Menu

வல்வை சிவகுரு வித்தியாசாலை

வரலாறு

யாழ்ப்பாணத்து வல்வெட்டித்துறையில் கடற்கரையோரத்தில் அமைந்திருந்து கல்விப்பசி ஆற்றிவருகின்றது யா/வல்வை சிவகுரு வித்தியாசாலை. ஆறுமுக நாவலரின் வழியில் ஊர்கள் தோறும் பாடசாலைகள் அமைத்து தமிழும் சைவமும் நலிவுறாது கல்விப்பணியாற்றிய புரவலர்கள் வரிசையில் வல்வையில் 1904ம் வருடம் ஒரு ஆலடித் திண்ணைப் பாடசாலையை அமைத்து நடாத்தினார் தையல் பாகனார் எனும் புரவலர். இத் திண்ணைப்பாடசாலையே 1913ம் வருடமளவில் வல்வை சிவகுரு வித்தியாசாலை ஆகியது.

தாபகர் தையல் பாகனார்

யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரச் சமூகங்களின் வரலாற்றில் சைவப் பாரம்பரியத்தினை கட்டிக்காக்கும் பெருமை வல்வெட்டித்துறைக்கு உண்டு. இதற்கு காரணமாக அமைந்த மிக முக்கியமான பாடசாலை சிவகுரு வித்தியாசாலை ஆகும். தோற்றக் காலம் தொடக்கம் இன்றுவரை பாடசாலையில் கடமையாற்றிய அதிபர்கள் இதனை உறுதியாகப் பேணிவந்துள்ளனர். வித்தியாசலையின் முதல் அதிபராகத் திகழ்ந்த புற்றறைச் சின்னையா உபாத்தியாயர் இப்பாடசாலையின் சைவப்பாரம்பரிய மரபை பின்வந்த அதிபர்களிடம் சிறப்பாக கையளித்துச் சென்றிருந்தார்.

1922 இலிருந்து 35 ஆண்டுகாலாம் அதிபராக பணியாற்றிய திரு .சி. கணபதிப்பிள்ளை என்பாரின் காலத்தில் பாடசாலை படிப்படியாய் வளர்ச்சி கண்டு வந்தது. இவ்வதிபர் காலத்தில் தான் 1942ம் வருடம் வள்ளலார் கந்தசாமி பொன்னுச்சாமி என்பார் இன்றும் சிவகுரு வித்தியாசாலை அமைந்திருக்கின்ற காணியை வாங்கி பாடசாலைக்கு என தருமசாதனம் செய்தனர். 1961ம் வருடம் புயலினால் சேதமடைந்த பாடசாலையில் புதிய அறுபதடிக் கட்டடம் அமைக்கப்பட்டு மேலும் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக வந்த ஒவ்வொரு அதிபர்களினதும் சிறப்பான பங்களிப்புகளால் பாடசாலை வளங்கள் அதிகரித்ததோடு மாணவர்களின் கல்வி, கலை அறிவுகளும் வருத்தியடைந்து வந்தன. விளையாட்டு நிகழ்வுகளிலும் மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தினர். 1972 இன் ஸ்வரஜதி நடனவிழாவில் யாழ் மாவட்டத்தில் வல்வை சிவகுரு வித்தியாசாலை மாணவர்கள் முதலிடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. .

1973ம் வருடம் அதிபராக பணியிலமர்ந்த அல்வாய் திரு. சு. கணபதிப்பிள்ளை என்பாரின் காலத்தில் பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மேலும் பெருகின. தொழில் முறைக்கல்வி, மாணவர் கலாமன்றம், பஜனைக் கோஷ்டி, பாலர் கல்விக்கூடம், ஒழுக்கவளர்ச்சி சிந்தனை, விளையாட்டுத்துறை, நுண்கலைப்பாடங்கள் யாவும் புதுமெருகுடன் வளர்ச்சி பெற்றன.

2004ம் வருடம் இடம்பெற்ற சுனாமி பேரழவில் இப்பாடசாலை பௌதிக வளங்கள் பூரணமாய் அழிந்து போக அக்காலத்தில் அதிபராக இருந்த திரு. த. தபேந்திரராசா மற்றும் அவரின் பின் அதிபராகிய திரு. ஆ. சிவநாதன் ஆகியோர்களுடைய காலத்தில் பாடசாலை வகுப்பறைகளும் மண்டபங்களும் சிறிது சிறிதாக பல நிறுவனங்களின் உதவிகளுடன் மீளமைக்கப்பட்டு பாடசாலை மீளவும் பழைய சிறப்புடன் இயங்க ஆரம்பித்தது. இவ் மீள் உருவாக்கத்திற்கு பழையமாணவர்கள் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், சுனாமி அனர்த்த நிவாரண அமைப்பு, கிறிஸ்தவ ஒன்றியம், சுண்டுக்குழி மகளிர் கல்லூரி போன்ற அமைப்புக்களின் உதவிகள் உறுதுணையாயிருந்தன.

இன்றுவரை பாடசாலை பௌதிக வளங்கள் மீளக்கப்பட்டவண்ணமும் மெருகூட்டப்பட்ட வண்ணமும் உள்ளன. 2021ம் வருடம் பாடசாலைக்கு புதிய நுழைவாயில் ஒன்றும் அமைக்கப்பெற்றது.

நூறாண்டு கடந்த சிவகுரு வித்தியாசாலையின் சாதனைகள் பல. பாடசாலை மாணவர்கள் மாவட்ட, மாகாண, தேசிய மட்டங்களில் பல சாதனைகளை நாட்டியுள்ளனர். நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு, விளையாட்டுக்கள், தமிழ்தின ஆங்கில தினப்போட்டிகள் யாவிலும் மாணவர்கள் காட்டும் திறன்கள் சிறப்பானவை.

பாடசாலைக் கீதம்

இராகம்:- ஹம்சத்வனி

பல்லவி
வல்வை சிவகுரு வித்தியாசாலை
வானுற ஓங்கி வாழ்க நிரந்தரம்

அனுபல்லவி
பல்விதமானகலைகளின் தாயகம்
பாரெலாம் புகழநாளெலாம் வளர்க

சரணம்
கல்வியூம் செல்வமும் வீரமும் கொண்ட
கற்றவர் மெச்சிடும் வல்வையில் வளரும்
நல்லிளஞ் சிறுவர் நாடெலாம் போற்ற
நாளும் பயிற்றிடும் நற்கலைக் கோயில்

அலைகடல் ஓரம் மலையெனநிலையாய்
அறிவொளிபரப்பும் அருங்கலாசாலை
தலைமையேபெற்றுத் தாரணிசிறக்க
தாங்குங் கலைக்கூடந் தழைத்திடநன்றே

தமிழ்வளர் தையல் பாகர் அரும்பணி
செய்து உயர் தீபமாய்ச் சிறந்திடும் சாலை
அமிழ்தெனமாணவர் அறிஞராய் ஓங்கிட
ஆசிரியர் சேவைஆற்றிடுங் கலையகம்.

அதிபர்கள்

திரு. சின்னையா உபாத்தியாயர்
திரு. T. K. அருணாசலம்
திரு. வீரகத்தி
திரு. க. வல்லிபுரம்
திரு. வ. ஆறுமுகம்
திரு. சி. கணபதிப்பிள்ளை ஐயர் (1922 – 1956)
திரு இ. துரைராஜா (1956 – 1968)
திரு. க. சி. அழகதுரை (1968 – 1973)
திரு. சு. கணபதிப்பிள்ளை (1974 – 1978)
திரு. சி. நல்லதம்பி (1978 – 1988)
திரு. ஆ. சுப்பிரமணியம் (1988 – 1990)
திரு .R. இராசமணி (1990 – 1992)
திர. த. தபேந்திரராசா (1993 – 2006)
திரு. ஆ. சிவநாதன் (2006 – 2013)
திரு. சு. ஜெயானந்தகுமார்
திரு. கி. கிருஷ்ணாகரன்