Menu

யாழ் செங்குந்த இந்துக் கல்லூரி

ரபு வழி செழுமை சேர்க்கும் தங்கமென ஒளிருமொரு கலைக் கோயிலாக கிராமப்புற மாணாக்கர்களின் கல்வி வாய்ப்பிற்காக ஏங்கிய ஏக்கத்தை தீர்க்க உதித்த அறிவாலயமாக திருநெல்வேலி கிழக்கு கல்வியன்காட்டில் அமைந்துள்ள செங்குந்த இந்துக்கல்லூரி விளங்கி வருகின்றது. நல்லூர் செங்குந்த சந்தைக்கு முன்புறமாக அமையப் பெற்ற வீதியில் சுமார் 100 யார் தொலைவில் கொன்றையடிவைரவர் ஆலயத்திற்கு சொந்தமான பண்டாரி வளவில் இக்கல்லூரி அமைந்துள்ளது. நல்லூர் இராஜதானி சிறப்புற்று விளங்கிய காலத்திலே கல்வியிலும் கலை இலக்கியத்துறையிலும் சிறப்புப் பெற்றிருந்த இப்பகுதியிலே யாழ்ப்பாண மன்னர்களால் வைத்தியர்களும் சோதிடர்களும் போர்வீரர்களும் குடியமர்த்தப்பட்டனர். அது மட்டுமன்றி இப்பகுதியின் அருகிலேயே சட்டநாதர் வீதியில் சரஸ்வதி மகால் எனும் அறிவாலயம் ஒன்றையும் யாழ்ப்பாண மன்னர்கள் அமைத்திருந்தனர். இவ் அறிவாலயத்தை பின்வந்த போர்த்துக்கேயர்கள் தீயிட்டு அழித்தாரென்பது வரலாறு.

அந்நியராட்சியின் போது கிறீஸ்தவ மிஷனரியினரே கல்வியின் ஏகபோக உரிமையைப் பெற்றதுடன் மிஷனரிப் பாடசாலைகளில் பைபிள் படித்த பின்னரே பாடம் புகட்டும் முறையையும் பின்பற்றி இருந்தனர். அதனால் சைவப்பிள்ளைகள் கிறீஸ்தவ பாடத்தை கற்கும் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆடியபாத வீதியில் ஞானப்பிரகாச சுவாமி அவர்களால் கிறிஸ்தவ பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு கல்வி போதிக்கப்பட்டதுடன் கத்தோலிக்கமும் பரப்பப்பட்டது.

இக்காலத்தில் திருநெல்வேலி கிழக்கில் தற்போதைய செங்குந்த இந்துக்கல்லூரி வளவில் கந்த வாசக மண்டபம் என்று ஒன்று நிறுவப்பட்டு அதில் ஒன்று கூடி அறிவை வளர்த்திருந்தனர். அம்மண்டபத்திலே நடந்த கூட்டம் ஒன்றிலே கலந்து கொண்டு உரையாற்றிய சட்டசபைத்தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட இந்துபோட் ராஜரட்ணம் என்பவர் தேர்தலில் வெற்றி பெற்றால் இந்த கந்தவாசமடத்தை இருமொழிப் பாடசாலையாக ஆக்கித் தருவேன் என உறுதியளித்தார்.அத்தேர்தலில் அவர் தோல்வியடைந்தாலும் தான் கூறியதை நிறைவேற்றினார். இவரது பேருதவியுடன் எங்கெல்லாம் சைவப்பிள்ளைகள் சைவசமயசூழலில் கல்வி கற்க முடியாதோ அங்கெல்லாம் சைவப்பாடசாலைகள் நிறுவப்பட்டது. அந்த நிலையிலே 01.10.1934 இல் விஜயதசமி அன்று இன்றைய செங்குந்த இந்துக்கல்லூரி இரு மொழிப்பாடசாலையாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. செங்குந்த மகாஜன சபையின் உதவியுடன் பூதவராயர் குளத்துக்கு அருகாமையில் பண்டாரி வளவு என்னும் ஒரு கோயில் காணியின் மத்தியில் சங்கமடம் என்ற ஒரு சிறிய மடமே செங்குந்தாவின் ஆரம்பம். இந்தச் சங்கமடம் அமைந்திருந்த பண்டாரி வளவு கொண்டலடி வைரவ சுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணியாகும். இக்காணியை கல்விக் கைங்கரியத்துக்கு உவந்தளித்தவர் அவ்வாலய தர்மகர்த்தாவாகவும் வைத்தியராகவும் சோதிடராகவும் இருந்த உயர் திரு ச. இளையதம்பி ஆவார். அவர்களால் வழங்கப்பட்ட காணியில் இப்பாடசாலை ஆரம்பித்து வைக்கப்பட்டது. திருவாளர் சி.கந்தையா, திரு. ஐயாத்துரை, பண்டிதர் வேதாரணியம், திரு.ச.நடராசா, பண்டிதர் சு. இராசையா, பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, திரு. சுவாமிநாதன், திரு.பொ.கைலாசபதி, திரு.சி.கந்தசாமி ஐயர் ஆகியோர் ஆசியுடன் இக்கல்லூரி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கல்லூரியின் முதல் அதிபராக சுன்னாகம் குமாரசுவாமிப்புலவரின் மகனாகிய திரு. முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1934-1943) அவர்கள் நியமிக்கப்பட்டார். இவரையே ஊசிக்குடுமி வாத்தியார் என எல்லோரும் அன்பாக அழைத்தனர். இந்துபோட்ராஜரத்தினப் பெரியரால் இக்குலமக்களின் நிதியால் அமைக்கப்பட்ட இப்பாடசாலை செங்குந்த என்ற பெயருடன் இருக்க வேண்டும் என்பதற்கமைய அப்பெயருடன் வீறுநடைபோடத் தொடங்கியது.

பின்னர் செங்குந்த சைவத்தமிழ்க் கலவன் பாடசாலை என்ற பெயரில் உருவாகிய இப்பாடசாலையில் திரு.சபாஆனந்தர், திரு.கந்தையா, திரு. சின்னத்துரை, திரு.விஜயரத்தினம், திரு. K.S.விஸ்வலிங்கம், திருமதி.சிவபாக்கியம், திரு.சின்னப்பிள்ளை, எனப் பலர் முதலாவது ஆசிரிய குழாமாக பதவி ஏற்று இருந்தனர். திரு.முத்துக்குமாரசுவாமி அவர்கள் அதிபர் பணியினின்றும் ஓய்வு பெற திரு கணபதிப்பிள்ளை (1944-1967) என்பார் அதிபர் பதவி ஏற்றார். கால் நூற்றாண்டு அதிபராக செங்கோலோச்சிய இவரது காலமே பொற்காலம் எனலாம். இவர் உள்ளத்தால் கல்லூரியையும் மாணவரையும் ஆசிரியரையும் கொள்ளை கொண்டு பாடசாலையின் பல்பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டவர். இவரது காலத்திலே ஆண்கள் வேட்டி சால்வையுடனும் பெண்கள் நீளப்பாவாடை சட்டை தாவணியுடனும் கல்வி கற்க வந்தனர். இக்காலத்தில் ஒட்டக்கூத்தர் விழா நவராத்திரி விழா என்பன சிறப்பாக நடைபெற்று வந்தது. இவரது காலத்தில் தரம் 1-5 வரையும் ஆரம்பப்பிரிவு அதிபராக திரு. சி.நடராசா பணிபுரிந்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகளில் அதிகளவு சமயப்பெரியார்களும் அறிஞர்களும் பாதம் பதித்த ஓர் கல்லூரியாக இது விளங்கியுள்ளது. கவியோகி சுத்தானந்த பாரதியார், திருமுருக கிருபானந்தவாரியார், பேராசிரியர் ஆ. ச. அழகப்பன், தவத்திரு குன்றக்குடிஅடிகளார், புலவர் கோவிந்தர் போன்ற இந்திய அறிஞர்கள் பாதம் பதித்த சிறப்புடையது. இப்பாடசாலை 1949 இல் செங்குந்த இந்து ஆங்கிலப்பாடசாலையாக வளர்ச்சி கண்டது. 1959 இல் முதன்முதலாக க.பொ.த உயர்தரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அப்போது பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் 100% சித்தியடைந்ததுடன் 90% மேற்பட்டோர் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அகில இலங்கை ரீதியாகவும் சாதனையும் படைக்கப்பட்டது. 1939இல் ஜே.எஸ்.சிக்கு முதலில் தோன்றிய மாணவர்களும் 100% சித்தியடைந்ததனால் ஒருநாள் விசேட விடுமுறை விடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து S.P நடராசா (1986-1970) அவர்கள் அதிபராக கடைமையேற்றார்.இவரது காலம் சொற்பம் எனினும் சீருடையையும் முகாமைத்துவ ஒழுங்குமுறை என்பவற்றை அறிமுகப்படுத்தியதுடன் ஒழுங்கு கட்டுப்பாட்டை நிலை நாட்டினார். இவர் மாணவத்தலைவர் முறையை அறிமுகம் செய்ததுடன் இவரது காலத்தில் தான் நான்கு இல்லங்களும் உருவாக்கப்பட்டு விளையாட்டுப்போட்டி பொறுப்பாசிரியராக திரு. எஸ். கோபாலசிங்கம் அவர்களை நியமித்து பாடசாலை மைதானம் இல்லாத போதும் சாதனா மைதானத்தில் இல்ல விளையாட்டுப் போட்டியை ஆரம்பித்து வைத்ததுடன் பாடசாலையில் சாரணீயத்தையும் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து இலங்கை நாயகம் (1971-1972) அவர்கள் அதிபராக கடமை புரிந்தார். அவரது காலத்திலேயே பழைய மாணவர் சங்கங்களினால் படக்காட்சி ழூலம் சேர்க்கப்பட்ட நிதியைக் கொண்டு சட்டநாதர் ஆலயத்திற்குச் சொந்தமான காணி விளையாட்டு மைதானத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டது. இக்காலத்தில் தரம்1-5 வரையுள்ள மாணவர்கள் அயலிலுள்ள பாடசாலைக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு இப்பாடசாலையில் தரம்6 தொடக்கம் தரம்13 வரை வகுப்புக்கள் நடைபெற்றது. தொடர்ந்து கல்வி அதிகாரியாக இருந்த வரணி சிவப்பிரகாசம் அதிபராக கடமை ஏற்று கல்லூரி வளவிலேயே இருந்து அல்லும் பகலும் கல்லூரியை வளம்பெறச்செய்தார்.

தொடர்ந்து 1973இல் சிறிது காலம் நாகராஜா என்பவர் அதிபராக கடமையாற்றி பின்னர் வவுனியா கல்விப்பணிப்பாளாராகச் சென்றதும் திரு. இ. பொன்னம்பலம் (1974) இல் அதிபராக வந்தார்.இருவரும் சிறிது காலமே சேவையாற்றினார்.

இவரைத் தொடர்ந்து திரு.வி.மகாதேவா(1975-1977) அதிபராகப்பணிபுரிந்தார் இவரும் தன் காலத்தில் பாடசாலையின் வளர்ச்சிக்காக அரும்பாடு பட்டார். இதன்பின் திரு.எஸ்.சிவப்பிரகாசம் (1978) அதிபராக வந்தார்.இவரது காலத்தில் விளையாட்டு மைதானத்தில் அரங்கு அமைத்து வெகு விமரிசையாக தமிழ்த் தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிட்த்தக்கது. இவருக்குபின் திரு. ப. சுவாமிநாதசர்மா (1979-1985) அதிபராகக் கடமையாற்றினார்.

இவரது காலத்திலே தென்மேற்குப் பக்கத்தில் அமைந்துள்ள சுவாமிநாதசர்மா கட்டடம் அமைக்கப்பட்டதுடன் வடக்குப்பக்கமாக இருக்கும் முத்துக்குமாரசுவாமி மண்டபமும் அமைக்கப்பட்டது. அதில் சித்திர அறை நூலகம் மனையியல் அறை என்பன அமைக்கப்பட்டது. இவருக்குபின் திரு.ம.சண்முகலிங்கம் (1986) என்பார் அதிபராகினார். இவரது காலத்திலே தான் பழைய மாணவர்சங்கத்தினால் விளையாட்டு மைதானத்திற்கு சுற்று மதில் அமைக்கப்பட்டது. கல்வி ஒழுக்கத்தில் பாடசாலை முன்னேறி வரும் நிலையில் இவர் பதவி உயர்வு பெற்று யாழப்பாண பல்கலைக்கத்திற்கு விரிவுரையாளராகச் சென்றார் . இவரைத் தொடர்ந்து திரு. வி. அரியநாயகம் (1987) அதிபரானார். இவரும் சிறிது காலமே அதிபராக பணி செய்தார். இவரைத் தொடர்ந்து திரு.எம்.பரமேஸ்வரன் (1988-1995) அதிபரானார். இவர் காலத்தே பாடசாலையில் வைரவிழா மிகச்சிற்ப்பாய் கொண்டாடப்பட்டது.

திரு.ஏ.ராஜகோபால் (1995-1999) அதிபராக பணியாற்றினார். இவரது காலத்திலே நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் இடப்பெயர்வு ஏற்பட்டது. இவருக்குபின் திருமதி.சி.விஸ்வலிங்கம் (1999-2007) அதிபராக கடமையாற்றினார்..இவரது காலத்திலே தற்போது அலுவலகமாக இருக்கும் மாடிக்கட்டிடம் அமைக்கப்பட்டது. சுவாமிநாதசர்மா கட்டடத்தின் ஒரு பகுதி விஞ்ஞான ஆய்வு கூடமாக மாற்றி அமைக்கப்பட்டது.ஏற்கனவே சித்தரகூடமாக இருந்த பகுதி ஓடியோ வீடியோ அறையாகவும் கணிணி அறையாக மாற்றி அமைக்கப்பட்டது. பான்ட் வாத்தியக் கருவியும் ஒலி பெருக்கிச் சாதனங்களும் சங்கீத உபகரணங்களும் பெறப்பட்டது. அத்துடன் அவுஸ்ரேலிய பழைய மாணவர் சங்கத்தினால் மைதானத்தின் ஒருபகுதி காணி கொள்வனவு செய்யப்பட்டது. தொலைபேசி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

திரு இரத்தினம் பாலகுமார் அவர்கள் அதிபராக 2008 இல் கடமையேற்று பணிபுரிகின்றார். பல புனரமைப்பு வேலைகள் இவர்காலத்தே நடைபெற்ற வருகின்றன.

புகைப்படங்கள்