ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம்

ழாலை ஊரின் மத்தியிலே அமைந்திருக்கின்றது ஏழாலை வடக்கு சைவ மகாஜன வித்தியாலயம். 1940 ஆம் வருடம் சித்திரை புதுவருட தினத்தன்று ஊர்ப்பெரியார்களான ஆத்மஜோதி நா. முத்தையா, மு. ஞானப்பிரகாசம், திரு சின்னையா ஆகியோருடைய முயற்சியோடும் வழிகாட்டலோடும் ஊர்மக்களின் பேராதரவோடும் அமைக்கப்பட்டது. கிடுகினாலே வேயப்பட்ட கூரையோடும் மண்ணினால் மெழுகப்பட்ட தரையும் கொண்டதாய் இவ்வித்தியாலயம் 80 மாணக்கர்களோடும், 7 ஆசிரியர்களோடும் தரம் 8 வரையான வகுப்புக்களை கொண்டதாய் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலை உருவான வரலாறு சுவாரசியாமானது, பண்டிதர் யோன்பிள்ளை என்னும் போதகர், தாம் வசித்த சூராவத்தை பகுதிக்கு வந்த கத்தோலிக்க ஆயருக்கு வாசித்தளித்த வரவேற்பில், சில பயன்தரு தேவைகளை வேண்டியிருந்தார். அவற்றை நிறைவேற்றி உதவுவீர்களாயின், ஏழாலையை இளவாலை போன்றாக்குவோம் – எனும் பொருள்பட கோரியிருந்தார். மேற்படி பத்திரத்தை கண்ணுற்றோர், தம் மனக்கருத்தை – சமயகுரோதம் தோன்றும் விதமாய் வெளியிட்டு இருப்பதனை கண்டு அதனால் ஏற்பட்ட உத்வேகத்தினாலே குறிப்பிட்ட சந்தியில் ஒரு சைவப்பாடசாலையை அமைப்பது என தீர்மாத்தார்கள். பொதுமக்களின் குன்றா முயற்சியோடு மிகக்குறுகிய காலத்தில் பாடசாலையும் கட்டி முடிக்கப்பட்டது.

பாடசாலைகள் அரசுடமை ஆகுவதற்கு முன்னர் இப்பாடசாலை “பரமேஸ்வராக் கல்விச் சபை” யின் பராமரிப்பில் இயங்கி வந்தது. 1960இல் அரசு பாடசாலையினை பொறுப்பேற்றுக் கொண்டது. 1954ம் ஆண்டு இப்பாடசலை சிரேஸ்ட பாடசாலையாய் தரமுயர்த்தப்பட்டிருந்தாலும், பின்னர் 1962 இல் கனிஸ்ட இடைநிலை பாடசாலையாக மாற்றம் பெற்றது. 1974ம் ஆண்டிலிருந்து க.பொ.த சாதாரண தர வகுப்புக்களும் நடைபெற்று வருகின்றன. 1940 தொடக்கம் 1960 வரையான 20 வருடகாலம் பாடசாலையின் அதிபராய் இருந்து பெரும் சேவையாற்றிய உ. சந்திரசேகரம் அவர்கள் பாடசாலையின் வரலாற்றில் குறித்துச் சொல்லப்பட வேண்டியவர்கள்.

தற்போது இப் பாடசாலையில் 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றார்கள்.