Menu

கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலயம்

வரலாறு

சைவமும் தமிழும் வளர்த்த யாழ்ப்பாணத்தே கிறீஸ்தவ மிஷனரிமாரின் ஆதிக்கம் பெருகியிருந்த காலத்தே சைவத் தமிழ்ச் சூழலில் ஒரு பாடசாலை அமைய வேண்டும் என்ற விருப்போடு கிறிஸ்தவ மிஷனரிகளுக்குச் சமதையாக சைவவித்தியாபிவிருத்திச் சங்கமூடாகப் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டன. அவ்வகையில் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கீரிமலை மண்ணிலும் ஒரு சைவத் தமிழ்ப் பண்பாட்டோடு கூடிய ஒரு பாடசாலையை நிறுவ வேண்டும் என்று அங்குள்ள பெரியவர்கள் எண்ணினர்.

அதற்கேற்ப அப்பகுதியில் வாழ்ந்த கிராமசேவகர் சுப்பிரமணியம் கனகசபை அவர்கள் நகுலேஸ்வரம் ஆலயத்துக்கு அருகில் ஒரு பாடசாலையை நிறுவ முன்வந்தார். அவர் தனக்குச் சொந்தமாக இருந்த பத்தரைப் பரப்புக் காணியை வழங்கி, கொட்டகை அமைத்து, சைவ வித்தியாவிருத்திச் சங்க முகாமையின் கீழ் இப்பாடசாலையை நிறுவினார்.

01-07-1955 அன்று மங்கல வாத்தியம் முழங்க தபால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த கௌரவ சு. நடேசன் அவர்கள் பாடசாலையைத் திறந்து வைத்தார். அரசாங்க அதிபரான ம. சிறிகாந்தா அவர்கள் சுபவேளையில் நகுலேஸ்வர மகா வித்தியாலயம் என்ற நாமம் சூட்டி வித்தியாரம்பம் செய்து வைத்தார்.

இச்சமயத்தில் வேறிடத்தில் நிரந்தர ஆசிரியராகப் பணி புரிந்த திரு. வ. கந்தையா அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்து விட்டு பதிவு பெறாத நிலையில் இப்பாடசாலையைப் பொறுப்பேற்றார். 40 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் படிப்படியாக மாணவர் தொகை அதிகரித்தது. கருகம்பனை கிராம முன்னேற்றச் சங்கத்தின் உதவியுடன் கிராமத்தில் நிதி திரட்டப்பட்டு 100 அடி நீளமும், 40 அடி அகலமும் உடைய கட்டடம் அமைக்கும் வேலை ஆரம்பிக்கப்பட்டது. தமிழரசுக் கட்சித் தலைவராயிருந்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்கள் வழங்கிய 25ஆயிரம் ரூபாவுடன் கட்டடம் பூர்த்தி செய்யப்பட்டது. 19-05-1956 இல் இப்பாடசாலையைத் தரிசித்த வடமாநில கல்விப் பணிப்பாளர் இப்பாடசாலையைப் பதிவு செய்யச் சிபார்சு செய்தார்.1957 முதல் இங்கு கடமையாற்றிய ஆசிரியர்களுக்கு வேதனம் வழங்கப்பட்டது.

1960 இல் க.பொ.த.சாதாரண வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.இவ்வாண்டு பாடசாலை அரசாங்க முகாமைக்கு உட்படுத்தப்படடது. பின்னர் பாடசாலைக்குத் தென்புறமாக இருந்த 18 ½ பரப்பு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 28 ½ பரப்புக் காணியுடன் 01.07.1965இல் பத்தாவது ஆண்டு நிறைவு விழாக் கண்டது நகுலேஸ்வரா வித்தியாலயம். 29-06-1969இல் கதம்ப விழா வைத்து அதன் மூலம் பெறப்பட்ட நிதியில் கிணறு வெட்டப்பட்டு பாடசாலையிலிருந்த தண்ணீர்ப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டது.

1977இல் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகம் அவர்கள் வழங்கிய 30,000.00 ரூபா நிதியில் 60 x 20 அடிக் கட்டடம் அமைக்கப்பட்டது. 1978இல் எதிர்க்கட்சித் தலைவர் திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் வழங்கிய 20,000.00 ரூபா நிதியில் 40 X 20 கட்டடம் கட்டப்பட்டது. 1980 இன் முற்பகுதியில் 524 மாணவரும்,12 முழுநேர ஆசிரியரும் ஒரு பகுதிநேர ஆசிரியரும் கடமையாற்றினர்.

திரு. வ. கந்தையா அவர்கள் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து திருமதி த. இராமசாமி அதிபரானார். இவரது காலத்தில் பொறியியலாளர் இரத்தினம் அவர்களது உதவியால் இருமாடிக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.

1990இல் இடம்பெற்ற போர்ச்சூழலைத் தொடர்ந்து பாடசாலை அசையும் சொத்துக்களுடன் இடம்பெயரத் தொடங்கியது. பின்வரும் இடங்களில் இப்பாடசாலை இயங்கியது.

15-06-1990இல் இளவாலை அன்னை வேளாங்கன்னி ஆலயம்
05-12-1990இல் இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம்
15-07-1991இல் சிறுவிளான் கனகசபை வித்தியாசாலை
24-06-1992இல் அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்
07-09-1992இல் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயம்
28-03-1994இல் சீரணி, சண்டிலிப்பாயில் தனியார் வீடு
01-02-1996இல் வரணி மகா வித்தியாலயம்
06-05-1996இல் சண்டிலிப்பாயில் தனியார் காணி
10-01-2005இல் சண்டிலிப்பாய் மத்தியில் தனியார் வீடு

தொடர்ந்து பாடசாலையைப் பொறுப்பேற்ற அதிபர் சு. சிவபாதரத்தினம் அவர்கள் திணைக்கள அழுத்தத்தின் மத்தியிலும் மூடாது தொடர்ந்து இயங்கச் செய்தார்.கல்வித் திணைக்கள உதவியுடன் மூன்று தற்காலிக கொட்டகைகளை நிறுவி பாடசாலையைச் செயற்பட வைத்தார்.

அவர் இளைப்பாறியதைத் தொடர்ந்து பாடசாலையை திரு.த.மோகன்ராஜ் அவர்கள் பொறுப்பேற்றார்.இவரது காலத்தில் மலசலகூடத் தொகுதி அமைக்கப்பட்டது.

01-02-2010இல் இலங்கை அதிபர் சேவை நியமனம் பெற்று திரு.சு.ஸ்ரீகுமரன் பாடசாலையைப் பொறுப்பேற்றார். பாடசாலையினைச் சென்று பார்வையிட்டார். காடாகப் பெருமரங்கள் வளர்ந்திருந்த நிலையிலும்,கட்டடங்கள் அழிவடைந்த நிலையிலும் இருந்த பாடசாலை தொடர்பான விடயங்கள் திணைக்களத்துக்கு படங்கள் மூலம் தெரியப்படுத்தப்பட்டது. மீள்குடியமர்வு ஆரம்பிக்கப்பட்டதும் தெல்லிப்பழை பிரதேச செயலருடன் தொடர்பு கொண்டு கட்டடங்கள் அமைப்பதற்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இராணுவ அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மீளெழுச்சித் திட்டத்தின் மூலம் பிரதேசம் துப்புரவு செய்யப்பட்டு, கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பொறுப்பின் கீழ் கட்டட இடிபாடுகள் அகற்றப்பட்டன. மலசலகூடமும் திருத்தப்பட்டது.

29-06-2011 அன்று வடக்கின் துரித மீட்சித் திட்டத்தின் கீழ் 90 அடி நீளமும்,25 அடி அகலமும் கொண்ட ஆய்வு கூடத்துடன் கூடிய மாடிக் கட்டடம், தண்ணீர்த் தாங்கி, மலசலகூடத் தொகுதி ஆகியன அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு வைபவம் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது. நிதி ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஆரியரத்ன ஹேவகே மற்றும் வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு.இ.இளங்கோவன் ஆகியோர் அடிக்கற்களை நாட்டி வைத்தனர்.

பல அரச சார்பற்ற நிறுவனங்கள், கிணறு, மலசலகூடத் தொகுதி மற்றும் வகுப்பறைக் கட்டடங்களை புனரமைக்க உதவி செய்தன.

02-01-2012 அன்று கீரிமலையில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. அதன்பின்னர் 90 அடி நீளமான கட்டடம் ஒன்று அமைப்பதற்கான நிதி பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரால் ஒதுக்கப்பட்டது.

மைதானப் புனரமைப்பு, சுற்று மதில் அமைப்பு, சைக்கிள் தரிப்பிட அமைப்பு, ஆரம்பக் கல்வி வகுப்பறை அமைப்பு, சிறுவர் பூங்கா அமைப்பு,சமையற்கூடமும் களஞ்சியமும் அமைப்பு எனப் பல்வேறு வேலைத் திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும் திடசங்கற்பத்துடன் பாடசாலை தற்பொது செயற்பட்டு வருகின்றது.

பாடசாலைக் கீதம்

இராகம் மோஹனம்
தாளம் ஆதி

பல்லவி

வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
வளர் நகு லேஸ்வர
மகா வித்தியாலயத்தை
வாழ்த்துவோம் வாழ்த்துவோம்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

சரணங்கள்

செந்தமிழ் ஆங்கிலம் சீர்ய விஞ்ஞானம்
சிறப்புடனே பயில்வோம்
பைந்தமிழ் கலைகள் பலவுமே கற்று
பாங்குற வாழ்ந்திடுவோம். – (வாழ்த்துவோம்)

எண்ணும் எழுத்தும் கண்ணெனக் கொண்டு
என்றும் பயின்றிடுவோம்
மண்ணில் புகழுடன் மற்றவர் போற்றிட
மாண்புற வாழ்ந்திடுவோம் – (வாழ்த்துவோம்)

வாழிய எம்தமிழ் வாழிய எம்கலை
வாழிய எம்நாடே
வாழிய நல்லறம் வாழிய நம்மினம்
வாழிய வாழியவே – (வாழ்த்துவோம்)