகமூர்த்தி வித்தியாலயம் எனவும் இயங்கிய இரு பாடசாலைகள் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் இதர பல விடயங்களை கருத்திற் கொண்டு நுணசை வித்தியாலயம் என்று ஒரே பாடசாலையாக உருவாக்கப்பட்டது.

மாதகல் கிராமத்திலேயே முதற்பள்ளிக்கூடமாக 1824 ஆம் ஆண்டளவில் சரவணமுத்துச் சட்டம்பியாராலும் அவரின் வழி வந்தோராலும் திண்ணைப்பள்ளிக்கூடமாக நடத்தப்பட்டு பின்னர் அமெரிக்கன் மிஷன் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப் பெற்றதே நுணசை அ.மி.த.க. பாடசாலையாகும். இவ்வூர் சைவ மக்களின் தூண்டுதலின் பேரில் சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தால் 1957 ஆம் ஆண்டில் தாபித்து நடத்தி வரப்பெற்றது நுணசை முருகமூர்த்தி வித்தியாலயம். இவ்விரு பாடசாலைகளும் ஆரம்ப பாடசாலைகளாகவே இயங்கிவந்தன. ஆயினும் இடையில் சில ஆண்டுகள் இடைநிலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் போதிய மாணவர் இன்மையால் அவ்வகுப்புக்கள் தொடர முடியாது கைவிடப்பட்டன.

ஒன்றிணைப்பிலிருந்து சு. விக்கினராஜா, க.வீரவாகு, க.சுப்பையா, தா.சின்னத்துரை, நா. பொன்னையா ஆகியோர் முறையே அதிபர்களாக நிர்வாகத்தை மேற்கொண்டனர். இவர்களுக்குள் இப்பாடசாலையை தரம் 11 வரை உயர்த்த அரும்பாடுபட்டு உழைத்தவர் நா. பொன்னையா அதிபர் அவர்கள். அவர்களை யாரும் மறந்துவிட முடியாது கால் இயலாத நிலையிலும் கூட மாணவர்களை ஊக்கத்துடன் பாடசாலைக்கு வரவழைத்து கற்பித்த பெருமை அவரையே சாரும். எந்த வகுப்பில் ஆசிரியர் இல்லை என்றாலும் அந்த வகுப்பிற்கு தன் இயலாமையை பொருட்படுத்தாது சென்று கல்வி புகட்டியவர்.

பாடசாலை ஒன்றிணைப்பினால் ஆரம்பக் கல்வியில் சிறிது முன்னேற்றங் காணப்பட்டபோதிலும் 1975 இல் இருந்தே குறிப்பிடக்கூடிய வளர்ச்சியை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. அக்காலகட்டத்தில் அதிபராகவிருந்த அமரர் திரு.தா.சின்னத்துரை அவர்களும் உதவியாசிரியர்களும் பெற்றார் ஆசிரியர் சங்கமும் ஒருமுகமாய் நின்று எடுத்த அயரா முயற்சியினால் பாடசாலை கனிட்ட வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டமை பாடசாலை வளர்ச்சியின் முதற்படியாகும். 1975 இல் க.பொ.த (சா.த) வரை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. 1983 இல் ஆறு மாணவர்கள் பல்வேறு பாடங்களில் அதி திறமைச் சித்தி பெற்றதோடு ஐந்து மாணவர்கள் க.பொ.த (உ.த) வகுப்பில் கற்பதற்குத் தகுதி பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

நுணசை வித்தியாலயம் வசதிகள் குறைந்த சிறிய பாடசாலையாக இருந்த போதிலும் க.பொ.த(சா.த) பெறுபேறுகளிலும் குறிப்பிடக்கூடிய முன்னேற்றம் கண்டு வந்தது. 1980ல் 42 வீதமாய் இருந்த சித்தியடைந்தோர் தொகை 1983 இல் 55 வீதமாய் உயர்ந்துள்ளது. ஆசிரியர் பற்றாக்குறையிருந்த போதும் ஆசிரியர்கள் எடுத்துக்கொண்ட பெரும் முயற்சியே இவ்வுயர்வுக்குக் காரணமெனலாம். அவ்வப்போது நடைபெறும் சமய, மொழி, கலாசார நிகழ்ச்சிகளிலும் போட்டிகளிலும் இப்பாடசாலை மாணவர்கள் பங்குகொண்டு சிறந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர். 1979 இல் நடைபெற்ற அகில இலங்கை இசை நாடக நடனப் போட்டியில் நுணசை வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன். கோ.அருளானந்தன் குணச்சித்திர பாத்திர நடிப்பில் கனிட்ட பிரிவில் அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெற்றமை பெருமை தரும் நிகழ்வாகும். அதன் பின்னர் சேனாதிராஜா அவர்கள் அதிபர் பதவி வகித்தார்.

அதனை தொடர்ந்து திரு பேரம்பலம் அவர்கள் மிகவும் சிறப்பாக பாடசாலையை நிர்வகித்து வரும் வேளையில் இவ்வாறு பெரும் வளர்ச்சி கண்ட பாடசாலை இடப்பபெயர்வினை சந்திக்க நேரிட்டது அதன் போது மானிப்பாயில் பெரும் சிரமத்திற்கு மத்தியில் கொட்டில்கள் அமைத்து அங்கே கல்வி நடவடிக்கைகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து சென்றது. அதன்போது அதிபருடன் தோளோடுதோள் நின்று உழைத்த ஆசிரியர்களை மறந்துவிட முடியாது. அங்கு கொட்டில் அமைத்து பாடசாலை நடாத்தினாலும் பாடசாலையில் நடைபெறும் விழாக்களும் கல்வி நடவடிக்கைகளும் அவ்வாறே நடந்த வண்ணம் இருந்தது. அதனை தொடர்ந்து எழுதுமட்டுவாள் வரை இடம்பெயர்ந்து பின்பு மாதகல் மண்ணில் மீண்டும் பாடசாலை இயங்கும் வாய்ப்பு கனிந்தது.

2012ம் வருடம் பிற்பகுதியில் மீண்டும் மாதகல் பிரதேச மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்குள்ள மாணவர்களின் கல்வி முன்னேற்ற நடவடிக்கைகளை கருத்திற் கொண்டு மீண்டும் சொந்த இடத்தில் பாடசாலை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டது.

அன்றிலிருந்து நுணசை வித்தியாலயத்தில் தரம் 01 முதல் தரம் 11 வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பாடசாலையின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் செயற்படும் நோக்குடன் பழைய மாணவர்களினால் 20.01.2013 அன்று பழைய மாணவ சங்கம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. பழைய மாணவர்கள் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக் கொடுத்து அவர்களின் கல்விக்கு பெரிதும் உதவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மாதகல் நுணைசை வித்தியாலய பழைய மாணவர் சுபோதினி சபாரத்தினம் அவர்கள் எழுதிய இவ்வரலாறு தொகுக்கப்பட்டு இங்கு வெளியாகின்றது.