Menu

கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம்

வரலாறு

ல சைவசமயப் பெரியார்களையும் செந்தமிழ் வடமொழிப் பண்டிதர்களையும் உருவாக்கிய யாழ்ப்பாணத்தின் கோப்பாய் கிராமத்தில் அந்நியர் ஆட்சியில் நீண்டகாலம் மிசனறிப் பாடசாலைகளே நடைபெற்று வந்தன. இப்பாடசாலைகளுக்கு மாற்றாக சைவப்பிள்ளைகள் கற்க ஒரு பாடசாலை வேண்டும் என்ற எண்ணம் ஊர்ப்பெரியார்களுக்கு நீண்ட காலமாகவே இருந்து வந்தாலும் 1926ம் வருடம் சித்திரை மாதம் கோப்பாய் சித்திரவேலாயுத சுவாமி ஆலய முன்றலில் சைவவித்தியா விருத்திச் சங்க காரியதரிசி சு. இராசரட்ணம் அவர்களினதும் உபாத்தியாயர் நாகலிங்கம் அவர்களினதும் தலைமையில் கூடிய பகிரங்க கூட்டமே இப்பாடசாலைக்கு அத்திவாரமிட்டது.

பாடசாலை தொடர்பிலான ஒரு பத்திரிகைக் குறிப்பு – 1936

1926ம் வருடம் விஜயதசமி தினத்தினன்று உபாத்தியாயர் நாகலிங்கம் அவர்களது வீட்டில் அமைக்கப்பெற்ற ஆயிரம் சதுர அடி தற்காலிக கொட்டகையில் வேதாரிணியக் குருக்களை தலைமையாசிரியராயும் க. இளையதம்பி, செல்வி வைரமுத்து செல்லம்மா என்போரை ஆசிரியர்களாகவும் கொண்டு உதயமாகியது கோப்பாய் சரவணபவானந்த வித்தியாலயம். இவ்வருட இறுதியிலேயே இருபாலை இரத்தினசபாபதிக் குருக்கள் அதிபராகி தொடர்ந்து பாடசாலையை சிறப்புட நடாத்தி வந்தார்.

1928ம் வருட விஜயதசமி தினத்தன்று மயிலியோடை முருகர் கந்தர், சின்னத்தம்பி மார்க்கண்டு மற்றும் அவர் சகோதரர் பொன்னையா ஆகிய புரவலர்கள் அளித்த காணியில் சைவ விருத்திச் சங்கத் தலைவர் சு. இராசரட்ணம் அவர்களால் பாடசாலை நிரந்தர கட்டிடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது. மிகவேகமாக கட்டிட வேலைகள் நடைபெற்று பாடசாலை நிரந்தரக் கட்டடத்திற்கு மாற்றப்பெற்றது. இக்காலத்தில் வே. சிதம்பரப்பிள்ளை அவர்கள் தலைமையாசிரியர் ஆனார்கள். பாடசாலை தொடர்ந்தும் வளர்ச்சி கண்டு 1932ம் வருடம் அரச உதவி நன்கொடை பெறும் பாடசாலையாக மாற்றம் பெற்றது. 1938 இல் பாடசாலைக்கு புதிய கட்டடங்கள் அமைக்கப்பெற்று பாடசாலை மேலும் விரிவாக்கப்பெற்றது. 1968இலும் 1972ம் வருடங்களிலும் பாடசாலைக்கு மேலும் கட்டடங்கள் அமைக்கப்பெற்றன. 2001ம் வருடம் பாடசாலைக்கென்று சொந்தமாக ஒரு விளையாட்டு மைதானமும் அமைக்கப்பெற்றது.

பாடசாலை காலத்துக்கு காலம் பல்வேறு அதிபர்களினதும் வழிகாட்டல்களின் கீழ் மேலும் மேலும் விருத்தியடைந்து கோப்பாய் பிரதேச மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாய் அமைந்திருக்கின்றது.

பாடசாலைக் கீதம்

பரவியே நாம் துதிப்போம்-கோப்பாய்
சரவணபவானந்த வித்தியாலய மாதாவை
பரவியே நாம் துதிப்போம்
கரமலரேடேந்தி கல்வி கலை ஞானம்
வரமருளி எமக்கு வாழ்வு தரும் வாணியை (பரவியே….)

சீலம் நிறைந்த சைவம் செந்தமிழ் பண்பெல்லாம்
பாலர் எமக்கு ஊட்டி பரிந்தன்பாய் தருபவள்
ஞாலம் புகழ்ஞான பண்டிதனார் தந்த
மூலகலைக் கோயில் தானுறை அன்னையை (பரவியே….)

தூய தமிழினோடு துலங்கிடும் விஞ்ஞானம்
நயமுடன் கணிதம் ஆங்கிலம் விவசாயம்
தோயும் மனையியலும்திகழுடற் கல்வியோடு
ஆய கலைகள் எல்லாம் அள்ளி அள்ளித் தருபவளே (பரவியே….)

அயர்வு இல்லா எண்கள் அதிபரும் வாழி வாழி
நேயமுடன் கல்வி நல்கும் நல்லாசிரியர் வாழி
உயர்வு உள்ளல் என்னும் உன்னத நெறி வாழி
சரவணபவானந்த வித்தியாலயமும் வாழி (பரவியே….)