Menu

அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலை

வரலாறு

யாழ்ப்பாணத்தின் அச்சுவேலிப் பதியினிலே உலவிற்குள சித்தி விநாயகர் ஆலய மேற்கு வீதியில் அமைந்திருப்பதே அச்சுவேலி சரஸ்வதி வித்தியாசாலையாகும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலே சைவமும், தமிழும், நலிவடைந்திருந்த வேளையிலே சைவத்தையும், தமிழையும் வளர்க்க சைவப்பெரியார்கள் பலர் ஊர்கள் தோறும் பாடசாலைகள் அமைத்து சிறார்களுக்கு கல்வி கற்பித்து வந்தார்கள். அப்பெரு நோக்கோடு அச்சுவேலிப்பதியில் நூற்றாண்டு கண்டிருக்கும் சரஸ்வதி வித்தியாசாலையை தாபித்தவர் ஞானபாநு சிவஸ்ரீ ச. குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள். குருக்களவர்கள் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் காட்டிய வழியைப் பின்பற்றி சைய வித்தியாசாலை ஒன்று தாபித்து நடாத்தி வரவேண்டும் என்று பெருவிருப்பக் கொண்டிருந்தார்கள்.

அப்பெருவிருப்பினால் உலவிற்குள சித்தி விநாயகர் மேற்கு வீதியில் தனது பொருட்கொண்டு காணியொன்றினை கொள்வனவு செய்து 1918ம் வருடம் சித்திரைத் திங்களில் இப்பாடசாலையை ஆரம்பித்து சரஸ்வதி வித்தியாசாலை என நாமகரணமிட்டு நடாத்தத் தொடங்கினார்கள். இப்பாடசாலையில் ஆசிரியராகவும் 1928ம் ஆண்டுவரை கடமையாற்றினார்கள்.

ஏறத்தாள 150 மாணாக்கர்களுடனும் 4 உபாத்தியாயர்களுடனும் ஆரம்பப்பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. சிறிது காலத்திலேயே நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றம் பெற்றது. 1933 ம் ஆண்டு கனிஷ்டபத்திர வகுப்புக்களையும் கொண்ட பாடசாலையாக வளர்ச்சியடைந்தது. 1960ம் வருடம் பாடசாலை அரசினரால் பொறுப்பேற்கப்படும்வரை குமாரசுவாமிக் குருக்கள் அவர்கள் பாடசாலை நிர்வாகத்தை செவ்வையாக நடாத்தி வந்தார்கள். அரச பாடசாலையாக மாற்றமடைந்த பின்னர் அரச உதவியுடன் பாடசாலையின் பௌதீக வளங்களும் மேலும் மேம்பட்டன. புதிய கட்டடங்கள் பலவும் அமைக்கப் பெற்றன.

1994ம் வருடம் பாடசாலையின் பவழவிளா சிறப்பாக கொண்டாடப்பெற்று, பாடசாலைத் தாபகர் குமாரசுவாமிக் குருக்களினது உருவச் சிலையும் திறந்து வைக்கப்பட்டது.

இடப்பெயர்வின் பின்னர் பாடசாலை வளர்ச்சி சிறிது தளர்வடைந்திருந்தாலும் ஊரவர்களதும் அதிபர்களினதும் முயற்சியால் பாடசாலை மீளவும் வளர்ச்சியடைந்து வருகின்றது. 2018ம் வருடம் புதிய வகுப்பறைக் கட்டத்தொகுதியொன்றும் பாடசாலையில் அமைக்கப்பெற்றது.

2018 வருடம் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பெற்றது.

அதிபர்கள்

திரு. ச. செல்லையா
திரு. இ. செல்லையா
திரு. நா.கந்தையா
திரு. சி. மயில்வாகனம்
திரு. சுப்பிரமணியம்
திரு. ஆ. சின்னத்துரை
திரு. ஆ.காசிநாதர்
திரு. சி. ஆறுமுகம் (1973 – 1978)
திரு. ஏ. விக்னேஸ்வரராசா
திரு. பு. கதிரித்தம்பி
திருமதி. சகுந்தலாதேவி சுனகராசா
திருமதி. ஸ்ரீரதி முருகசோதி

பாடசாலைக் கீதம்

அச்சுவேலி மெச்சும் புகழ்உயர்
சீர் சரஸ்வதி வித்தியாலயம் வாழ்க
அன்னை மொழியைப் பொன்னெனப் போற்றி
ஆண்ட சைவமும் அகிலமும் பரவ (அச்சுவேலி மெச்சும்)

நாவலர் பெருமான் நவின்றனல் உரையை
குருக்கள் பெருமான் குமார சாமியால்
நிலைபேர் பெற்றதை நாம் நன்கறிவோம்
குருக்கள் ஐயா ஞாபகசின்னமாய் (அச்சுவேலி மெச்சும்)

நான்முக நாவில் படரும் பாரதி
பாரதி நாவில் படரும் கலைகள்
கலைகள் வளரும் கோவிலுமாகி
கலைகொள் மக்களை ஆக்கித்தந்த (அச்சுவேலி மெச்சும்)

அன்பை பெருக்கி அறிவைப் பரப்பி
ஆண்ட அறிஞ்ஞனை அவனிக்குத் தந்த
நாவலர் பாவலர் பரம்பரை தந்த
என்றும் விளங்க வேண்கின்றோம் (அச்சுவேலி மெச்சும்)

ஆசிரியர் மாணவர் அன்புடையோராய்
அகிலம் விளங்கும் பண்புடையோராய்
ஆல் போல் கிழைத்த அறிவுடையோராய்
அவனியில் விளங்க வேண்டுகின்றோமே. (அச்சுவேலி மெச்சும்)