Menu

இணுவில் இந்துக் கல்லூரி

வரலாறு

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பெற்ற பழமையான சைவத்தமிழ் பாடசாலைகளில் ஒன்று இதுவாகும். ஆறுமுக நாவலர் அவர்கள் தாபித்த வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலைக்கு அடுத்ததாய் நாவலரவர்களின் வழிகாட்டலில் முருகேசையர் வெங்கடாசல ஐயர் என்பார் 1864ம் வருடம் ஆவணி மாதம் இணுவில் மண்ணில் பாடசாலை ஒன்றினை வைரவநாதர் சுப்பையர் என்ற தன் உறவினரின் காணியில் தாபித்து நடாத்தத் தொடங்கினார். தாபித்து ஆறு ஆண்டுகளுக்குள்ளேயே பத்து ஆசிரியர்கள் கற்பிக்கும் வித்தியாசாலையாக உருவெடுத்தது இப்பாடசாலை. ஆறுமுக நாவலர் அவர்களே இப்பாடசாலைக்கு இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை எனப் பெயரிட்டார். 1870ம் வருடம் இப்பாடசாலை சிரேஸ்ட பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு அரச நன்கொடை பெறும் பாடசாலையாகவும் மாறியது.

1877 வரை முகாமையாளாரக செயற்பட்ட வெங்கடாசல ஐயர் தலயாத்திரை செல்லவும் அம்பிகைபாகர் என்பார் பாடசாலை முகாமையாளர் பதவியிலமர்ந்து பாடசாலையை செவ்வனே நடாத்தி வந்தார். அவரின் பின் 1918இல் இளையதம்பி என்பாரும் 1936 இல் கந்தையா என்பாரும் முகாமையாளர் ஆனார்கள்.

1941ல் பாடசாலையினை யாழ்ப்பாணம் சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது. பாடசாலைக்கென 18 பரப்பு காணி வாங்கப்பட்டதோடு முகாமையாளராக எஸ். அட்சலிங்கம் என்பாரும் தலைமையாசிரியராய் நீர்வேலிப் பண்டிதர் தம்பையாவும் நியமிக்கப்பட்டனர். இக்காலத்தே பாடசாலை கற்கட்டடத்தால் ஆகி புதுப்பொலிவு பெற்று வளர்ந்து வந்தது. 1941 இலிருந்து 1962 வரையான சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் இப்பாடசாலை மிகப்பெரும் செழிப்பினை பெற்றது. சைவ வித்தியா விருத்திச் சங்கம் மிகுந்த தகமையுள்ள குப்பிளான் இராமலிங்கம், இணுவில் கனகசுந்தரம், நீர்வேலி சின்னத்துரை, திருநெல்வேலி கனகரத்தினம், புங்குடுதீவு நல்லதம்பி, இணுவில் திருமதி ஆயிலியம், வண்ணார்பண்ணை அரியநாயகம், இணுவில் பண்டிதர் இராசலிங்கம், சுதுமலை திருமதி ஆறுமுகராசா போன்றோரை கல்லூரி முதல்வர்களாய் நியமித்து பாடசாலை சிறப்பாய் நடைபெற ஒழுங்கு செய்தார்கள். பாடசாலைக்கென மேலும் இருபத்தெட்டரை பரப்பு காணி வாங்கப்பட்டதோடு, விஞ்ஞானபீடம் தொழிற்கூடம் என்பன வும் அமைக்கப்பட்டன. பாடசாலையில் மாணவர் தொகையும் மிகவேகமாக அதிகரித்தது இக்காலத்திலேதான்.

1978ம் வருடம் இப்பாடசாலை மகா வித்தியாலயமாக தரமுயர்த்தப்பெற்று நடாத்தப்பெற்று வந்தது. 1993-04-05 இலிருந்து இணுவில் இந்துக் கல்லூரி எனச் சிறப்புப் பெற்றிருக்கின்றது. அன்றிலிருந்து இன்றுவரை ஆண்டுகள் தோறும் புதுப்பொலிவு பெற்று இணுவில் மைந்தர்களின் கல்விப்பசியாற்றி வருகின்றது இணுவில் இந்துக் கல்லூரி.

பாடசாலைக் கீதம்

மரகதத் தீவின் மணிநகர் இணுவில்
மலிகலைப் பள்ளி வாழியவே
சரவணன் கணபதி தளிர்களில் நடுவொளி
சரித்திரப் புகழ் இந்துக் கல்லூரி வாழி.

தமிழொடு சைவம் தழைத்தினி தோங்க
தகுந்த நற் கல்வி பரப்பிடவே
நமது முன்னவர்கள் நூறு பல்லாண்டின் முன்
நல் இணுவில் இந்துக் கல்லூரி வாழி.

புதுப்புதுத் துறைகள் புதுமைகள் வளங்கள்
புகுவன பொருந்தி வாழ்வு நல்கி வரும்
மதித்திறன் ஒழுக்கங்கள் மனவளம் பொழிந்திட
வழி புரி நம் இந்துக் கல்லூரி வாழி.

இணுவிலை யன்றி இயைந்த பல்லூர்கள்
இருப்பவர் தாமும் இணைந்துடன் அணுகி
பணிவுடன் அறிவினைப் பகிர்ந்திடவென
பணிபுரி நம் இந்துக் கல்லூரி வாழி.பாடசாலைக் கீதம்

மரகதத் தீவின் மணிநகர் இணுவில்
மலிகலைப் பள்ளி வாழியவே
சரவணன் கணபதி தளிர்களில் நடுவொளி
சரித்திரப் புகழ் இந்துக் கல்லூரி வாழி.

தமிழொடு சைவம் தழைத்தினி தோங்க
தகுந்த நற் கல்வி பரப்பிடவே
நமது முன்னவர்கள் நூறு பல்லாண்டின் முன்
நல் இணுவில் இந்துக் கல்லூரி வாழி.

புதுப்புதுத் துறைகள் புதுமைகள் வளங்கள்
புகுவன பொருந்தி வாழ்வு நல்கி வரும்
மதித்திறன் ஒழுக்கங்கள் மனவளம் பொழிந்திட
வழி புரி நம் இந்துக் கல்லூரி வாழி.

இணுவிலை யன்றி இயைந்த பல்லூர்கள்
இருப்பவர் தாமும் இணைந்துடன் அணுகி
பணிவுடன் அறிவினைப் பகிர்ந்திடவென
பணிபுரி நம் இந்துக் கல்லூரி வாழி.