யா / அல்லாரை அரசினர் தமிழ் வித்தியாலயம் – மீசாலை

யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி உதவி அரசாங்க அதிபர் பிரிவில் உள்ள கிராமங்களில் அல்லாரை ஒரு சிறிய கிராமமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வளர்ச்சியடைந்து வந்தது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு, வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய கிராமங்களுக்குப் பொதுவாகக் கச்சாய்க் கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கி வந்தது. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் எவ்வித வசதியும் அங்கே இருக்கவில்லை.

எனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடையவேண்டுமென்ற உயர்ந்தநோக்குடன் அல்லரைக் கிராமத்தினைச் சேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு பெரு முயற்சி எடுத்தார். எஸ் .கே. செல்லையா அவர்கள் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராயிருந்ததுடன் அல்லாரையில் அனைவராலும் போற்றப்படுகின்ற ஊர்ப் பெருமகனாகவும் திகழ்ந்தார். இவர் 1930 ஆம் ஆண்டு பாடசாலைக் கட்டடத்தினை அமைப்பதற்காக தனது காணி ஒன்றை நன்கொடையாகக் கொடுத்து கட்டடத்திற்கு அத்திவாரமிட்டார். முதலில் அதிபர் விடுதி ஒன்றும் பாடசாலை வகுப்பறைகளுக்காகக் கொட்டிலும் அமைக்கப்பட்டது.

அமரர் திரு. தம்பிமுத்து பாடசாலையின் முதல் அதிபராக நியமனத்தை ஏற்றுக்கொண்டார். ஆரம்பத்தில் 30 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையில் திரு. தம்பிமுத்து ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர் அதிபர் விடுதியில் தங்கியிருந்தார். இவரின் காலத்திலேயே பாடசாலை வளவின் கிழக்கு பக்கத்தில் ஒரு அறையுடன் 40 அடி நீளமுள்ள கட்டடம் அமைக்கப்பட்டது. 1932 ஆம் ஆண்டில் புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்தப்பட்டன.

1936 ஆம் ஆண்டில் திரு. நல்லதம்பி என்பார் பாடசாலையில் அதிபர் பொறுப்பை ஏற்றார். இவர் காலத்தில் மாணவர்களுக்கு பாடசாலையில் மதியபோசனம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே அதற்கேற்றவாறாய் 50 அடிக் கட்டடம் ஒன்று பழைய கட்டடத்துடன் இணைத்து “ட” வடிவில் அமைக்கப்பட்டது. அத்துடன் கரவெட்டியைச் சேர்ந்த திரு. கந்தப்பு என்னும் உதவி ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டார்.

1938 ஆம் ஆண்டில் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இதே காலத்தில் தரம் 5 பொதுப்பரீட்சையும் நடைபெற்றது. தொடர்ந்த வருடங்களில் தரம் 7 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் பாடசாலைக்கென்று கிணறொன்றும் கட்டப்பட்டது.

நல்லதம்பி அதிபரின் பின்வந்த திரு. குமாரவேலு அதிபரின் காலத்தில் மாணவர் தொகை மேலும் அதிகரித்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்ககையும் அதிகரித்தது. அவரின்பின் மிருசுவில் கிராமத்தினைச் சேர்ந்த திரு. சுவாமிப்பிள்ளை என்பவர் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டது.

இவரை தொடர்ந்து ஆறாவது அதிபராக எஸ்.பி. சுவாமிநாதன் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் மீசாலையைச் சேர்ந்த ஆசிரியர்களும் பாடசாலையில் கடமையாற்றினார்கள். திருமதி. பூரணம் பஞ்சாச்சரம் ஆசிரியர் இவர்களுள் குறிப்பிடத்தக்கவர். இவரின் காலத்தில் “ட” வடிவமாக இருந்த கட்டடம் T வடிவமாக 50 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டது.

திரு சுப்பிரமணியம், திரு தம்பிராசா மற்றும் திரு தங்கராசா என்போர் சுவாமிநாதனின் பின்வந்த அதிபர்களாவர்.

பத்தாவது அதிபராக சாவகச்சேரி வடக்கைச் சேர்ந்த திரு. வ. சுப்பிரமணியம் கடமையாற்றினார். இவரின் காலத்தில் அல்லாரையைச் சேர்ந்த நவசிவாயம் வல்லிபுரம் இடமாற்றம் பெற்று உதவி ஆசிரியராகக் கடமையாற்றினார். இவர்களின் காலத்தில் பாடசாலை பல துறைகளில் முன்னேறியது. முதல் முதல் இல்ல மெய்வலுநர்பொட்டி நடைபெற்றது. அத்துடன் மாணவர்கள் முதன்முதலாய் ஒரு கல்விச் சுற்றுலாவிற்கு செல்லவும் வாய்ப்புக் கிட்டியது.

இவரின் பின்னர் திரு. மார்க்கண்டு, திரு. பேரம்பலம் மற்றும் திரு. அருளானந்தம் என்போர் பாடசாலையில் கடமையாற்றி சேவை செய்தனர். இவர்களினைத் தொடர்ந்து பதின்நான்காவது அதிபராக கச்சாயை சேர்ந்த செல்வி. திரவியநாயகம் வேலுப்பிள்ளை பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை சேவையாற்றினார்கள். இவரை தொடர்ந்து திரு. சே. சிவபாதசுந்தரம் பாடசாலை இடம்பெயர்ந்திருந்த காலத்தில் அதிபர் பொறுப்பையேற்று நடத்தினார். அவரின் பின் திருமதி. சி. ஜெயக்குமார் அதிபராய் சேவையாற்றினார்.

2010ம் வருடம் ஜனவரி முதல் திருமதி. க. யோகநாதன் பாடசாலை அதிபர் பொறுப்பையேற்று நடாத்தி வருகிறார்.

பாடசாலைக்கீதம்
இராகம்: ஹம்சத்வனி
தாளம் :ஆதி தாளம்

பல்லவி

அல்லாரை அரசினர் வித்தியாலயம் பாரீர்
எல்லோரும் இதனை முன்னேரிற்ற வாரீர்

அனுபல்லவி

செல்லையா ஆசிரியர் உவந்தளித்திட்ட
நல்லதோர் காணியில் அமைந்த ஆலயமே

சரணம்

திருமகள் கலைமகள் மலைமகள் அருளால்
பொருள் வளம் கல்வி வீரம் பெற்று
அருள்வழி நின்று அறந்தனைக் காத்து
வரும் மாணவர்கள் மாண்புடன் வாழ்க

மாணவர் கல்வி அதில் முன்னேற்றம்
காணத் துடிக்கும் ஆசிரியர்கள்
பேணும் நலன்கள் யாவையும் பெற்று
வீணற வாழ்க வாழ்க எந்நாளுமே