Menu

அளவெட்டி அருணோதயக் கல்லூரி

வரலாறு

arunasala-udaiyarளவெட்டி மண்ணில் அமைந்திருந்து கல்விப்பசி ஆற்றும் அருணோதயக் கல்லூரி ஒரு கிடுகுக்கொட்டிலிலே 1894ம் ஆண்டு திரு. நாகமுத்து அருணாசலவுடையாரால் ஆரம்பிக்கப்பட்டது. நூறாண்டுகளைத் தாண்டி பயணிக்கும் இக்கல்லூரியின் வரலாறு ஆலமரமென இன்று பெருவுருவெடுத்து நிற்கின்றது.

இக்கல்லூரியின் ஆரம்பகால முதன்மையாசிரியராயிருந்தவர், திரு. மு. செல்லப்பாச்சட்டம்பியார் ஆவார். அவருக்கு உதவியாசிரியர் பரமுச்சட்டம்பியார் ஆவார். 1898 அளவில் பதவியேற்ற சின்னத்தம்பிச்செட்டியாரின் முயற்சியினால் இது ஆண்கள் ஆங்கில ஆரம்பப்பாடசாலையாக மாற்றமடைந்தது. 1904 இல் அரசினர் உதவி நன்கொடை பெறும் பாடசாலையாகியது. திரு. க. சோமசுந்தரம் தலைமைப்பதவியேற்றதிலிருந்து இது ஆரம்பப்பாடசாலை என்ற நிலையிலிருந்து எட்டாம் தரம் வரையுள்ள பாடசாலையாக மாற்றம் கண்டது. இவருக்குப் பின்னர் 1929ம் ஆண்டு கடமையேற்ற திரு. த. சின்னத்தம்பி அவர்களின் காலத்தில் இப்பாடசாலை ஆண்கள் பாடசாலை என்ற நிலையிலிருந்து மாறி கலவன் பாடசாலையாகி துரித வளர்ச்சி பெற்றது. இவர் கல்வியில் மட்டுமன்றி மாணாக்கர் ஒழுக்கத்திலும் கண்ணும் கருத்துமாக இருந்தார். இவர் ஓய்வுபெற்ற பின் திரு. ப. நவரத்தினம் என்பார் ஒரு வருடம் தலைமையாசிரியாராக விருந்தார். இவரின் பின் திரு. எஸ். கிருஸ்ணபிள்ளை என்ற தமிழக அறிஞர் தலைமையாசிரியரானார். இவரது காலத்தில் அருணோதயக்கல்லூரியின் பொன்விழாக் கொண்டாடப்பெற்றது.

திரு. கிருஸ்ணபிள்ளையைத் தொடர்ந்து பாடசாலைத்தாபகரின் பேரனும் குறிப்பிட்டகாலமொன்றில் இப்பாடசாலை ஆசிரியருமாகவிருந்த திரு.அ.சுப்பையா அவர்களின் புதல்வராகிய திரு.சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார். இவரது காலத்தில்(1949) சிரேட்ட தராதரப்பத்திர வகுப்பு (S.S.C) ஆரம்பிக்கப்பட்டது. இவரது காலத்தில் பாடசாலை பலவழிகளாலும் முன்னேற்றமடைந்தது. பாடசாலை என்ற நிலை மாறி கல்லூரியென்ற நிலையேற்பட்டது. அருணோதய உடையார் கல்லூரி என்ற தொனிப்பொருள் அமைய அருணோதயக்கல்லூரி என்ற பெயர் 1951இல் சூட்டப்பட்டது. விஞ்ஞானக்கல்வித்தேவையைப் பூர்த்தி செய்ய முதல்முறையாக இந்தியாவிலிருந்து விஞ்ஞானப்பட்டதாரி ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டு ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இல்லங்களுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகள் முதன்முதலாக மிகச்சிறப்பாக நடத்தப்பட்டன. 1952 இல் அதிபர் அறைக்காரியாலயம், விஞ்ஞான ஆய்வுகூடங்கள் அமைக்கப்பட்டன.

விளையாட்டுத்துறையிலும் அருணோதயக்கல்லூரி பல சாதனைகளைப் படைத்தது. விளையாட்டுத்துறைப் பொறுப்பாசிரியராகவிருந்த திரு.க.நாகமணி அவர்கள் காலத்திலும் திரு.ஏ.தம்பித்துரை அவர்கள் காலத்திலும் பல சாதனைகளைப் படைத்தது. 1960இல் கல்லூரி உதைபந்தாட்டக்குழு முதல்முறையாக மாவட்டமட்டத்தில் பங்குபற்றி மாவட்டச்சம்பியனானது.

1961 இல் அரசாங்கப்பாடசாலையாகக் கையளிக்கப்பட்டது.இக்கல்லூரியின் வளர்ச்சிக்கு வித்திட்ட திரு.சு.சிவசுப்பிரமணியம் அவர்கள் பதவி உயர்வுபெற்றுச் செல்ல, திரு.சிதம்பரப்பிள்ளை என்பவர் அதிபரானார். இவரது காலம் கல்லூரியை மேலும்வளர்ச்சிபெறச் செய்தது. 1969 இல் கல்லூரியின் 75 வது ஆண்டுவிழாக் கொண்டாடப்பட்டது. இவரைத் தொடர்ந்து திரு. ஆனந்தக்குமாரசாமி அவர்கள்கல்லூரித் தலைமைப்பதவியை ஏற்றுக்கொண்டார். அவர்களைத் தொடர்ந்து திரு.வி.கந்தவனம் என்பார் அதிபரானார். இவரது செயற்றிறன் காரணமாக கல்லூரியின் ஆரம்பப் பாடசாலைக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இவரைத் தொடர்ந்து திரு. மு. சிவராசரத்தினம் அவர்கள் அதிபரானார். இவருக்குப்பின் திரு. வி. சிவசுப்பிரமணியம் அவர்கள் அதிபரானார். இவர் சின்னப்புத்தம்பதியினரின் புலமைப்பரிசில் திட்டத்தைத்திறம்பட நடத்தினார். இப்புலமைப்பரிசில் திட்டமானது வங்கியில் வைப்புச்செய்யப்பட்ட ஒரு தொகைப்பணத்தின் வட்டியைக்கொண்டு வருடந்தோறும் பணப்பரிசு வழங்குதலுடன் பரிசளிப்பினை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதனைக்குறிக்கோளாகக் கொண்டது.

அருணோதயக்கல்லூரியின் பதில் அதிபர்களாகவிருந்து கடமையாற்றியோரில் திரு.அ.விஸ்வநாதன், திரு.மு.கதிர்காமசேகரம், திரு.க.சுப்பிரமணியம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்களாவர். இவர்களைத் தொடர்ந்து திரு.எஸ்.சிவசுப்பிரமணியம், திரு.கனகசபை, திரு.மு.செல்லையா ஆகியோரும் சிறப்பாகக்கடமையாற்றினர்.

கல்லூரியின் பழையமாணவரான திரு.ந.சிவபாதம் அவர்கள் 1980இல் அதிபராக பதவியேற்றார். இக்காலத்தில் உடற்பயிற்சியாசிரியர் திரு.எ.தம்பித்துரை அவர்களின் பயிற்சியில் சென்ற உடற்பயிற்சிக்குழு தேசியரீதியில் தங்கப்பதக்கத்தினை அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் பெற்றுச்சாதனை படைத்தது.

1992 ஆம் ஆண்டில் நாட்டின் போர்ச்சூழல் காரணமாகக்கல்லூரி இடம்பெயர்ந்து மருதனார்மடத்திலுள்ள இராமநாதன் கல்லூரியில் இயங்கியது. 1993 இல் திரு.சிவபாதம் அவர்கள் பதவியுயர்வுபெற்றுச்செல்ல திரு.அ.சிறிக்குமரன் அவர்கள் பதவியேற்றார். இவரைத் தொடர்ந்து திரு.இ.மகேந்திரராஜா அவர்கள் பதவியேற்றார். அளவையில் சிதைந்து போன கல்லூரியின் கட்டமைப்பினை மீளமைத்து கல்லூரியை மீண்டும் அளவெட்டியில் இயங்கவைத்த பெருமை இவரைச்சாரும். 2007 இல் திரு கேதீஸ்வரன் அவர்கள் அதிபரானார்.

விளையாட்டுத்துறையிலும் இக்கல்லூரி பல சாதனைகளை செய்துள்ளது. 2009 வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் 19 முதலிடங்களைப் பெற்றுள்ளது. எல்லாவற்றிற்கும் சிகரம்வைத்தாற் போல் 2007 இல் மாணவன் செ.நவநீதன் அகில இலங்கைப் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் கோலூன்றிப்பாய்தலில் வெண்கலப்பதக்கம் பெற்றுச்சாதனை படைத்துள்ளான்.

கல்வித்துறையிலும் பரீட்சை பெறுபேறுகளிலும், அருணோதயக் கல்லூரி முன்னேற்றம் கண்டு வருகின்றது.

பாடசாலைக் கீதம்

கலைபயில் தரு சிறுவர் குழுமிக்
கலைவளர் பதி போற்று வோம். (கலை)

அளவை அருணோ தயக் கல்லூரி
மலைவிளக் கென நிலைநின் றோங்க
வளர் மதியமும் கதிரும் போல
வளர்ந்து கலைகள் பொலிந்து தேங்க (கலை)

ஆரியந் தமிழ் ஆத்ம ஞானம்
ஆங்கிலம் இசை கலை விஞ்ஞானம்
வீரியந் தரும் உடலின் பயிற்சி
விளங்கு மதனா லடைந்தோம் உயர்ச்சி (கலை)

பிறவி தொறுமே தொடருங்கல்விப்
பேற்றை எமக்கு அளித்த அன்னையுன்
திறனை நினைந்து தினமு முனது
சேவை செய்குவாம் மனதிலுவந்து (கலை)

அருணா சலவேள் எடுத்த வொன்று
அசையா அசல மாக நின்று
அருணன் வாழும் ஊழி நின்று
வாழ்க வாழ்க வாழ்க வென்று (கலை)

அருணாசல உடையார் அவர்களின் உருவப்படத்தை தியாகராசா இலம்போதரன் அவர்கள் அனுப்பிவைத்துதவினார்கள் – 01-01-2013