Menu

காரைநகர் இந்துக் கல்லூரி

யாழ்ப்பாணத்துக்கு அணித்தாயமைந்திருக்கும் காரைநகரில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகள் கல்வி பற்றிய சிந்தனை எழுச்சி பெற்ற காலமாகும். இக்காலத்தில் இங்கு தமிழ்மொழி சிரேஷ்ட வகுப்புக்கள் வரை கல்வி போதிக்கும் பாடசாலைகளாக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, சைவப்பிரகாச வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் மட்டுமே இயங்கிவந்தன. ஆங்கில மொழி கற்பிக்கும் பாடசாலைகள் எதுவும் இயங்கி வரவில்லை.

இக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த திரு. கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, திரு. சிதம்பிரப்பிள்ளை கந்தப்பு, திரு. மு. கோவிந்தப்பிள்ளை ஆகியோரின் முயற்சியினால் திரு. மு. கோவிந்தப்பிள்ளை அவர்களது சொந்த நிலத்தில் 1888 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெரியார் முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகு கொட்டகையில் ”இந்து ஆங்கிலப்பாடசாலை” ஆரம்பிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

பெரியார் முத்து சயம்பு

இப்பாடசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் கலங்கரை விளக்கமாக நின்று மாணவர்களை நல்வழிப்படுத்தியதுடன் ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் செயற்பட்டார். இந்து ஆங்கில வித்தியசாலை காலப்போக்கில் திருஞானசம்மந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பாடசாலையின் வளர்ச்சியுடன் மாணவர்தொகையும் அதிகரித்து வந்தது. பழைய கொட்டகை போதாமையினால் பல அன்பர்கள் மனமுவந்து பாடசாலைக்கு என ஒரு மண்டபத்தினையும் இரண்டு அறைகளைக்கொண்ட வகுப்பறைகளையும் அமைத்துக் கொடுத்தனர். இது வித்தியாசாலை வளர்ச்சிக்கட்டத்தினை நோக்கி எடுத்து வைத்த முதற்காலடியாகும். இக்கட்டிடத்தினை அக்காலப்பகுதியில் அரசாங்க அதிபராக இருந்த திரு. துவைனம் என்பவர் திறந்து வைத்தார்.

மாணவர்தொகை அதிகரித்து வந்ததினால் பாடசாலையின் மனேச்சராக திரு. வி. காசிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன் 1911 இல் சிவத்திரு ஈ. கே. சிவசுப்பிரமணிய ஐயர் B.A, திரு ஐ. வ. குலசிங்கம், திரு. கா. சி. மகேச்சர்மா, சிவத்திரு. கா. சிவசிதம்பர ஐயர் ஆகியோர் உதவி ஆசிரியாக நியமிக்கப்பட்டனர். 1912 இல் உதவி நன்கோடை பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. அத்துடன் 1918 இல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிகார சபையிடம் இப்பாடசாலை நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

பாடசாலை தலைமை ஆசிரியர்களாக

சிவத்திரு ஈ. கே. சிவசுப்பிரமணிய ஐயர், சிவத்திரு எஸ். இராமகிருஷ்ன ஐயர், தரு. பொ. வேலுப்பிள்ளை, திரு. இரகுநாதபிள்ளை, திரு. ந. கந்தையா, சிவத்திரு அ. சீதாராம ஐயர், திரு. அ. சரவணமுத்து, திரு. கே. எஸ். இராசரத்தினம் என்பர்கள் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்தனர். சிவத்திரு அ. சீதாராம ஐயர் இரண்டாம் முறையாக 1934 ஆம் ஆண்டு பங்குணி மாதம் தலைமை ஆசிரியராக நியமனம் பெற்றார்.

காரைநகர் இந்துக்கல்லூரியின் தோற்றம்

1936 இல் பாடசாலை அதிபராக திரு. ஏ. கனகசபை B.A நியமனம் பெற்றார். இந்து ஆங்கில வித்தியசாலை சிரேஷ்ட வித்தியசாலையாகி காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது.

கல்லூரியின் பொற்காலம்

கலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt அவர்கள் கல்லூரியன் அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகின்றது. 1946 தொடக்கம் தொடர்சியாக 28 வருடங்கள் சேவையாற்றிய பெருமைக்குரியவராக இவர் இருப்பதுடன் இவரது காலப்பகுதியல் விஞ்ஞான ஆய்வு கூடம், மனையியல் கூடம், நூல்நிலையம், வகுப்பறைகள் எனப் பௌதீக வளங்கள் விஸ்தரிக்கப்பட்டன. வரலாற்று பெருமைக்குரிய அமரர் நடராசா நினைவு மணடபம் அமரர் நடராசா அவர்களது மனைவியார் பண்டிதை தங்கம்மா அவர்களால் கட்டப்பட்டு கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இம்மண்டபத்தினை அக்காலப்பகுதியல் நிதி மந்திரியாக இருந்த கௌரவ ஏ. எஸ். இராஜபக்சா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அமரர் நடராசா அவர்களினது உருவப்படம் அந்நாள் இலங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்ட்டர் ஐவர் ஜென்னிங்ஸ் என்பவரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

விளையாட்டு மைதானம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்து திருமதி நடராசா அவர்களிடம் நினைவு மண்டபத்துடன் இணைந்து அன்னாரது நிலத்தினையும் தர்ம சாதனமாக பெற்று விளையாட்டு மைதானத்தினை உருவாக்கிய பெருமை இவரையே சாரும் இத்துடன் மலேசியா சென்று பழய மாணவர்களிடம் நிதி சேகரித்து சயம்பு ஞாபகார்த்தமாக கீழ்மாடியில் வகுப்பறைகளும் மேல்மாடியில் நூல் நிலையமுமாக கொண்ட கட்டிடத்தினை 1959 ஆண்டு அமைத்தார். இது முன்னாள் சபாநாயகர் சேர். வைத்திலங்கம் துரைச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்து.

தியாகராசாவுக்கு பின்

திரு. பி. எஸ். குமாரசாமி, திரு. ஆ. நடராசா, திரு. கே. சுப்பிரமணியம், திரு. கே. கே. நடராசா, திரு. வி. தர்மசீலன், கவிஞர் திரு. காரைசுந்தரம்பிள்ளை, திரு. எஸ் பத்மநாதன், சிவத்திரு ஏ. கே சர்மா ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றினர். இவர்களை தொடர்ந்து திரு. மூ. நிலகண்டசிவம், அவர்கள் கடமையேற்றார். இவரது காலப்பகுதியில் கொத்தணிப் பாடசாலையாக இயங்கிவந்தது குறிப்பிடத்தக்கது. 1991ம் ஆண்டு இக்கல்லூரியையும் ஏனைய கிராமப் பாடசாலையையும் பாரிய சோதனைக்கு உள்ளாக்கியது. இவரைத்தொடர்ந்து திரு. ஆர். எஸ். தேவதாஸன் M.A(Hin. Civ) அதிபராக சேவையாற்றினார்.

கல்லூரியின் முன்னாள் உப அதிபர் திரு. சி. பொன்னம்பலம் அவர்களினால் அமரர் சயம்பு ஞாபகார்த்தமாக சயம்பு சிலையும் அதற்குரிய மண்டபமும் அமைக்கப்பட்டது.

அண்மைக்காலம்

நாட்டின் பாரிய இடம்பெயர்வுகள், இழப்புக்கள் என்பன காரணமாக பாடசாலை பெரும் பாதிப்புக்குள்ளாகியது. இதனை திரும்ப இயங்க செய்வதற்கு காரைவாழ் மக்கள் மட்டும் அன்றி கல்வித்திணைக்கள அதிகாரிகள், கல்விச்சமூகத்தினர், பெற்றோர் பழைய மாணவர்கள் போன்றோரின் முயற்சி சொல்லுந்தரம்மன்று. திருமதி தே. பாலசிங்கம் அவர்களின் அநுசரணையும் இக்கல்லூரியை இயங்க வைப்பதற்க்கு பெரும்துனை புரிந்தது என்பது உண்மை. அவர் பதவி உயர்வு பெற்று பரிட்சை திணைக்களம் செல்ல பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அதிபரானர். இவரைத்தொடர்ந்து தரு. கா. குமாரவடிவேலு, திரு. அ. குமரேசமூர்த்தியும் பதவி வகித்தனர். 15.06. 2010 தொடக்கம் திரு. பொ. சிவானந்தராசா அதிபராக பதவியேற்று கடமையாற்றி வருகின்றார்.