Menu

இணுவில் மத்திய கல்லூரி

கல வளமும் பெற்று பாராம்பரியதுடன் விளங்கும் இணுவையூரில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பாராம்பரியமான கல்வி முறையும் பண்பாடும் நிலைகுலைந்து காணப்பட்டதோடு அவர்களாலேயே புதிய கல்வி முறைக்கான ஒழுங்கமைப்புக்களும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தன. யாழ்ப்பாணத்திற்கு வந்த மிஷனரிமார் வட்டுகோட்டை, தெல்லிப்பளை, பண்டத்தரிப்பு, உடுவில் முதலிய கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு தமது கல்விப்பகுதியில் புதிய கல்வி முறைக்கான ஒழுங்கமைப்புக்களை ஆரம்பித்த வேளையில் இணுவில் கிராமத்திலும் ஒரு அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலையை ஆரம்பித்தனர்.

ஆரம்ப காலத்தில் மக்லயிட் வைத்தியசாலை வளவில் பாடசாலை நடாத்தபட்டு வந்தது. 1903ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் இப்பொழுதுள்ள இடத்தில் ஸ்ரான்லிடியூக் பாடசாலை என வழங்கப்பட்டு வந்தது. இப் பாடசாலைக்கும் மக்லயிட் வைத்தியசாலைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. காங்கேசன்துறை வீதிக்கு கிழக்கே அமைந்துள்ள ஒழுங்கையில் புளியமரம் சூழ்ந்த கூடத்தில் இப்பாடசாலை அமைந்திருந்தது. இதனால் “சீனிப் புளியடிப் பாடசாலை” என்ற பெயரும் இதற்கு உண்டு. இப்பாடசாலை ஓர் ஆரம்பப் பாடசாலையாக மட்டும் செயற்பட்டு வந்தது. ஆரம்ப காலம் முதல் பல அதிபர்களும் ஆசிரியர்களும் அரும்பணியாற்றி பாடசாலையை வளர்த்து வந்துள்ளனர்.

சைவத்தையும் தமிழையும் தமது இரு கண்களாகப் போற்றி வரும் இணுவை மக்கள் சைவச்சூழலில் தமது குழந்தைகளை கற்பிக்க வேண்டும் என எண்ணினார்கள். ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் அவர்களின் கல்விச்சிந்தனைகளும் சைவசித்தாந்தகல்வி மரபுகளும் இக்கிராமத்து மக்களின் வாழ்கையில் ஊடுருவி நின்றன. கல்வி வாயிலான இந்துசமய மறுமலர்ச்சியில் தாமும் பங்கேற்க வேண்டுமென இக்கிராமத்து பெரியோர்கள் சிந்தித்தனர். இவ்வாறு சிந்தித்ததன் பெறுபேறாக காங்கேசன்துறை நெடுஞ்சாலைக்கு மேற்கே அமைந்துள்ள “மன்னந்தோட்டம்” எனும் இடத்தில் வேப்பமரங்கள் சூழ்ந்த சோலையில் இணுவில் சைவமகஜனா வித்தியாசாலை ஆரம்பிக்கப்பட்டது. திரு. மு. அப்பகுட்டியும், திரு. க. மயில்வாகனப்பெரியாரும், திரு. க. பொன்னையா அறிஞரும் இப்பாடசாலையின் கால்கோளுக்கு வித்திட்டவர்கள் ஆவர். பாடசாலை 1930 ஆனியில் திரு. மு. அப்புகுட்டி அவர்களின் வீட்டிற்கு பின்புறத்தில் அவரால் அன்பளிப்பு செய்யப்பட்ட மூன்று பரப்பு நிலத்தில் உள்ள ஒரு கொட்டகையில் மூன்று ஆசிரியர்களுடனம் 26 மாணவர்களுடனும் ஆரம்பிக்கப்பட்டது. ஆவணியில் மாணவர் எண்ணிக்கை எழுபத்து மூன்று ஆனது. திரு. ஆ. செல்லப்பா அவர்கள் அதிபராக நியமிக்கப்பட்டார்.

சைவமகஜனா வித்தியாசாலையின் அதிபர்களாயிருந்து பணியாற்றிய திரு. ஆ. சின்னத்தம்பி, திரு. ஆ. செல்லப்பா, திரு.வ. நடராசா, பிரம்மஸ்ரீ. கா. வைத்தியநாதசர்மா, திரு. க. இரத்தினம், திரு.ச. சிவசுப்பிரமணியம், திரு. பேரம்பலம், திரு. செ. சோதிப்பெருமாள், சைவப்புலவர் மு. திருஞானசம்பந்தபிள்ளை, திரு. து. எங்கரசு ஆகியோர் கல்லூரிக்கு ஆற்றிய சேவை அளப்பரியது.

1960ம் ஆண்டு பாடசாலை அரசபாடசாலையானது. திரு.அ. பொன்னம்பலம், திரு.க. குருசாமி ஆகியோரும் தமது நிலங்களை பாடசாலைக்கு உரித்தாக்கினர். அத்துடன் இராசையா குகவரதன், சின்னத்துரை, பாலச்சந்திரன் பெண் வாசுகி, இராசநாயகம் சற்குணநாதன் பெண் பாமதி, அப்பையா செல்வநாயகம் பெண் அன்னலட்சுமி ஆகியோர் 21 பரப்பு காணியை கல்லூரியின் விளையட்டுமைதனத்திற்காக நன்கொடையாக வழங்கி உதவினர். 1979ம் ஆண்டு க.பொ.த உயர்தர கலை, வர்த்தக வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

1992 ஆம் ஆண்டு இணுவில் சைவமகஜனா வித்தியாசாலையுடன் இணுவில் அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை இணைக்கப்பட்டு, இணுவில் மத்திய கல்லூரியாகியது.

இன்று தரம் 5, க.பொ.த சாதாரணதரம், உயர்தரம் ஆகிய பரீட்சைகளில் மாணவர்களின் சாதனைகள் முன்னேற்றம் அடைந்து வருவதுடன் 10 ற்கு மேற்பட்ட மாணவர்கள் வருடாந்தம் பல்கலைகழகம், தேசியகல்வியியற்கல்லூரி, நுண்கலைப்பீடம் என்பவற்றிற்கு தெரிவுசெய்யப்பட்டு வருகின்றனர். பல்வேறு துறைகளிலும் மாணவர்கள் மாகாண, தேசிய மட்டம் வரை சாதனைகளை நிலைநாட்டியும் வருகின்றனர்.