Menu

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி

ல்லை நகர் ஆறுமுக நாவலர் பெருமான் உருவாக்கி விட்டுப்போன தமிழ்ப் பற்றும் சைவசமயப் பற்றும் 1888ம் ஆண்டினில் தமிழ் மொழிக்கும், சைவ சமயத்திற்கும், தமிழர் தம் கலாச்சாரத்திற்கும் புத்துயிர் கொடுக்கும் சைவபரிபாலன சபையாய் உருக்கண்டது. இச்சபையானது யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மற்றும் இணைந்த கல்லூரிகள் அதிகார சபை ஒன்றை உருவாக்கி அதன்மூலம் பாடசாலைகளை நிருவகித்து வந்தது. இந்தச் சபையானது அரசினரால் 1902 இல் உத்தியோக பூர்வமாய் அங்கீகரிக்கப்பட்டது.

1935இல் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் அதிபராக இருந்த திரு குமாரசுவாமி அவர்கள், அதுவரை காலமும் ஆண்கள் பாடசாலையாயிருந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் பெண்பிள்ளைகளை அனுமதிக்க ஆரம்பித்தார். அவரின் இந்த புரட்சிகரமான செயற்பாடு வண்ணார்பண்ணையிலிருந்த பலரதும் கவனத்தை ஈர்த்தது. விரைவிலேயே பெண்களுக்கென்று தனியான ஒரு பாடசாலை தேவை என்ற நிலையினையும் ஏற்படுத்தியது.

இந்து மகளிர் கல்லூரியின் தோற்றம்

1943ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 10ம் திகதி யாழ் இந்துக்கல்லூரி அதிகார சபை அதன் கீழான முதலாவது பெண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியை உருவாக்கியது. திரு சிவகுருநாதர் பொன்னுசாமி என்பார், தனது வீடான பொன்னாலயத்திலே பாடசாலையை இயங்க அனுமதித்தார். பாடசாலையில் மாணவர் தொகை அதிகரிக்க, 1944ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி யாழ் இந்துக் கல்லூரியின் மைதானத்தின் ஒரு பகுதிக்கு பாடசாலை மாற்றப்பட்டது.

இந்து மகளிர் கல்லூரியின் வரலாறு

யாழ் இந்து மகளிர் கல்லூரியின் ஸ்தாகரும், 1930-1950 வரையான காலப்பகுதியில் பிரபல இந்து மத சமூக சேவகராகவும் அறியப்படுகின்ற நீராவியடியினைச் சேர்ந்த திருமதி விசாலாட்சி அம்மாள் சிவகுருநாதர் அவர்கள், அரசடி வீதியிலே இருந்த அவரது நடுத்தோட்டம் என அழைக்கப்பட்ட 24 பரப்பு காணியினை பாடசாலையினை நிரந்தரமாக அமைக்கவென 1941 இல் நன்கொடையாய் வழங்கினார்.

அவரது கணவரும் சமூக சேவகருமான திரு இராமலிங்கம் சிவகுருநாதரும், அவரது மச்சினரான திருமதி வள்ளியம்மாள் சிவகுருவும் தங்களது இராஜ வரோதய பிள்ளையார் ஆலயம் உள்ளடங்கலான 16 பரப்புக்காணியினையும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்காய் வழங்கினார்கள்.

1945ம் ஆண்டு செப்ரெம்பர் 7ம் திகதியிலிருந்து நிரந்தர இடத்தில், ஒலையால் வேயப்பட்ட கட்டடங்களில் பாடசாலை இயங்க ஆரம்பித்தது. ஆதே நாளில் பாடசாலை முகாமையாளராயிருந்த வைத்திலிங்கம் துரைசுவாமி அவர்கள் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான அடிக்கல்லினையும் நாட்டி வைத்தார்.

பாடசாலையினுள் அமைந்திருக்கும் இராஜவரோதய பிள்ளையார் ஆலயம் பாடசாலைக்கு அருளினை அள்ளி வழங்கி வருகின்றது.

யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை

1978ம் ஆண்டிலிருந்து யாழ் இந்து மகளிர் கல்லூரியின் தரம் 1 முதல் 5 வரையான வகுப்புக்கள் தனியாய் யாழ் இந்து மகளிர் ஆரம்பப் பாடசாலை என்ற பெயரில் இயங்க ஆரம்பித்தது. இப்பாடசாலையின் முதலாவது அதிபர் திருமதி விக்னேஸ்வரா ஆவர்.

கல்லூரி அதிபர்கள்

திரு. குமாரசுவாமி
கல்லூரியின் முதலாவது அதிபர், யாழ் இந்துக் கல்லூரியின் முன்னாள் அதிபராயிருந்து திரு குமாரசுவாமி ஆவார். ஒரு நிரந்தர அதிபர் பாடசாலைக்கு நியமிக்கப்படும் வரை இவர் தற்காலிக அதிபராக இருந்து பாடசாலையின் வளர்ச்சிக்கு பெரும்பணி ஆற்றினார்.

செல்வி காயத்திரி பொன்னுத்துரை (திருமதி காயத்திரி கணேசன்) 1943-1944
கல்லூரியின் இரண்டாவது அதிபரான இவர், மிகவும் கண்டிப்பானவராய் இருந்தார். மாணவர்களின் ஒழுக்கத்திலும், வெளித்தோற்றத்திலும் சிறப்பாயிருக்கவேண்டும் என்று கண்டிப்பாயிருந்தார்.

செல்வி முத்து ஆசையா (திருமதி முத்து சோமையா) 1944-1945
கல்லூரியின் மூன்றாவது அதிபரான இவர் இந்தியாவிலிருந்து வருவிக்கப்பட்டு நியமிக்கப்பட்டார். தரம் 8 வரையிருந்த வகுப்புக்களை இவர் S.S.C வரை உயர்த்தினார். இதனால் வகுப்பறைகள் போதாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாய் புதிய கட்டடம் அமைக்க வேண்டி இவர் அதற்கான ஆயத்தங்களையும் செய்திருந்தார்.

திருமதி ஜெம்மாராணி சிற்றம்பலம் 1945-1946
மிகச் சிறு காலமே அதிபராயிருந்த இவர் ஆங்கில இலக்கிய வகுப்புக்களை பாடசாலையில் ஆரம்பித்தவராவார்.

திருமதி கிளாரா மொட்வானி 1946-1948
கல்லூரியின் ஐந்தாவது அதிபரான இவர் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வந்தவர். இவர் மேற்கில் கல்விகற்றிருந்தாலும் கீழைத்தேய பழக்க வழக்கங்களிலும் மதங்களிலும் மிக்க ஈடுபாடு கொண்டவராயிருந்தார். கீழைத்தேயர் போலவே ஆடை அணியும் வழக்கமும் கொண்டவர். தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் சிறப்பாக கற்பிப்படுவதை இவர் உறுதிசெய்ததொடு, உரையாடல் ஆங்கிலம், எழுதும் ஆங்கிலம் இரண்டினதும் கற்பித்தலில் கூடிய கவனம் செலுத்தினார்.

திருமதி சரோஜினி ராவ் 1948-1954
கல்லூரியின் ஆறாவது அதிபரான இவர் இந்தியாவிலிருந்து வந்தவர். மிக மிக கண்டிப்பான இவர் பாடசாலையின் தரத்தை உயர்த்திச் சென்றார். தமிழ், ஆங்கிலம், விஞ்ஞானம் மற்றும் கலைத்துறை பாடங்களின் கற்பித்தலில் மிகவும் கவனம் செலுத்தியதோடு, மாணவர்களுக்கு வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார். புதிய பல கட்டடங்கள் கட்டப்படுவதையும் பாடசாலை சுற்றுமதில் அமைக்கப்படுவதனையும் இவர் முன்னின்று கவனித்தார். இவர் காலத்தில் யாழ் இந்து மகளீர் கல்லூரி 1100 இற்கு அதிகமான மாணவர்ளோடு தரம் II பாடசாலையானது. பல்கலைக்கழக புகுமுக வகுப்புக்களும் இங்கு ஆரம்பமானது. கல்லூரி மகுடவாசகமும் இவரிடமிருந்தே வந்தது. இது பாடசாலையின் அந்தஸ்தை மேலும் அதிகரித்தது.

திருமதி விமலா ஆறுமுகம் 1954 – 1976
கல்லூரியின் ஏழாவது அதிபரான இவர் ஆசிரியராயிருந்து அதிபராய் உயர்ந்தவர். மிக நீண்டகாலம் கல்லூரியில் அதிபராயிருந்தவரும் இவரே. இவர் காலத்தில் கல்லூரி தரம் I பாடசாலையாயிருந்தது. இவர் காலத்தில் பெருமளவான மாணவர்கள் பெரதெனிய பல்கலைக்கழக அனுமதி பெற்றுச் சென்றனர். அறுபதுகளின் ஆரம்பத்தில் இந்துக்கல்லூரி அதிகார சபையிலிருந்து கல்வித் திணைக்கள ஆளுகையின்கீழ் பாடசாலை மாற்றம் பெற்றபோது அம்மாற்றத்தை சிறப்பாய் கொண்டு சென்றார். பல கலை நிகழ்ச்சிகளுடு பணம் திரட்டி பாடசாலையின் மேம்பாட்டுக்கு முன்னின்று உழைத்தார். இப்பணம் விசாலாட்சி சிவகுருநாதர் அவர்கள் பெயரில் ஒரு பிரார்த்தனை மண்டபத்தை உருவாக்க பயன்பட்டது.

பத்மாவதி இராமநாதன் 1976-1986
கல்லூரியின் எட்டாவது அதிபரான இவர் 1950இல் இளமையான ஆசிரியராக பாடசாலையில் இணைந்து, உப அதிபராகி பின் அதிபராய் உயர்ந்தவர். மிகமிக கண்டிப்பான அதிபராயிருந்தவர் இவர். பாடசாலையுடன் நீண்டகாலம் இருந்த இவர் பல துறைகளிலும் பாடசாலையை முன்னேற்றினார். நிருவாக கட்டடம், புதிய விஞ்ஞான ஆய்வுகூடங்கள் இரண்டு, பத்து வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம், தங்கும் விடுதியை சுற்றி சுற்று மதில் என்பன இவர்காலத்தில் கட்டப்பட்டவை. பிள்ளையார் ஆலயமும் புனரமைக்கப்பட்டு கும்பாபிடேகம் நடாத்தப்பெற்றது. தேசிய ரீதியில் கல்வி, நடனம், நாடகம். சங்கீதம் மற்றும் விளையாட்டு என்பவற்றில் பாடசாலையினை புகழ்பெறச்செய்தார் இவர். இவர் காலத்தை பொற்காலம் என்றழைப்பர் இவரிடம் கல்வி கற்றோர்.

திருமதி திவ்வியசிரோன்மணி நாகராசா 1986-1993
பாடசாலையில் ஆசிரியராய் 1977-1986 வரை இருந்த இவர் கல்லூரியின் ஒன்பதாவது அதிபராய் 1986 இல் நியமிக்கப்பட்டார். இவர் காலத்தே மாணவர் தொகை 2000 இனை தாண்டியது. இடம்பெயர்ந்த மாணவர்களுக்கு தங்குமிட வசதி பாடசலையில் வழங்கப்பட உதவினார். பரிசளிப்பு விழாவினை ஒழுங்கு செய்து செப்ரெம்பர் 10, 1991 இல் நாடாத்தினார். கல்லூரியன் பொன்விழாவினையும் சிறப்பாய் நடைபெற ஏற்பாடு செய்து பொன்விழா மண்டபத்திற்கு அடிக்கல்லிட்டார். இது கொழும்பிலும் கனடாவிலும் பழைய மாணவர் சங்கங்களை உருவாக காரணமாயமைந்தது.

திருமதி சரஸ்வதி ஜெயராஜா 1993-2006
யாழ் பல்கலைக்கழகம், பெரதெனிய பல்கலைக்கழகம், கல்வித்திணைக்களம் என்பவற்றில் பணிபுரிந்த பின் கல்லூரியின் பத்தாவது அதிபராய் இவர் நியமனம் பெற்றார். இவர் காலத்தில் பாடசாலை மேலும் வளர்ச்சி கண்டது. 1995 இடப்பெயர்வு கல்லூரியை பெரிதும் பாதித்திருந்தாலும், இவர் கல்லூரியை மீண்டும் நன்னிலைக்கு கொண்டுவந்தார். கோவில் ஆலயமும் புனரமைக்கப்பட்டு 1998இல் கும்பாபிடேகமும் நடைபெற்றது. இவர் அகில இலங்கை தமிழ் ஆசிரியர் சங்க உபதலைவராயுமிருந்தார்.

திருமதி பேரின்பநாதன்
1989இல் ஆசிரியராய் கல்லூரிக்க வந்த இவர் 2000ஆம் ஆண்டு பிரதி அதிபராகி 2006இல் அதிபராய் உயர்ந்தார். இவர் காலத்தில் கல்லூரி மேலும் வளர்ச்சி கண்டு பலதுறைகளிலும் பெயர் பெற்று வருகின்றது.