கைதடி நுணாவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை

சிவபூமி என அழைக்கப்படும் யாழ்ப்பாணத்திலே 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அமெரிக்க மிஷனரிமாரின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. இவர்கள் குடாநாட்டின் பல பாகங்களிலும் தங்கள் பாடசாலைகளை அமைத்து கல்வி போதித்ததோடு தமது மதத்தினையும் பரப்பி வந்தார்கள். கைதடி நுணாவில் கிராமத்தில் வாழ்ந்து வந்த கனகர் கதிர்காமர் என்பவர் தன்னிடமிருந்து காணியில் 4 பரப்பை மிசன் பாதிரிமாருக்கு அக்கிராத்தில் பாடசாலை ஒன்றினை ஆரம்பிப்பதற்கு நன்கொடையாய் வழங்கினார். கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்கே அங்கு மேலோங்கி நின்றமையாலும், கைதடி நுணாவில் பகுதியைச் சேர்ந்த எவரும் மதம் மாறாமையினாலும் நிறுவப்பட்ட இப்பாடசாலை காணியுடன் மிஷரிமாரால் விலைக்கு விற்கப்பட்டது. ஆயினும் இவ்வூர்ப் பெரியவர்களும் சைவசமயத் தொண்டர்களினதும் தீர்மானத்திற்கேற்ப திரு.குமாரவேலு அவர்களால் பாடசாலை விலைக்கு வாங்கப்பட்டது. 1901 ஆம் ஆண்டு யா / கைதடி நுணாவில் அரசினல் தமிழ்க் கலவன் பாடசாலை நிறுவப்பட்டது.

ஓலையினால் வேயப்பட்ட கட்டடத்துடன் ஆரம்பித்த பாடசாலையின் தலைமை ஆசிரியராக திரு. தம்பிராச சட்டம்பியார் கடமை புரிந்தார். இவரின் கீழ் இரு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டனர். 20 மாணவர்கள் கல்வி கற்றனர். ஐந்தாம் வகுப்புவரை கல்விச் செயற்பாடுகள் நடைபெற்றன. தொடர்ந்து திரு.கந்தையா இளைய தம்பி என்பவர் அதிபராகச் செயற்பட்டார். இவர் ஓய்வு பெற்ற பின் கந்தையா சிவம் அதிபரானார். இவரது காலப்பகுதியில் 04 ஆசிரியர்களும் 30 மாணவர்களுடனும் கல்வி செயற்பாடுகள் நடைபெற்றன.

இவருக்கு பின் திரு.குமாரசாமி, திரு.வீரசக்தி, திரு.செல்லத்தம்பி, திரு.குமாரவேலு என்போர் அதிபராகளாகக் கடமையற்றினார்கள் காலப்போக்கில் பிள்ளைகளின் தொகை அதிகரித்துக் கொண்டு வந்தமையினால் இந்து மகாசாபை பாடசாலையினை பொறுப்பேற்றது. தரம் 05 வரை இயங்கிக் கொண்டிருந்த இப்பாடசாலைக்கு மேலும் கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வகுப்புக்களும் தரம் 8 வரை நடாத்தப்பெற்றன. அதன்பின் படிப்படியாய் பாடசாலை வளர்ச்சியடைய தரம் 11 வரை வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கல்வி போதிக்கப்பட்டு வந்தது.

திரு குமாரவேலுவினைத் தொடர்ந்துதோடந்து இவ்வூரைச் சேர்ந்த திரு. வே. செல்லையாஎன்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 1986 இல் திரு. க. இளையதம்பி அவர்கள் அதிபராகநியமிக்கப்பட்டார். இவரது காலப்பகுதியில் பாடசாலை கல்விச்செயற்பாடுகளில் மட்டுமன்றி விளையாட்டுத் துறையிலும் வளர்ச்சி கண்டது. தரம் 05 புலமைப் பரிசில் பாடசாலையில் மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்குச் சென்றனர். இவரின் பின் திரு.சாம்பசிவம் என்பாரும் திரு.துரைசிங்கம் என்பாரும் அதிபர்களாககடமையாற்றினார்கள்.

1999 இல் திரு.வி.தெய்வேந்திரமூர்த்தி அவர்கள் அதிபராகக் கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் மாணவர்களின் தொகை மேலும் அதிகரித்திருந்தது. எனவே ஆசிரியர்களின் தொகையும் இருபதாக அதிகரிக்கப்பட்டது. இவரது காலப்பகுதியில் பரீட்சைப் பெறுபேறுகள், விளையாட்டுகள், தமித்தினப் போட்டிகள் என்பவற்றில் மாணவர்கள் பங்குபற்றி கோட்டமட்டம், வலயமட்டம் என்பவற்றில் சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர் . மாணவர்கள் பல்வேறு பரீட்சைகளிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றார்கள்.

2000ஆம் ஆண்டு இடப்பெயர்வின் காரணமாகச் சுன்னாகம் மயிலணி வித்தியாலயத்துடன் சேர்ந்து இயங்கிய இப்பாடசாலை 2001ம் ஆண்டு மீளவும் புனரமைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. அதிபர் தெய்வேந்திரமூர்த்தியின் மறைவைத் தொடர்ந்து பகுதித் தலைவர் திருமதி.க.கணேசன் அவர்கள் அதிபரின் கடமையைத் தொடர்ந்து நடாத்திவந்தார்.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 29 திகதி திரு. த. அம்பலவாணர் அவர்கள் இப்பாடசாலையின் அதிபராக நியமிக்கப்பட்டார். இவர் இடமாற்றம் பெற்றுச் செல்ல திரு. ஆ. தங்கவேலுஅவர்கள் பதில் அதிபராகக் 2012 இல் கடமையாற்றி வருகின்றார்.

பாடசாலைக்கீதம்

கைதடி நுணாவில் வித்தியசாலை
சீருடன் வாழியவே
கைதடி நுணாவில் கலங்கரை விளக்காய்
கலையகம் வாழியவே – (கைதடி நுணாவில் )

பத்தொன்பதாம் நூற்றாண்டதில் மலர்ந்து
பலர் மகிழக் கல்வி கலை வளர்த்து
சித்தி தரும் அறிவு வீரம் செல்வம் யாவும்
முத்தென நல்கும் அறிவாலயம் எங்கள் – (கைதடி நுணாவில் )

சமயம் கணிதம் தமிழ் ஆங்கிலம் விஞ்ஞானம்
புவியியல் அழகியல் மனையியல் குடியியல்
விவசாயம் வரலாறு தொழில்நுட்பம் சுகாதாரம்
விளையாட்டிலும் வெற்றி மேம்படச் செய்திடும் – (கைதடி நுணாவில் )

பண்பொடு பழக்கமும் பல நமக்களித்து
அன்பொடு அருளும் ஒழுக்கமும் ஊட்டி
மண்பிசை மக்களின் மதிப்பினைச் சேர்த்திங்கே
இன்புடையோராய் இனிதெமை ஆக்கிடும் – (கைதடி நுணாவில் )